OUR CLIENTS
கஜானாவை தூர்வாரி வருகிறது எடப்பாடி பழனிசாமி அரசு : மு.க.ஸ்டாலின் பேட்டி
கஜானாவை தூர்வாரி வருகிறது எடப்பாடி பழனிசாமி அரசு : மு.க.ஸ்டாலின் பேட்டி Posted on 02-Nov-2017 கஜானாவை தூர்வாரி வருகிறது எடப்பாடி பழனிசாமி அரசு   : மு.க.ஸ்டாலின் பேட்டி

திருச்சி, நவ.2-
நீர் நிலைகளை தூர்வாராமல் எடப்பாடி பழனிசாமி அரசு கஜானாவை தூர்வாரி வருகிறது என திருச்சியில் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தொகுதி குண்டூர் ஊராட்சியில் உள்ள சந்தூரணி குளம் சுமார் 2 ஏக்கர் பரப்பளவு கொண்டது. 21 லட்சத்து 80 ஆயிரம் கனஅடி தண்ணீர் கொள்ளளவு கொண்ட இந்த குளம் திருவெறும்பூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.5 லட்சம் செலவில் தூர்வாரப்பட்டது. இந்த குளத்தை தி.மு.க. செயல் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று பார்வையிட்டார். 

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-  தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய குளங்கள் மற்றும் நீர்நிலைகளை தூர்வார வேண்டும். அப்போதுதான் வருங்காலங்களில் அதன் மூலம் மழை நீரை சேமித்து வைக்கமுடியும். ஆனால் தற்போது தமிழகத்தில் ஆட்சி நடத்திக்கொண்டிருக்கும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான குதிரை பேர ஆட்சி கவலைப்படவில்லை. ஆனால் தி.மு.க. குளங்களை தூர்வாரும் பணியை மிகச்சிறப்பாக முன்னின்று செய்து வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதிகளில் அந்த பணி முடிந்தவரையில் எந்தெந்த ஏரி, குளங்களை தூர்வார முடியுமோ அதனை தூர் வாரிட வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் எனது வேண்டுகோளை ஏற்று தமிழகம் முழுவதும் மிகச்சிறப்பாக நிறைவேற்றப்பட்டு வருகிறது.

நடந்து முடிந்த சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் கேள்வி எழுப்பினேன். அப்போது எடப்பாடி பழனிசாமி நாங்கள் அரசு சார்பில் ரூ.400 கோடி குடிமராமத்து பணிக்காக நிதி ஒதுக்கி உள்ளதாக கூறினார். நேற்று  முன்தினம் கூட எடப்பாடி பழனிசாமி சேலத்திலே ஒரு மிகப்பெரிய நாடகத்தை நடத்தி உள்ளார். சேலத்திலே மிகப்பெரிய அளவில் மழை பெய்யவில்லை.  இருந்தாலும் அங்கு கலெக்டர் மற்றும் மாவட்டத்தின் அதிகாரிகளை எல்லாம் அழைத்து உட்கார வைத்து ஒரு ஆய்வுக்கூட்டத்தை நடத்தி உள்ளார். அந்த கூட்டத்திலே ஏரி, குளங்கள் எல்லாம் நிரம்பி இருக்கிறது, நீர் நிலைகள் எல்லாம் தூர்வாரப்பட்டு, பாதுகாக்கப்பட்டு இருக்கிறது என்று பட்டவர்த்தமாக, அபாண்டமாக, தைரியமாக ஒரு பொய்யை எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறார்.  அது உண்மையானால் குடிமராமத்து பணிக்காக ஒதுக்கப்பட்ட ரூ.400 கோடி நிதி மூலம் எந்தெந்த மாவட்டத்திலே, ஊரிலே, ஊராட்சியிலே, பஞ்சாயத்திலே நிறைவேற்றப்பட்டுள்ளது என்று பட்டவர்த்தமாக வெள்ளை அறிக்கையாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட தயாரா? என்று தமிழக மக்கள் சார்பிலும், எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையிலும் கேட்கிறேன்.

ஆகவே தூர் வாருவதற்காக ஒதுக்கப்பட்ட அந்த நிதியை அவர்கள் பேரம் பேசி கமி‌ஷன், லஞ்சம் பெற்றுக்கொண்டு வரும் நிலைதான் உள்ளது. ஆகவே ஏரி, குளங்களை தூர்வாரும் பணியை விட்டுவிட்டு அரசின் கஜானாவை தூர்வாரும் பணியில்தான் இந்த குதிரை பேர ஆட்சி ஈடுபட்டுக் கொண்டு இருக்கிறது. குட்கா ஊழல் செய்தவர்கள் இப்போது குடிமராமத்து பணியிலும் ஊழல் செய்ய தொடங்கியுள்ளார்கள்.  ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கு தடை கேட்டு நாங்கள் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யவில்லை. அத்தொகுதி வாக்காளர் பட்டியலில் உள்ள குளறுபடிகளை சரி செய்ய வேண்டும். ரூ.89 கோடி பண பரிவர்த்தனை செய்யப்பட்டதன் காரணமாகத்தான் ஆர்.கே.இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இந்த முறைகேட்டை வருமான வரித்துறை அதிகாரிகளே நேரடியாக சோதனை நடத்தி கண்டுபிடித்தனர்.  இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கான பரிகாரம் கேட்டுத்தான் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளோம். ஆர்.கே.நகரில் எப்போது தேர்தல் அறிவித்தாலும் தி.மு.க. போட்டியிட தயாராக உள்ளது. 

இப்போதுதான் மழை பெய்ய தொடங்கியுள்ளது. அதற்குள் சென்னையில் பல இடங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதற்குத்தான் முன்கூட்டியே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினேன். ஆனால் என்னை பார்த்து விமர்சனம் செய்தார்களே தவிர எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அமைச்சர் செல்லூர் ராஜூ தெர்மாக்கோலால் வெள்ளத்தை தடுப்பாரோ? என்று எண்ண தோன்றுகிறது.  இவ்வாறு அவர் கூறினார். 

Label