OUR CLIENTS
18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு உட்பட 5 வழக்குகள் தலைமை நீதிபதி அமர்வுக்கு பரிந்துரை
18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு உட்பட 5 வழக்குகள் தலைமை நீதிபதி அமர்வுக்கு பரிந்துரை Posted on 03-Nov-2017 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு உட்பட 5 வழக்குகள்  தலைமை நீதிபதி அமர்வுக்கு பரிந்துரை

சென்னை, நவ.3-
தமிழக 18 எம்.எல்.ஏக்களின் தகுதி நீக்க வழக்கு உள்ளிட்ட சட்டமன்றம் சம்பந்தப்பட்ட 5 வழக்குகளை தலைமை நீதிபதி அமர்வுக்கு நீதிபதி ரவிச்சந்திரபாபு பரிந்துரை செய்துள்ளார்.

முதல்வருக்கு எதிராக 19 எம்.எல்.ஏக்கள் ஆளுநரிடம் கடிதம் அளித்த விவகாரத்தில் ஒருவர் அணி தாவ, 18 பேர் மீது கொறடா பரிந்துரையின் பேரில் சபாநாயகர் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.  இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தகுதி நீக்க உத்தரவை நிறுத்தி வைத்து, வழக்கு விசாரணை முடியும் வரை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக்கூடாது என நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.  ஆகஸ்ட் மாதம் குட்கா பான் ஆகிய போதை வஸ்துகளை சட்டமன்றத்திற்குள் கொண்டுவந்ததாக மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட 21 திமுக உறுப்பினர்களுக்கு உரிமைக்குழு நோட்டீஸ் அனுப்பி இருந்தது. இதன் மீது தடை கேட்டு திமுக தொடர்ந்த வழக்கு விசாரணையில் உள்ளது.  ஓ.பி.எஸ். உள்ளிட்ட 12 எம்.எல்.ஏ.க்கள் பிப்ரவரி மாதம் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின் போது அரசுக்கு எதிராக வாக்களித்ததால் அவர்களைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என திமுக கொறடா சக்ரபாணி வழக்கு தொடர்ந்தார்.  ஓ.பி.எஸ்., மாஃபா பாண்டியராஜன் ஆகியோர் அமைச்சர் பதவியில் நீடிப்பதை எதிர்த்து திமுக முன்னாள் அமைச்சர் தொடர்ந்த வழக்கு விசாரணையில் உள்ளது.  எம்எல்ஏ தகுதி நீக்க வழக்குகள் சம்பந்தமாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதால் வழக்கை உயர் நீதிமன்றம் விசாரிக்கக் கூடாது என செம்மலை தொடர்ந்த வழக்கும் விசாரணையில் உள்ளது.  

பல்வேறு காலகட்டங்களில் விசாரணைக்கு வந்த வழக்குகள் ஒரே தன்மையுடன் இருப்பதால் மொத்தமாக நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக நீதிபதி ரவிச்சந்திர பாபு தெரிவித்திருந்தார். வழக்குகள் அனைத்தும் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இருப்பதால் விசாரணைக்கு எடுக்கக்கூடாது என்று வாதிட்டார்.

தினகரன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி வழக்கை வேண்டுமென்றே தாமதம் செய்வதற்காக இது போன்று சொல்வதை ஏற்க முடியாது என்று வாதிட்டார்.  நீதிபதி ரவிச்சந்திர பாபு இந்த வழக்கின் முக்கியத்துவம் கருதி வழக்குகள் அனைத்தையும் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்ற பரிந்துரைப்பதாக தெரிவித்தார்.  அதே சமயம், இந்த வழக்குகள் தொடர்பாக ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட இடைக்கால ஆணைகள் எல்லாம் தொடர்ந்து அமல்செய்யப்பட வேண்டும் என்றும் நீதிபதி ரவிச்சந்திர பாபு உத்தரவிட்டார். 

இதன்படி, எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ததைத்தொடர்ந்து அவர்களது தொகுதிகளில் தேர்தல் நடத்தப்படக்கூடாது. சட்டப்பேரவையில் அரசுக்கு பெரும்பான்மை பலம் இருப்பதை உறுதி செய்ய வாக்கெடுப்பு நடத்தக்கூடாது என்று பிறப்பிக்கப்பட்ட ஆணைகள் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  அரசியல் அமைப்பின் பல அம்சங்களை ஆராய வேண்டி இருப்பதாலும், ஆளுநர், சபாநாயகர் அதிகாரத்தில் எந்த அளவுக்கு தலையிட முடியும் என்கிற பிரச்னையும் உள்ளதாலும், வழக்கின் முக்கியத்துவம் கருதி இதை தலைமை நீதிபதி அமர்வு விசாரணைக்கு எடுக்கும் என நம்புவதாக தெரிவித்தார்.

Label