OUR CLIENTS
அரசு பணிகள் கவனக் குறைவாக நடப்பதை எந்த விதத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாது : அமைச்சர் ஜெயக்குமார் துணிச்சல் பேச்சு
அரசு பணிகள் கவனக் குறைவாக நடப்பதை எந்த விதத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாது : அமைச்சர் ஜெயக்குமார் துணிச்சல் பேச்சு Posted on 03-Nov-2017 அரசு பணிகள் கவனக் குறைவாக நடப்பதை எந்த விதத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாது  : அமைச்சர் ஜெயக்குமார்  துணிச்சல் பேச்சு

சென்னை,  நவ.3-
அரசு பணிகள் கவனக்குறைவாக நடைபெறுவதை எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

கொடுங்கையூரில் நேற்று முன்தினம் மழைநீரில் விளையாடிக்கொண்டிருந்த யுவஸ்ரீ, பாவனா என்ற இரண்டு சிறுமிகள் மின்சாரம் தாக்கிப் பலியானார்கள்.  சிறுமிகளின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக அமைச்சர் ஜெயக்குமார் நேற்று கொடுங்கையூர் வந்தார்.  சிறுமிகளின் உடலுக்கு மாலை வைத்து அஞ்சலி செலுத்திய அமைச்சர் ஜெயக்குமாரிடம், மழையால்  கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தெருக்களைப் பார்த்து உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று அந்தப் பகுதி மக்கள் கேட்டுக்கொண்டனர்.

கொடுங்கையூரில் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:  மின்கசிவு காரணமாக கொடுங்கையூரில் பள்ளி சிறுமிகள் 2 பேர் பலியான சம்பவம் வருத்தம் அளிக்கிறது. இச் சம்பவத்திற்கு  சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.  அரசு பணிகள் கவனக் குறைவாக நடைபெறுகிறது என்பதை எந்த விதத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாது. அதை யார் செய்தாலும் மன்னிக்க முடியாத குற்றமாகதான் கருத முடியும்.   இந்த துயர சம்பவம் ஏற்பட்டவுடன் முதல்வர் ஆறுதல் தெரிவித்து நிதி உதவி அளிக்க உத்தரவிட்டு உள்ளார். யார் கவனக் குறைவாக இருந்தாலும் அவர்களைத் தண்டிக்க அரசு தயாராக உள்ளது. அந்த அடிப்படையில் இப்போது அதிகாரிகள் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர். இதுபோன்ற நிகழ்வுகள் எதிர்காலத்தில் வராத அளவுக்கு இந்த சஸ்பெண்ட் நடவடிக்கை ஒரு பாடமாக அமையும்.

சென்னையில் மேலே செல்லும் மின் வயர்களை தரையில் பதிக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.  பெருமழை பெய்யும் போது தாழ்வான பகுதியில் தண்ணீர் தேங்குவது வழக்கம்.  வியாசர்பாடி, பெரம்பூர் பகுதிகள் மிகவும் தாழ்வான பகுதிகள். மழை பெய்தாலே இங்கு தண்ணீர் நிற்கும். ஆனால் அரசு எடுத்த நடவடிக்கை காரணமாக இப்போது பாருங்கள் தண்ணீர் வடிந்து விட்டது. எனவே அரசு பணிகள் வேகமாக நடைபெற்றுள்ளது என்பதை இதன் மூலம் கண்டறியலாம்.  இவ்வாறு, அமைச்சர் ஜெயக்குமார்  கூறினார்.

Label