முதல்வரிடம் நெகிழ்ந்த சசிகலா கணவர் நடராஜன் அதிமுகவில் பரபரப்பு பேச்சு Posted on 03-Nov-2017
சென்னை, நவ.3-
உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை முடிவடைந்த நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை போனில் தொடர்பு கொண்டு பேசிய சசிகலா கணவர் நடராஜன், நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்திருக்கிறார். சசிகலா கணவர் நடராஜனுக்கு கல்லீரல் மற்றும் சிறுநீரக உறுப்புகள் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. விபத்தில் மூளைச்சாவடைந்த கார்த்திக் என்ற இளைஞரின் உறுப்புகள்தான் நடராஜனுக்கு பொருத்தப்பட்டதாவும் கூறப்பட்டது.
இந்த உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கான ஏற்பாடுகளில் தமிழக அரசும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் முன்னுரிமை கொடுத்து செயல்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் நடராஜன் உடல்நிலை தேறியது. இதையடுத்து நேற்று முன்தினம் அவர் வீடு திரும்பினார்.
வீடு திரும்புவதற்கு முன்னர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை போனில் தொடர்பு கொண்டு நடராஜன் பேசியுள்ளார். அப்போது, நான் உயிருடன் இருப்பதற்கு நீங்கள்தான் காரணம்... இந்த நன்றியை மறக்கமாட்டேன் என நெகிழ்ச்சியுடன் கூறியிருக்கிறார். அதேபோல் முதல்வர் எடப்பாடியாரும், நீங்களும் சின்னம்மாவும்தான் என்னை இந்த பதவியில் உட்கார வைத்தீங்க... உங்களுக்கு உதவ ஒரு வாய்ப்பு கிடைத்ததில் எனக்கும் மகிழ்ச்சி. விரைவில் உங்களை நேரில் சந்திக்கிறேன் என நடராஜனிடம் தெரிவித்திருக்கிறார். அதிமுகவில் இதுதான் ஹாட் டாபிக்காக பேசப்படுகிறது. முழுமையாக உடல்நலம் குணமடைந்துவிட்ட நடராஜனை மருத்துவர்கள் 2 மாத ஓய்வில் இருக்க அறிவுறுத்தியுள்ளனர். தற்போது உறவினர்கள் மட்டுமே நடராஜனை சந்தித்து வருகின்றன. பழைய பன்னீர்செல்வமாக நடராஜன் திரும்பி வந்ததில் அவரது உறவினர்கள் ரொம்பவே மகிழ்ச்சியடைந்துள்ளனர்.