OUR CLIENTS
முடிச்சூரில் மழை நீரை வடிய வைப்பது பெரும் சவாலாக இருக்கிறது : அமைச்சர் அன்பழகனின் அசத்தல் பேட்டி
முடிச்சூரில் மழை நீரை வடிய வைப்பது பெரும் சவாலாக இருக்கிறது : அமைச்சர் அன்பழகனின் அசத்தல் பேட்டி Posted on 06-Nov-2017 முடிச்சூரில் மழை நீரை வடிய வைப்பது பெரும் சவாலாக இருக்கிறது : அமைச்சர்  அன்பழகனின் அசத்தல் பேட்டி

சென்னை, நவ.6-
முடிச்சூரில் மழை நீரை வடிய வைப்பது பெரும் சவாலாக இருக்கிறது என்று அமைச்சர் கே.பி. அன்பழகன் கூறியுள்ளார்.

சென்னையை அடுத்த தாம்பரம் சுற்று வட்டார பகுதிகளில் பெய்த கன மழை காரணமாக அதிக அளவு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.   இதனால் அங்குள்ள சித்தேரி, மாடம்பாக்கம் ஏரி, செம்பாக்கம் ஏரி, சேலையூர் ஏரி, இரும்புலியூர் ஏரி, பீர்க்கன்கரணை ஏரி, ராஜகீழ்ப்பாக்கம் ஏரி, கூடுவாஞ்சேரி ஏரி நிரம்பி உபரி நீர் வெளியேறி வருகிறது.  காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள மதுராந்தகம் ஏரியும் நிரம்பி விட்டது. இதனால் ஆங்காங்கே மழை நீர் வீதிகளில் பெருக்கெடுத்து ஓடுகிறது.  சென்னை புறநகர் மற்றும் காஞ்சீபுரம் மாவட்டத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் அமைச்சர் கே.பி.அன்பழகன் பார்வையிட்டு தண்ணீர் வேகமாக வழிந்தோட அதிகாரிகளுக்கு தகுந்த உத்தரவு பிறப்பித்து வருகிறார். அவருடன் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரும் உடன் சென்று நிவாரண பணிகளை முடுக்கி விடுகிறார்.

மாவட்ட கண்காணிப்பு அதிகாரி அமுதா, கலெக்டர் பொன்னையா மற்றும் அதிகாரிகளும் பம்பரமாக சுழன்று பணியாற்றி வருகின்றனர்.  மதுராந்தகம் ஏரி நிரம்பி உள்ளதால் அமைச்சர்கள் கே.பி.அன்பழகன், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் ஏரி பகுதிக்கு இன்று நேரில் சென்று பார்த்தனர். ஏரி திறக்கப்பட்டால் எடுக்கப்பட வேண்டிய முன் எச்சரிக்கை நடவடிக்கை பற்றியும் அதிகாரிகளுடன் ஆலோசித்தனர். அதன் பிறகு சிங்கபெருமாள் கோவில், கூடுவாஞ்சேரி, முடிச்சூர், வரதராஜபுரம் பகுதிக்கும் சென்று மழை நீரை வடிய வைக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை நேரில் பார்வையிட்டார். 

பின்னர் அமைச்சர் கூறியதாவது:-   காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய ஏரியான மதுராந்தகம் ஏரியில் 20.5 அடிக்கு தண்ணீர் நிரம்பி உள்ளது. இதன் கொள்ளளவு 23.3 அடியாகும். தற்போது வரும் உபரி நீர் கிளியாற்றில் விடப்படுகிறது. இதனால் கிளியாற்று கரையில் உள்ள முள்ளி, முன்னூத்திகுப்பம், கே.கே.புதூர், உழுதமங்கலம், விழுதமங்கலம், தச்சூர், அருங்குணம், தேவாதூர் உள்ளிட்ட 21 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.  தாழ்வான பகுதியில் உள்ளவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. 

சிங்கபெருமாள் கோவில், கூடுவாஞ்சேரி, பெருங்களத்தூர், ஊரப்பாக்கம் பகுதிகளில் உள்ள சிறிய ஏரிகள் நிரம்பி தண்ணீர் வழிந்தோடுவதால் சுற்று வட்டார பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளது.  முடிச்சூர், வரதராஜபுரம் பகுதிகளிலும் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மற்ற ஏரிகளின் உபரி நீர் தொடர்ந்து வருவதால் இப்பகுதியில் மழை நீரை வடிய வைப்பது பெரும் சவாலாக அமைந்துள்ளது. அதிகாரிகள் மீட்பு குழு வினருடன் இணைந்து பணியாற்றி வருகின்றனர்.  தற்போது ஆதனூரில் உள்ள நிவாரண முகாமில் 48 பேரும், பெருங்களத்தூர் முகாமில் 250 பேரும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.  அவர்களுக்கு தேவையான சாப்பாடு, குழந்தைகளுக்கு பால், பிரட் போன்றவற்றை வழங்கி வருகிறோம். காஞ்சீபுரம் மாவட்டத்தில் வெள்ள பாதிப்புக்கு நிரந்தர தீர்வு காண ரூ.600 கோடியில் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.  அதேபோல் ரூ.263 கோடியில் உபரி தண்ணீரை கடலில் விட மற்றொரு திட்டமும் தயாரிக்கப்படுகிறது.  தற்போது மழை நீர் சூழ்ந்துள்ள ஊர்களில் வெள்ளத்தை வடிய வைக்க அரசு இயந்திரங்கள் வேகமாக செயல்பட்டு வருகிறது. 24 மணி நேரமும் அதிகாரிகள் குழுவினர் ரோந்து சுற்றி நிலைமைகளை கண்காணித்து வருகின்றனர். நாங்களும் தொடர்ந்து அங்கேயே முகாமிட்டுள்ளோம்.  இவ்வாறு அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறினார்.

Label