OUR CLIENTS
கேரளாவில் கனமழை : சபரிமலை பம்பை ஆற்றில் வெள்ளப் பெருக்கில் 3 பேர் பலி
கேரளாவில் கனமழை : சபரிமலை பம்பை ஆற்றில் வெள்ளப் பெருக்கில் 3 பேர் பலி Posted on 06-Nov-2017 கேரளாவில் கனமழை  : சபரிமலை பம்பை ஆற்றில் வெள்ளப் பெருக்கில் 3 பேர் பலி

திருவனந்தபுரம், நவ.6-
கேரளாவில் பெய்து வரும் கனமழையால் சபரிமலை பம்பை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. மேலும் இந்த மழைக்கு குழந்தை உள்பட 3 பேர் பலியாகி உள்ளனர்.

கேரளாவில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை கன மழையாக பெய்தது. இதனால் மாநிலம் முழுவதும் உள்ள நீர்நிலைகள் நிரம்பின. இதன் பிறகு மழை சற்று ஓய்ந்து இருந்தது.  இந்த நிலையில் கேரளாவில் வடகிழக்கு பருவ மழை கடந்த 3 நாட்களாக மீண்டும் பெய்து வருகிறது. திருவனந்தபுரம், வயநாடு, காட்டாக்கடை, மலப்புரம் ஆகிய பகுதிகளில் இடைவிடாமல் மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் தண்ணீர் வெள்ளம் போல ஓடுகிறது.  பல இடங்களில் பெரிய மரங்கள் சாலையில் சாய்ந்ததால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. மேலும் மின் தடையாலும் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

மேலும் சபரிமலையிலும் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்கு உள்ள புனித நதியான பம்பை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. சபரி மலையில் வருகிற 15-ந்தேதி மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட உள்ளது.  இதற்கான அனைத்து முன் ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன. இந்த நிலையில் அங்கு மழை பெய்து வருவதால் இறுதிக்கட்ட பணிகளில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.  கேரளாவில் பெய்து வரும் மழைக்கு குழந்தை உள்பட 3 பேர் பலியாகி உள்ளனர். காட்டாக்கடை பகுதியை சேர்ந்த சபீர் என்பவரின் 2 வயது பெண் குழந்தை ரம்சியா தனது வீடு அருகே விளையாடிக் கொண்டு இருந்தபோது எதிர்பாராத விதமாக மழை தண்ணீரில் தவறி விழுந்து பரிதாபமாக உயிர் இழந்தது.

இதேபோல மலையின்கீழ் பகுதியில் கருணாகரன் என்பவரும், கிளிமானூர் பகுதியில் கோபிநாத் என்பவரும் மழை காரணமாக ஏற்பட்ட மின்கசிவில் மின்சாரம் தாக்கி பலியானர்கள்.  கேரளாவில் மேலும் 3 நாட்களுக்கு இந்த மழை நீடிக்கும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது. மீனவர்கள் கடலுக்கு செல்லவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. மீனவர் கிராமங்களான கோவளம், விழிஞ்சம் பகுதிகளில் மழை நீர் கிராமங்களுக்குள் புகுந்ததில் மீனவர்களின் 6 வீடுகள் இடிந்தன. இதில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.  மேலும் சிறையின்கீழ் பகுதியில் கரையில் நிறுத்தப்பட்டிருந்த 3 விசைபடகுகளையும் கடல் அலைகள் கடலுக்குள் இழுத்துச் சென்று விட்டன. மழை தொடர்ந்து பெய்து வருவதால் மாவட்ட கலெக்டர்கள் மழை முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கி விட்டு உள்ளனர்.

Label