OUR CLIENTS
என் வீட்டில் வந்து ஓய்வெடுங்கள் : கருணாநிதிக்கு மோடி அழைப்பு
என் வீட்டில் வந்து ஓய்வெடுங்கள் : கருணாநிதிக்கு மோடி அழைப்பு Posted on 07-Nov-2017 என் வீட்டில் வந்து ஓய்வெடுங்கள் :  கருணாநிதிக்கு மோடி அழைப்பு

சென்னை, நவ.6-
சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக வந்த பிரதமர் நரேந்திர மோடி திடீரென சென்னை கோபாலபுரத்தில் திமுக தலைவர் கருணாநிதியை இன்று   சந்தித்து நலம் விசாரித்தார். திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்த பிரதமர் மோடி டெல்லியில் உள்ள தனது வீட்டில் வந்து ஓய்வெடுக்குமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

தினத்தந்தி பவளவிழா, பொருளாதார ஆலோசகர் சோமநாதன் மகள் வீட்டு திருமண நிகழ்ச்சிகளில் பங்கேற்க இன்று  சென்னை வந்தார் பிரதமர் மோடி. இந்த இரு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்ற பின்னர் நண்பகல் 12.10 மணியளவில் கோபாலபுரத்தில் திமுக தலைவர் கருணாநிதி வீட்டுக்கு பிரதமர் மோடி வந்தார்.   பிரதமர் மோடியுடன் ஆளுநர் பன்வாரிலாலும் கோபாலபுரம் வந்தார். பிரதமர் மோடியை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பொன்னாடை அணிவித்து வரவேற்றார். 
இதைத்தொடர்ந்து வீட்டிற்குள் சென்ற பிரதமர் மோடி திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து நலம் விசாரித்தார்.அப்போது முரசொலி பவள விழா மலரை கருணாநிதி பிரதமர் மோடிக்கு வழங்கினார்.  அதனை பெற்றுக்கொண்ட பிரதமர் மோடி திமுக தலைவர் கருணாநிதியை டெல்லியில் உள்ள தனது வீட்டில் வந்து ஓய்வெடுக்குமாறு அழைப்பு விடுத்தார். 

இதனை உறுதி செய்த திமுக எம்பி கனிமொழி திமுக தலைவர் கருணாநிதியை பிரதமர் மோடி சந்தித்ததில் அரசியல் உள்நோக்கம் எதுவும் இல்லை என்றார்.  திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்த பிரதமர் மோடிக்கு எம்பி கனிமொழி நன்றி தெரிவித்தார். மரியாதை நிமித்தமாகதான் கருணாநிதியை பிரதமர் மோடி சந்தித்தார் என்றும் கனிமொழி கூறினார். 
 
இதனையடுத்து கருணாநிதியின் இல்லத்தில் இருந்து பிரதமர் மோடி புறப்பட்டுச் சென்றார்.  இச்சந்திப்பின் போது மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், பொன். ராதாகிருஷ்ணன், திமுக ராஜ்யசபா எம்.பி. கனிமொழி உள்ளிட்டோர் உடனிருந்தனர். சுமார் 10 நிமிடங்கள் மட்டுமே இந்த சந்திப்பு நடைபெற்றாலும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. 

Label