OUR CLIENTS
160 வீடுகளை இடிக்க பொதுமக்கள் எதிர்ப்பு மாணவர்களுடன் ஆயிரக்கணக்கானோர் போராட்டம்
160 வீடுகளை இடிக்க பொதுமக்கள் எதிர்ப்பு மாணவர்களுடன் ஆயிரக்கணக்கானோர் போராட்டம் Posted on 07-Nov-2017 160 வீடுகளை இடிக்க பொதுமக்கள் எதிர்ப்பு  மாணவர்களுடன் ஆயிரக்கணக்கானோர் போராட்டம்

திருச்சி, நவ.7-
திருச்சி ஏர்போர்ட் டெர்மினலுக்காக நிலம் கையகப்படுத்த 160 வீடுகளை இடிப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து மாணவர்களுடன் ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி விமான நிலையம் சர்வதேச விமான நிலையம் அந்தஸ்தை பெற்றுள்ளது. தற்போது விமான நிலையத்தில் இருந்து தினமும் 12 விமானங்கள் வெளிநாடுகளுக்கு இயக்கப்படுகின்றன. சர்வதேச விமான நிலையம் அந்தஸ்து பெற்றதை தொடர்ந்து விமான நிலையத்தில் விரிவாக்க பணிகள் நடைபெறவுள்ளன. இதற்காக விமான ஓடுதளம் விஸ்தரிப்பு, புதிய டெர்மினல் அமைப்பு போன்றவற்றிற்காக விமான நிலையத்தை சுற்றி உள்ள நிலங்கள் கையகப்படுத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.  இந்நிலையில் விமான நிலைய ஓடுதளம் விரிவாக்கத்திற்காக நத்தமாடிப்பட்டி, கிழக்குறிச்சி உள்ளிட்ட மக்கள், விவசாய நிலத்தை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். அதேபோன்று விமான நிலையத்தின் டெர்மினல் அமைப்பதற்காகவும் நிலம் கொடுக்கவும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை விமான நிலையத்தின் எதிரே உள்ள பட்டத்தம்மாள் தெரு பகுதியில் நிலம் அளப்பதற்காக சென்ற தாசில்தார்கள் மணிகண்டன், தமிழ்செல்வி, நில அளவையாளர் நீதி ராஜன், கிராம நிர்வாக அதிகாரி பத்மநாதன் ஆகியோர் ஊழியர்களுடன் சென்ற போது அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.  தொடர்ந்து இப்பிரச்சனை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த 24 பேர் கொண்ட குழுவும் அமைக்கப்பட்டது. இதில் பேசி சுமூக முடிவு எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதில் தீர்வு ஏற்படவில்லை. இந்த நிலையில் அப்பகுதி மக்கள் இன்று காலை திடீரென திருச்சி - புதுக்கோட்டை சாலையில் பட்டத்தம்மாள் தெரு பகுதியில் சாலை ஓரத்தில் திரண்டு காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.

திருச்சி விமான நிலையம் டெர்மினல் அமைக்க வேறு இடத்தை அரசு தேர்வு செய்ய வேண்டும் என கூறி வருகின்றனர். பட்டத்தம்மாள் தெரு பகுதியில் 168 குடும்பங்கள் வீடு கட்டி குடியிருந்து வருகிறார்கள்.  1997-ம் வருடம் அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி ஆட்சியில் இங்கு கல்நார் வீடுகள் கட்டப்பட்டது. இப்போது அரசு மானியம் ரூ.2.10 லட்சம் உதவியுடன் வீடுகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. பட்டா வழங்கப்பட்டுள்ள இப்பகுதியை திடீரென காலி செய்ய கூறுவது தவறு.  எங்களை இங்கு வாழ விடுங்கள் என கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில் அப்பகுதியைச் சேர்ந்த கல்லூரி, அலுவலகம் செல்வோர், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் ஆகியோரும் சீருடையுடன் கலந்து கொண்டனர். அசம்பாவிதம் ஏற்படுவதை தடுக்க அங்கு போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் திருச்சி - புதுக்கோட்டை ரோட்டில் பரபரப்பு நிலவுகிறது.

Label