OUR CLIENTS
காஷ்மீரின் அரசு அலுவலகங்கள் இடமாற்றம்
காஷ்மீரின் அரசு அலுவலகங்கள் இடமாற்றம் Posted on 07-Nov-2017 காஷ்மீரின் அரசு அலுவலகங்கள் இடமாற்றம்

ஜம்மு, நவ.7-
காஷ்மீர் மாநிலத்தில் நீண்ட கால நடைமுறையின்படி தலைமைச் செயலகம் நேற்று முதல் ஸ்ரீநகரில் இருந்து ஜம்முவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கோடை மற்றும் கடுங்குளிர் காலங்களில் தலைமை செயலகம் முறையே ஸ்ரீநகரிலும், ஜம்முவிலும் என இரு இடங்களில் இயங்கி வருகிறது. இந்த தலைமைச் செயலகத்தை மாற்றும் இந்த மாற்றமானது தர்பார் மாற்றம் என்று அழைக்கப்படும். ஜம்முவின் கோடையில் இருந்து தப்பிக்கவும் ஸ்ரீநகரின் கடும் குளிரில் இருந்து பாதுகாத்துக் கொள்ளவும் 1872-ல் மகாராஜா குலாப் சிங் 'தர்பார் மாற்றம்' என்னும் நடைமுறையை ஆரம்பித்து வைத்தார்.

இதன்படி, அரசு அலுவலகங்கள் 6 மாதங்கள் ஸ்ரீநகரிலும், 6 மாதங்கள் ஜம்முவிலும் இயங்கி வருகின்றன.  இதற்காக இரண்டு இடங்களிலும் உள்ள அரசு அலுவலகங்களில் போதிய வசதிகளும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன்படி தலைமைச் செயலகம், ராஜ்பவன், காவல் தலைமை அலுவலகம் உள்ளிட்ட முக்கிய அரசு அலுவலகங்கள் ஜம்முவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன.   ஆண்டுக்கு இரு முறை தலைநகரத்தை மாற்றி கோப்புகளை இடமாற்றம் செய்வதால் மாநில அரசுக்கு கோடிக் கணக்கான ரூபாய்கள் வீணாவதாகக் குற்றச்சாட்டு தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது. இதனால் ஒரே இடத்தில் நிரந்தரமாக அரசு அலுவலகங்கள் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.  

இதனிடையே தலைநகர மாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஆளும் கட்சி உரிய வகையில் செயல்படவில்லை என்று கூறியும் காங்கிரஸ் கட்சியும், வர்த்தகர்கள் கூட்ட அமைப்பும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் நேற்று முதல் 6 மாதத்திற்கு காஷ்மீரின் தலைமைச் செயலகம் ஜம்முவில் இயங்கும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.  

Label