ஜல்லிக்கட்டுக்கு எதிராக மனு தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் Posted on 07-Nov-2017
புதுடெல்லி, நவ.7-
ஜல்லிக்கட்டுக்கு எதிராக விலங்குகள் நல அமைப்பான பீட்டா வழக்கு தொடர்ந்தது. விளக்கம் கேட்டு தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கடந்த 2014-ம் ஆண்டு ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதனால் ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வலியுறுத்தி தமிழகத்தில் பல்வேறு அமைப்பினர், இளைஞர்கள் போராட்டங்கள் நடத்தினர். இந்த நிலையில் ஜல்லிக்கட்டு நடத்தும் வகையில் மிருகவதை தடை சட்டத்தின் சில பிரிவுகளில் திருத்தங்கள் மேற்கொண்டு தமிழக அரசு 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அவசர சட்டம் பிறப்பித்தது. தமிழகத்தில் ஜல்லிக்கட்டு மீண்டும் நடத்தப்பட்டது.
இந்த சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என பீட்டா அமைப்பு தாக்கல் செய்த மனுமீதான விசாரணை நேற்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன் நடைபெற்றது. இந்த வழக்கு தொடர்பாக 4 வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். மனுதாக்கல் செய்துள்ள பீட்டா அமைப்பு தமிழகத்தின் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர், புதுக்கோட்டை மாவட்டம் திருநல்லூர், திண்டுக்கல் மாவட்டத்தின் மரவப்பட்டி ஆகிய 5 ஊர்களில் நடந்த ஜல்லிக்கட்டில் காளைகள் மோசமாக துன்புறுத்தப்படுவதற்கு ஆதாரம் இருக்கிறது என கூறி சில வீடியோ காட்சிகள், புகைப்படங்கள் ஆகியவற்றை பீட்டா அமைப்பு ஆதாரமாக இணைத்துள்ளது.