OUR CLIENTS
டெங்கு காய்ச்சல், மழை வெள்ளம் குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு முதல்வர் விளக்கம்
டெங்கு காய்ச்சல், மழை வெள்ளம் குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு முதல்வர் விளக்கம் Posted on 07-Nov-2017 டெங்கு காய்ச்சல், மழை வெள்ளம் குறித்து  செய்தியாளர்களின் கேள்விக்கு முதல்வர் விளக்கம்

சென்னை, நவ.7-
முதல்வர் பழனிசாமி  டெங்கு காய்ச்சல், மழை வெள்ளம் மற்றும் சேதம் குறித்து விமானநிலையத்தில் செய்தியாளர்களின் கேள்விகள் அனைத்துக்கும் நேற்று  பதில் அளித்தார். 

புதுடெல்லியிலிருந்து நேற்று காலை சென்னைக்கு வருகை தந்த பிரதமர் மோடி மீண்டும் டில்லிக்கு விமானத்தில் புறப்பட்டுச் சென்றார். பிரதமரை வழியனுப்ப விமான நிலையம் சென்ற முதல்வர் பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது; கேள்வி: டெங்கு காய்ச்சல் குறித்து, மத்திய குழு ஆய்வு செய்து சென்று, அதற்கே இன்னும் போதுமான நிதி ஒதுக்கவில்லையே.
பதில்: டெங்கு காய்ச்சல் குறித்து நான் ஏற்கனவே பலமுறை சொல்லியிருக்கின்றேன். டெங்கு காய்ச்சல் என்பது நல்ல தண்ணீரில் வரக்கூடியது. நிதி கொடுப்பது அல்ல. டெங்கு காய்ச்சல் எப்படி வருகின்றது என்பதை குறும்படம் மூலமாக நாங்கள் ஊடகங்களுக்குத் தெளிவாகக் கொடுத்திருக்கின்றோம். டெங்கு காய்ச்சல் வேறு, இது வேறு. கனமழையால் தாழ்வான பகுதியில் மழைநீர் தேங்கி மக்கள் பாதிக்கப்படுகின்றார்கள். அந்த பாதிப்புக்குள்ளாகின்ற பகுதிகளுக்கு நிரந்தரமாக தீர்வு காணவேண்டுமென்பதற்காக, மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களிடம் நாங்கள் எடுத்துச் சொன்னோம். பாரதப் பிரதமர் அவர்களும் நிரந்தர தீர்வு காண்பதற்கு தேவையான நிதி ஒதுக்கித் தருவதாக தெரிவித்திருக்கின்றார். டெங்கு காய்ச்சலோடு இதை ஒப்பிடக் கூடாது. டெங்கு காய்ச்சல் என்பது மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, அதை கவனமாக எடுத்துக் கொண்டு, டெங்கு கொசு வராமல் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கேள்வி: இந்த சந்திப்பின்போது தோராயமாக எவ்வளவு நிதி கேட்கப்பட்டது?
பதில்: சுமார் ரூபாய் 1500 கோடி நிதி கேட்டிருக்கின்றோம். சென்னை மாநகரப் பகுதி, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் கனமழை பொழிகின்றபொழுது  மழைநீர் தேங்கி விடுகிறது. அந்த மழை நீரை வெளியேற்ற நிரந்தர தீர்வு செய்வதற்கு, அடிப்படை வசதி செய்வதற்காக தோராயமாக ரூபாய் 1500 கோடி தேவைப்படுகிறது என்று பாரதப் பிரதமர் அவர்களிடத்தில் தெரிவித்திருக்கின்றோம். மத்திய அரசு தேவைப்படும் நிதி கொடுப்பதாக தெரிவித்திருக்கின்றார்.
கேள்வி: பெருவெள்ளம் தமிழகம் சந்தித்தபோதும் கூட இன்னும் அடிப்படை வசதிகூட செய்து தரப்படவில்லை என்று ஒரு பிரதான குற்றச்சாட்டை வைக்கின்றார்கள்.
பதில்: இரண்டு முறை சென்னையில் பாதிக்கப்பட்ட பகுதியில் நானும், மாண்புமிகு துணை முதலமைச்சர் அவர்களும், அமைச்சர் பெருமக்கள் மற்றும் உயர் அதிகாரிகள் எல்லாம் சென்று பார்வையிட்டபொழுது அனைத்து ஊடகங்கள், பத்திரிகையாளர்கள் ஆகிய நீங்களும் எங்களுடன் வந்திருந்தீர்கள். தாழ்வான பகுதி, இன்றைக்கு நேற்றைக்கு உருவான பகுதியல்ல. நீண்ட காலத்திற்கு முன்பே அவர்கள் வீடு கட்டி வசித்து வருகின்றார்கள். ஆனால், அந்த தாழ்வான பகுதியிலே தேங்கியுள்ள மழைநீர் மின் மோட்டாகள் பொருத்தி, அரசால் உடனுக்குடன் வெளியேற்றப்பட்டு வருகின்றது. அதற்கு மாற்று ஏற்பாடு என்றால் சாதாரண விஷயம் அல்ல. உங்களுக்கு நன்றாகத் தெரியும். அதுமட்டுமல்ல, சென்னையைச் சுற்றியுள்ள காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டம் போன்ற பகுதிகள் எல்லாம் கிராமமாக இருந்தது. அவை கிராமமாக இருக்கின்றபொழுது அவர்கள் எந்தவித அனுமதியும் இல்லாமலே வீடுகளை கட்டியிருக்கின்றார்கள். உதாரணத்திற்கு, நாராயணபுரம் ஏரியின் கீழே வீடு கட்டியிருக்கின்றார்கள். அவையெல்லாம் பாசனப் பகுதிகளாக இருந்தவை. அப்படியிருந்த காலத்தில் அவர்கள் வீடு கட்டியிருக்கின்றார்கள். அந்த ஏரியிலிருந்து வீடு கட்டியிருக்கக்கூடிய பகுதி, கிட்டத்தட்ட 6 அடி கீழே உள்ளது. தாழ்வான பகுதியில் வீடு கட்டியிருப்பதால் தண்ணீர் தேங்குகின்றது. இருந்தாலும், அரசு அதற்குத் தேவையான திட்டங்களைத் தயாரித்து, தேங்குகின்ற மழைநீரை வெளியேற்ற துரித நடவடிக்கை எடுத்து வருகிறது.

கேள்வி: ஆக்கிரமிப்புகள் அதிகமாக இருப்பதால் தான் மழைநீர் தேங்குவதாக சொல்கின்றார்களே?
பதில்: ஏற்கனவே நீதிமன்றத்திலே ஆக்கிரமிப்புப் பகுதிகளை அகற்றவேண்டுமென்று உத்தரவு உள்ளது. அதன் அடிப்படையில், இன்றைக்கு ஆக்கிரமிப்புப் பகுதிகள் எல்லாம் அகற்றப்பட்டு வருகின்றது.

கேள்வி: மக்கள் அடிப்படை வசதிகளைத் தேடி உள்ளாட்சிப் பிரதிநிதிகளை சந்திக்கக்கூடிய ஒரு சூழல் இருக்கின்றபொழுது, யாரை சென்று சந்திப்பதென்று தெரியவில்லை, அதனால், உடனடியாக உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டுமென்று கோரிக்கை  வைக்கின்றார்களே..
பதில்: உள்ளாட்சித் தேர்தலைப் பொறுத்தவரைக்கும் நீதிமன்றத்திலே வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. வழக்கு முடிந்தபிறகு தான் தேர்தலை நடத்த முடியும். வழக்கு தீர்ப்பு வந்த பிறகு நிச்சயம் தேர்தல் நடக்கும். மாண்புமிகு அம்மா அவர்கள் இருந்தபொழுதே, தேர்தல் நடத்த அறிவிப்பு செய்தபொழுதே, யார் நீதிமன்றத்தில் முறையிட்டார்கள் என்று தெரியும், தடையாணை பெற்றார்கள் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும்.  அதனால் தான், மாண்புமிகு அம்மாவினுடைய அரசு உள்ளாட்சித் தேர்தலை நடத்த முடியாத ஒரு சூழ்நிலை இருந்து வருகின்றது. உள்ளாட்சித் தேர்தல் குறித்து நீதிமன்றத்திலிருந்து தீர்ப்பு வந்த பிறகு, அம்மாவினுடைய அரசு உள்ளாட்சித் தேர்தலை நடத்தத் தயாராக இருக்கின்றது.

கேள்வி: தாமரையுடன், இரட்டை இலை இணைந்து செயல்பட மக்கள் விரும்புகின்றார்கள். இரட்டை இலை, தாமரை கூட்டணி உதயமாகிறது என்று சூலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கனகராஜ் பொதுக் கூட்டத்தில் பேசியிருக்கின்றாரே? 
பதில்: தேர்தலே வராதபொழுது நீங்களே யூகத்தின் அடிப்படையில் கேள்வி கேட்பது எப்படி? தேர்தல் வரும்பொழுது, அம்மாவினுடைய அரசு நிச்சயமாக முடிவெடுக்கும்.

கேள்வி: கடந்த காலத்தில் ரூபாய் 5000 நிவாரணத் தொகை கொடுத்ததைப் போல் இப்பொழுதும் நிவாரணத் தொகை கொடுப்பீர்களா?
பதில்: போன முறை புயல் வந்து, மக்களுக்கு நிறைய சேதாரம் ஏற்படுத்தியது. இன்றைய நிலை அப்படியில்லை. கனமழை, இது பருவமழை, மழையின்போது தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. அதனை இப்பொழுது அம்மாவினுடைய அரசு மின்மோட்டார்களை வைத்து வெளியேற்றி வருகின்றது. 315 இடங்களில் மழை நீர் தேங்கியிருந்தது. 200 இடங்களில் வெளியேற்றப்பட்டுள்ளது. நேற்றிலிருந்து இன்றுவரை கிட்டத்தட்ட 72 இடங்களில் மழைநீர் வெளியேற்றப்பட்டுள்ளது. இன்னும் 40 இடங்களில் தேங்கியுள்ளது. அதுவும் விரைவாக வெளியேற்றப்படும்.

கேள்வி: பிரதமர் மோடி தமிழகம் வந்ததும், தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் என்று தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் திருமதி.தமிழிசை சௌந்தரராஜன் சொல்லியிருந்தார்கள். அந்த மாற்றம் ஏற்பட்டிருக்கின்றதா? அல்லது ஏற்படப் போகின்றதா? என்ன மாற்றம் அது?

பதில்: இது கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நன்மை செய்யவேண்டுமென்ற நோக்கத்தில் உங்களை சந்தித்திருக்கின்றேன். அதைப்பற்றி நீங்கள் கேள்வி கேளுங்கள். இவ்வாறு முதல்வர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

முதலமைச்சருடன், துணை முதலமைச்சர் மற்றும் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.

Label