OUR CLIENTS
தேங்கிய மழைநீரால் துர்நாற்றம் – தொற்றுநோய் ஆபத்து : ராமதாஸ்
தேங்கிய மழைநீரால் துர்நாற்றம் – தொற்றுநோய் ஆபத்து : ராமதாஸ் Posted on 07-Nov-2017 தேங்கிய மழைநீரால் துர்நாற்றம் – தொற்றுநோய் ஆபத்து  : ராமதாஸ்

சென்னை, நவ.7-
கனமழையால் பல நாட்களாக தேங்கியுள்ள தண்ணீரிலிருந்து கடுமையான துர்நாற்றம் வீசத் தொடங்கியுள்ளது. இதேநிலை இன்னும் சில நாட்கள் நீடித்தால் சென்னையின் புறநகர் பகுதிகளில் மிகப்பெரிய அளவில் தொற்றுநோய் ஏற்படும் ஆபத்துள்ளது. இதனைத் தடுக்க புறநகர் பகுதிகளில் தேங்கிக் கிடக்கும் தண்ணீரை வெளியேற்ற போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக நேற்று ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில்,  சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்த மழையால் நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புப் பகுதிகளில் தேங்கி நிற்கும் தண்ணீர் 8 நாட்களாகியும் இன்னும் அகற்றப்படவில்லை. தமிழக அரசின் செயல்படாத தன்மையால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதுடன், நோய் பரவும் ஆபத்தும் ஏற்பட்டுள்ளது.
வட கிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பே மழைநீர் கால்வாய்களை தூர்வாருதல் உள்ளிட்ட வெள்ளத்தடுப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட

பல்வேறு தரப்பினரும் வழங்கிய அறிவுரைகளை தமிழக அரசு புறந்தள்ளியதன் பாதிப்புகளை சென்னை புறநகர் பகுதி மக்கள் அனுபவித்து வருகின்றனர்.

சென்னை தாம்பரம், முடிச்சூர், வேளச்சேரி, கோவிலம்பாக்கம், சிட்லப்பாக்கம், ஊரப்பாக்கம், பெருங்களத்தூர், கொடுங்கையூர், ராதாகிருஷ்ணன் நகர், கொளத்தூர் ஆகிய பகுதிகளில் உள்ள குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளம் புகுந்திருக்கிறது. சென்னையின் புறநகர் பகுதிகளில் மட்டும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் வெள்ளத்தால் சூழப்பட்டிருக்கின்றன.

கடந்த வாரம் ஞாயிற்றுக் கிழமையிலிருந்தே சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெருமழை பெய்து வருகிறது. 8 நாட்களுக்கும் மேலாக மழைநீர் தேங்கிக் கிடப்பதால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் வீடுகளைப் பூட்டி விட்டு வெளியேறி விட்டனர்.

கோவிலம்பாக்கம், வேளச்சேரி, வடசென்னை மற்றும் சென்னையின் மைய பகுதிகளில் பல இடங்களில் மழை நீருடன் கழிவு நீரும் கலந்துவிட்டதால் மிக மோசமான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. பல நாட்களாக தேங்கியுள்ள தண்ணீரிலிருந்து கடுமையான துர்நாற்றம் வீசத் தொடங்கியுள்ளது. இதேநிலை இன்னும் சில நாட்கள் நீடித்தால் சென்னையின் புறநகர் பகுதிகளில் மிகப்பெரிய அளவில் தொற்றுநோய் ஏற்படும் ஆபத்துள்ளது.

மழை, வெள்ளம் பாதித்த பகுதிகளை முதலமைச்சரும், அமைச்சர்களும் பார்வையிடும் நிகழ்வுகள் வெறும் சடங்குகளாகவே நடைபெற்று வருகின்றன.

தண்ணீர் வடிந்த பகுதிகளில் மருத்துவ முகாம்களை நடத்திக் கொண்டு, புறநகர் பகுதிகளில் தேங்கிக் கிடக்கும் தண்ணீரை வெளியேற்ற போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சென்னையில் மீண்டும் இதேபோன்ற சூழல் ஏற்படாமல் தடுக்க சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அனைத்தும் அகற்றப்பட வேண்டும் என ராமதாஸ் கூறியுள்ளார்.  அதேபோல், அறுந்து கிடந்த மின் கம்பியை மிதிப்பதால் நிகழும் மரணங்களையும் அரசு தடுக்க வேண்டும்.  இவ்வாறு, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Label