OUR CLIENTS
மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்கா கருணாநிதி - மோடி சந்திப்பு : பாஜகவின் ராஜதந்திர பிளான்?
மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்கா கருணாநிதி - மோடி சந்திப்பு : பாஜகவின் ராஜதந்திர பிளான்? Posted on 07-Nov-2017 மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்கா கருணாநிதி - மோடி சந்திப்பு : பாஜகவின் ராஜதந்திர பிளான்?

சென்னை , நவ.7 -
திமுக தலைவர் கருணாநிதியுடனான சந்திப்பு தமிழக மக்களின் அபிமானத்தை பெருவதற்கான பிரதமர் மோடியின் ராஜதந்திர அரசியல் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். 

சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக வந்த பிரதமர் நரேந்திர மோடி திடீரென சென்னை கோபாலபுரத்தில் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்தார். சுமார் 15 நிமிடங்கள் மட்டுமே இந்த சந்திப்பு நடைபெற்றாலும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.    ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் மத்திய அரசுக்கு எதிராக திமுக சற்றே அடக்கி வாசித்தது. ஒருகட்டத்தில் பாஜகவை பகிரங்கமாகவே திமுக எதிர்க்கத் தொடங்கியது.  


கருணாநிதியின் சட்டசபை வைரவிழா நிகழ்ச்சியில் காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்களை பங்கேற்க வைத்து பாஜகவுக்கு எதிரான பிரமாண்ட கூட்டணிக்கும் திமுக அடித்தளம் போட்டு வைத்தது. இந்த நிலையில் கருணாநிதி உடல்நலம் தேறி முரசொலி அலுவலகம் சென்றார்.  பின்னர் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், கருணாநிதியை கோபாலபுரம் இல்லத்தில் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். இந்நிலையில் சென்னை வந்த பிரதமர் மோடி நேற்று திடீரென கருணாநிதியை சந்தித்து பேசினார்.   திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வெளிநாட்டு பயணத்தில் இருந்த நிலையில் கருணாநிதியை பிரதமர் மோடி சந்திக்கும் திட்டம் அரங்கேறியது. இதையடுத்து ஸ்டாலின் அவசரமாக சென்னை திரும்பினார். 

இது தொடர்பாக திமுக வட்டாரங்களில் விசாரித்தபோது, கருணாநிதி குடும்பத்தைச் சேர்ந்த சிலர் பிரதமர் மோடி வர வேண்டும் என விரும்பியுள்ளனர். இதனை கேள்விப்பட்ட மத்திய அமைச்சர் அருண்ஜேட்லிதான் கருணாநிதியையும் சந்திக்கலாமே என பிரதமர் மோடியிடம் கூறினாராம்.  இதனை ஏற்றுதான் கருணாநிதியை சந்திப்பது என பிரதமர் மோடி முடிவு செய்தாராம். நீண்டகாலமாக பாஜகவுடன் நெருக்கம் காட்டி வரும் கருணாநிதி குடும்பத்தைச் சேர்ந்த சிலர் இந்த சந்திப்பால் படு உற்சாகமாக இருக்கிறார்களாம்.

தமிழக அரசியலின் போக்கை இந்த சந்திப்பு மாற்றுமோ, கூட்டணி மாற்றம் ஏற்படுமோ என்றெல்லாம் பல கருத்துகள் நிலவுகின்றன.   ஆனால் பாஜகவை பொறுத்தவரை அதிமுகவின் மீது ஏறி சவாரி செய்வதே அவர்களுக்கு சாதகமானதாக இருக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். தலைமையில்லாமல் இருக்கும் அதிமுகவை மட்டுமே பாஜக தாங்கள் நினைத்தபடியெல்லாம் ஆட்டிவைக்க முடியும் என்பது தான் பாஜகவின் எண்ணம்.  

நிச்சயமாக இது ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பே. இந்திய அரசியலில் மிக மூத்த தலைவர் கருணாநிதி. தமிழகத்தில் தனக்கென தனிச் செல்வாக்கு கொண்டுள்ளார், அவரை சந்தித்து நலம் விசாரிப்பதன் மூலம் பிரதமர் மோடி மீதான தமிழக மக்களின் அபிமானம் சிறிதேனும் மாறலாம் என்பதே அந்த பிளான்.  அதே போன்று தமிழகத்தை பொறுத்தவரை தான் எந்த கட்சிக்கும் சார்புடையவர் அல்ல, நடுநிலை அரசியல்வாதி என்பதை வெளிப்படுத்தும் விதமாகவும் இந்த சந்திப்பு நடந்திருக்கலாம் என்றும் அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். 

மேலும் அதிமுகவினர் தொடர்ந்து எல்லாத்தையும் மோடி பார்த்துக் கொள்வார் என்று வெளிப்படையாக பேசி வருவது, பிரதமருக்கு பிடிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. எனவே அதிமுகவினரை எச்சரிக்கும் விதமாக ஜாக்கிரதையாக இருங்கள், நான் நினைத்தால் என்ன வேண்டுமானாலும் செய்வேன் என மிரட்டுவதற்காகவும் இந்த சந்திப்பு நிகழ்ந்திருக்கலாம் என்ற கோணத்திலும் இந்த சந்திப்பு பார்க்கப்படுகிறது. அதே சமயம் இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்றால் பிரதமருடன் ஆளுநர் வந்திருந்த போதும் முதல்வர், துணை முதல்வர் இதில் பங்கேற்காதது ஏன் என்ற கேள்வியும் எழுகிறது.

எதுஎப்படியாக இருந்தாலும் தொடர்ந்து தமிழகத்தில் திராவிட கட்சிகளை விமர்சித்து வருகின்றனர் தமிழக பாஜக தலைவர்கள். அத்தகைய சூழலில் தாங்கள் சொல்லியபடியெல்லாம் ஆடும் அதிமுகவை விட்டு விட்டு திமுக பக்கம் பாஜக போவதற்கு வாய்ப்பே இல்லை என்பது தான் அரசியல் விமர்சகர்களின் கருத்தாக உள்ளது.

Label