OUR CLIENTS
வங்கி கடன் வசூலில் தள்ளுமுள்ளு : உயிரிழந்த விவசாயி மீது வழக்கு பதிவு
வங்கி கடன் வசூலில் தள்ளுமுள்ளு : உயிரிழந்த விவசாயி மீது வழக்கு பதிவு Posted on 08-Nov-2017 வங்கி கடன் வசூலில் தள்ளுமுள்ளு  : உயிரிழந்த விவசாயி மீது வழக்கு பதிவு

திருவண்ணாமலை, நவ.8-
திருவண்ணாமலையில் வங்கி கடன் வசூல் தகராறில் உயிரிழந்த விவசாயி மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு போந்தை கிராமத்தை சேர்ந்த ஞானசேகரன் (வயது 56) என்ற விவசாயி சாத்தனூரில் உள்ள ஒரு பொதுத்துறை வங்கி கிளையில் டிராக்டர் வாங்குவதற்காக ரூ.4 லட்சத்து 95 ஆயிரம் கடனாக வாங்கினார்.  கடும் வறட்சியால் கடன் தொகையை ஞானசேகரன் முறையாக செலுத்தவில்லை. எனவே வாராக் கடன் பட்டியலில் சேர்க்கப்பட்ட ஞானசேகரனிடம் இருந்து கடன் தொகையை வசூலிக்கும் பொறுப்பை தனியார் ஏஜென்சியிடம் அந்த வங்கி நிர்வாகம் அளித்தது.  அதன்படி, கடந்த 4-ந்தேதி மாலை தனியார் ஏஜென்சி கள மேலாளர் ராஜா (35), வெங்கடபதி (33) ஆகியோர் ஞானசேகரனிடம் கடன் தொகையை வசூலிக்க சென்றனர். கடன் தொகை வசூலாகாததால் டிராக்டரை ஜப்தி செய்ய முயன்றபோது, இருதரப்பினரும் மோதிக் கொண்டனர்.  இதில் படுகாயமடைந்த ஞானசேகரனை உறவினர்கள் மீட்டு, தானிப்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர், தீவிர சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஞானசேகரன் உயிரிழந்தார்.

இதுகுறித்து ஞானசேகரனின் மகன் ராமதாஸ் தானிப்பாடி போலீசில் புகார் அளித்தார். இந்த நிலையில், பிரேத பரிசோதனை முடிந்து நேற்று முன்தினம் மாலை ஞானசேகரனின் உறவினர்களிடம் போலீசார் உடலை ஒப்படைத்தனர்.  அப்போது, ஞானசேகரனை கொன்றவர்களை கைது செய்ய வேண்டும். வங்கி மேலாளர் மீது கொலை வழக்கு பதிவு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைளை வலியுறுத்தி உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.  ஞானசேகரனின் உடலை வாங்க மறுத்து மறியலில் ஈடுபட்ட விவசாயிகளிடம் கலெக்டர் கந்தசாமி பேச்சுவார்த்தை நடத்திய காட்சி.

இதனால் விவசாயி உடல் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையிலேயே வைக்கப்பட்டது. 2-வது நாளாக நேற்று முன்தினம் உடலை வாங்க மறுத்த உறவினர்கள், திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரி முன்பு போராட்டத்தை தொடர்ந்தனர்.  தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் சின்னசாமி, கலெக்டர் கந்தசாமி, தேசிய நதிகள் இணைப்பு சங்கத்தின் தேசிய தலைவர் அய்யாக்கண்ணு, செங்கம் கிரி எம்.எல்.ஏ, சிதம்பரம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினருமான பாலகிருஷ்ணன் ஆகியோர் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு வந்தனர்.  ஞானசேகரனின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினர். தொடர்ந்து, நேற்று முன்தினம் மாலை 6.30 மணி வரை பல்வேறு கட்டமாக ஆலோசனைகள் நடத்தப்பட்டது. வேலூர் எஸ்.பி.பகலவன், உதவி கலெக்டர் உமா மகேஸ்வரி, உள்ளிட்டோருடன் விவசாய சங்க பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேச்சுவார்த்தை முடிந்து இரவு 7 மணிக்கு வெளியே வந்த அய்யாக்கண்ணு, கிரி எம்.எல்.ஏ., பாலகிருஷ்ணன் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது: ஞானசேகரனின் இறப்பு குறித்து மர்ம மரணம் என்று போலீசார் வழக்குப் பதிவு செய்திருந்தனர். இதை கொலை வழக்காக மாற்றுகிறோம். இந்த வழக்கில் தனியார் ஏஜென்சி ஊழியர்கள் ராஜா, வெங்கடபதி, வங்கி மேலாளர் உள்ளிட்ட 3 பேரையும் சேர்க்கிறோம். விசாரணை நடத்தி முகாந்திரம் இருந்தால், வங்கி மேலாளரை கைது செய்கிறோம் என்று எஸ்.பி. உறுதி அளித்துள்ளார். ஞானசேகரன் வாங்கிய டிராக்டர் கடனை தள்ளுபடி செய்வது குறித்து வங்கி நிர்வாகத்துடன் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.  ஞானசேகரன் குடும்பத்துக்கு தமிழக அரசு சார்பில் உரிய நிவாரணம் பெற்றுத் தரப்படும் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் உறுதி அளிக்கப்பட்டது. எனவே, ஞானசேகரன் உடலை வாங்கிச் சென்று நல்லடக்கம் செய்கிறோம் என்று கூறினர்.  ஆனால், இறந்த ஞானசேகரனின் ஊரில் போதிய மின்விளக்கு வசதி இல்லாததால் உறவினர்கள் நேற்று காலை உடலை பெற்றுச் சென்றனர்.

இதற்கிடையே, கடன் வசூலில் ஈடுபட்ட போது விவசாயியை தாக்கியதாக கூறப்படும் ஏஜென்சி ஊழியர்கள் ராஜா, வெங்கடபதி ஆகிய 2 பேரும் தங்களை விவசாயி ஞானசேகரன் தரப்பினர் இரும்பு கம்பியால் தாக்க முயன்றதாக தானிப்பாடி போலீசில் புகார் கொடுத்துவிட்டு, திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர்.  அவர்கள் கொடுத்த புகாரின்பேரில், உயிரிழந்த ஞானசேகரன், அவரது மகன் ராமதாஸ் ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். உயிரிழந்தவர் மீது வழக்குப்பதிவு செய்து இருப்பது விவசாயிகள் மற்றும் உறவினர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. 2 நாட்களாக பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம், தற்போது மீண்டும் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது. உயிரிழந்த விவசாயி மீது வழக்கு பதிவு செய்திருப்பது கோர்ட்டில் அந்த வழக்கு விசாரணைக்கு வரும் போது முடிவுக்கு வந்து விடும் என்று வக்கீல் ஒருவர் கூறினார்.

Label