OUR CLIENTS
கேரளாவில் மட்டுமே தலித்துகளுக்கு அதிக நலத்திட்டங்கள் : பினராயி பெருமிதம்
கேரளாவில் மட்டுமே தலித்துகளுக்கு அதிக நலத்திட்டங்கள் : பினராயி பெருமிதம் Posted on 08-Nov-2017 கேரளாவில் மட்டுமே தலித்துகளுக்கு அதிக நலத்திட்டங்கள் : பினராயி பெருமிதம்

மதுரை, நவ.8-
கேரளாவில் மட்டுமே தலித்துகளுக்காக அதிக நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன என்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் கூறினார்.  

தலித் ஒடுக்குமுறை விடுதலை முன்னணியின் 2-வது அகில இந்திய மாநாடு மதுரையில் கடந்த 3 நாட்களாக நடைபெற்றது. மாநாட்டின் நிறைவு நாளான நேற்று முன்தினம் மாலை சாதி ஒழிப்பு சமத்துவ பேரணி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.  

அதை தொடர்ந்து பழங்காநத்தத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கேரள முதல்வர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.அப்போது பினராயி விஜயன் பேசியதாவது:  

இந்தியாவில் தலித் மக்களுக்கு எதிராக ஒடுக்குமுறை பல காலங்களாக இருந்து வருகிறது.   நாடு முழுவதும் இந்த ஒடுக்குமுறை பரப்பப்பட்டு வருகிறது.    சாதி வேறுபாடுகள் நாட்டில் வித்தியாசமாக உள்ளது.இந்தியாவில் 18 நிமிடத்துக்கு ஒருமுறை சாதி ரீதியான ஒடுக்குமுறை நிகழ்கிறது. ஒவ்வொரு நாளும் 3 தலித்துகள் பாலியல் ரீதியான தொந்தரவுக்கு ஆளாக்கப்படுகின்றனர்.  

குஜராத் மாநிலத்தில் தலித் மக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. சமீபத்திய புள்ளிவிவரப்படி தலித்துகளுக்கு எதிரான தாக்குதல்கள் 163 சதவீதம் அதிகரித்துள்ளது. ஆண்டுதோறும் தலித்துகளுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்திருப்பதாக தேசிய குற்ற ஆவண பதிவேடு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. 2012-ல் 33 ஆயிரமாக இருந்த தலித்துகள் மீதான தாக்குதல் சம்பவங்கள் 2015-ல் 45 ஆயிரமாக அதிகரித்துள்ளன.   தலித்துகளுக்கு எதிரான தாக்குதல் குறித்த வழக்குகளில் குற்றவாளிகளுக்கு விதிக்கப்படும் தண்டனை ஆண்டுதோறும் குறைந்து வருகிறது. தலித்துகள் மீதான தாக்குதல் வழக்குகளில் 23 சதவீதம் பேருக்கு மட்டுமே தண்டனை வழங்கப்பட்டுள்ளது.  

 தலித் சமூகம் பின் தங்கியுள்ள நிலையில் எழுத்தறிவு, வேலைவாய்ப்பிலும் பின்தங்கியே உள்ளது. 15 முதல் 59 வயது வரையுள்ள தலித் மக்களில் 18 சதவீதம் பேர் வேலைவாய்ப்பின்றி உள்ளனர். 41 சதவீதம் பேருக்கு மின்சார வசதி இல்லை. 66 சதவீதம் பேருக்கு கழிப்பிட வசதி இல்லை. 35 சதவீதம் பேருக்கு மட்டுமே குடிநீர் வசதி உள்ளது என அதிகாரப்பூர்வ அறிவிப்பு உள்ளது.  கிராமப்புறங்களில் 80 சதவீதம் தலித்துகள் சொந்த நிலம் இல்லாமல் உள்ளனர். தலித்துகளின் பிரச்னையை காங்கிரஸ் கட்சி தீர்க்கும் என நம்பினர். ஆனால் பிரச்னை தீரவில்லை.   சாதிய அமைப்பு முறையை ஒழிப்பதே கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய நோக்கம்.  

கேரளாவில் தலித்துகளும் ஆலயங்களில் அர்ச்சகராகலாம் என்ற நிலையை உருவாக்கியதன் மூலம் பெரியாரின் கனவு நிறைவேற்றப்பட்டுள்ளது. தலித்துகளுக்கு கேரளத்தில் மட்டுமே அதிக நலத்திட்டங்கள், நிதி ஒதுக்கீடு செய்யப்படுகின்றது.   அனைவருக்கும் மின்சாரம், இண்டர்நெட் வசதி, தலித் குழந்தைகளுக்கு கல்வி நிதி உதவி, வீடில்லாதவர்களுக்கு வீடு, குடும்பத்தில் ஒருவருக்கு வேலைவாய்ப்பு, வயதானவர்களுக்கு சிகிச்சை, பொதுக்கல்வித்திட்டம், நல்ல குடிநீர், இயற்கை வேளாண்மை உள்ளிட்ட திட்டங்கள் அமல்படுத்தப்பட உள்ளன.இவ்வாறு அவர் பேசினார்.

Label