OUR CLIENTS
கொசஸ்தலை ஆறுடன் சென்னை ஏரிகள் இணைப்பு
கொசஸ்தலை ஆறுடன் சென்னை ஏரிகள் இணைப்பு Posted on 08-Nov-2017 கொசஸ்தலை ஆறுடன் சென்னை ஏரிகள் இணைப்பு

சென்னை, நவ.8-
கொசஸ்தலை ஆறு வழியில் கடக்கும் ஏரிகளை இதனுடன் இணைக்கும் வகையில் திட்டம் தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
 
ஆந்திர மாநிலத்தில் தொடங்கும் கொசஸ்தலை ஆறு, திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கத்திலும், திருக்கண்டலம், ஜெகந்நாதபுரம். காரனோடை சேர்த்து பெரும்பேடு, வன்னிப்பாக்கம், வல்லூர் வழியாக வந்து எண்ணூர் முகத்து வாரத்தில் கடலில் கலக்கிறது.  மழைக் காலங்களில் பல்வேறு பகுதிகளில் பெய்யும் மழையால் அணைகள் நிரம்பினால் அதில் இருந்து கொசஸ்தலை ஆற்றிற்கு தண்ணீர் திறந்து விடப்படும். ஏரிகள் நிரம்பினாலும் இந்த ஆற்றில் தண்ணீர் திறந்துவிடப்படும்.  இவ்வாறு திறந்து விடப்படும் தண்ணீர் அங்குள்ள மக்களுக்கு பயன் இல்லாமல் வீணாக கடலில் கலக்கிறது. அதனால் கொசஸ்தலை ஆற்று தண்ணீர் வீணாவதை தடுக்க ஒரு திட்டம் தயாரிக்கப்படுகிறது.

கொசஸ்தலை ஆறு வழியில் கடக்கும் ஏரிகளை இதனுடன் இணைக்கும் வகையில் திட்டம் தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.  அம்பத்தூர் ஏரி, கொரட்டூர் ஏரி, ரெட்டேரி, மாதவரம், மணலியில் உள்ள ஏரிகளை கொசஸ்தலை ஆற்றுடன் இணைத்தால் அதில் இருந்து வரும் தண்ணீர் ஏரிக்கு வந்து மக்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும்.  கொசஸ்தலை ஆற்றில் இருந்து வீணாக கடலில் கலக்கும் நீரை இந்த ஏரிகளை இணைப்பதன் மூலம் கோடைகாலத்தில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணமுடியும் என்று சென்னை மாநகராட்சி அதிகாரிகள் நம்புகிறார்கள்.

வீணாகும் தண்ணீரை ஏரியில் சேமித்து வைத்தால் அந்த பகுதிகளில் நிலத்தடிநீர் மட்டம் உயருவதோடு தண்ணீர் தட்டுப்பாடும் ஏற்படாது என்று அதிகாரிகள் கருதுகிறார்கள்.  அதனால் கொசஸ்தலை ஆற்றில் இருந்து இந்த ஏரிக்கு தண்ணீர் செல்ல எங்கெல்லாம் கால்வாய் இருக்கிறது, இல்லாத இடங்களில் கால்வாய் அமைப்பது குறித்தும் முடிவு செய்யப்படுகிறது. எந்த ஏரிக்கு கால்வாய் தேவைப்படுகிறதோ அங்கு ஏற்படுத்தி கொசஸ்தலை ஆற்றுடன் இணைக்கு மாறும் திட்டம் விரைவில் தயாரிக்கப்பட உள்ளது.

339 ஏக்கர் பரப்பளவு கொண்ட மேலும் வில்லிவாக்கம் ஏரி மணல்கள் மூடப்பட்டுள்ளது. மெட்ரோ ரெயிலுக்கு தோண்டப்பட்ட சுரங்கப்பாதையில் வெளியேற்றப்பட்ட மணல் இந்த ஏரி முழுவதிலும் கொட்டப்பட்டுள்ளது. இந்த ஏரியை தூர்வார வேண்டும் என்று வழக்கு தொடரப்பட்டுள்ளது. கோர்ட்டு உத்தரவுபடி ஏரியை சீரமைக்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. உலக வங்கி உதவியுடன் ரூ.13.77 கோடி செலவில் வில்லிவாக்கம் ஏரியை சீரமைக்க திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அப்பகுதி மக்களிடம் கருத்து கேட்கும் கூட்டம் ரிப்பன் மாளிகையில் கமி‌ஷனர் கார்த்திகேயன் தலைமையில் நடந்தது.  இதில் மழைநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கலந்துகொண்டு வில்லிவாக்கம் ஏரியை சீரமைப்பது குறித்தும் கொசஸ்தலை ஆறுடன் சென்னையை ஓட்டியுள்ள ஏரிகளை இணைப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இதில் வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்த குடியிருப்போர் நலச்சங்கத்தை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

Label