OUR CLIENTS
அடையாளம் இழக்கும் ஆறுகள் தொடரும் கனிம வளங்கள் கொள்ளை! : கண்டும் காணாமல் செயல்படும் மாவட்ட நிர்வாகம்
அடையாளம் இழக்கும் ஆறுகள் தொடரும் கனிம வளங்கள் கொள்ளை! : கண்டும் காணாமல் செயல்படும் மாவட்ட நிர்வாகம் Posted on 08-Nov-2017 அடையாளம் இழக்கும் ஆறுகள் தொடரும் கனிம வளங்கள் கொள்ளை! : கண்டும் காணாமல் செயல்படும் மாவட்ட நிர்வாகம்

சிவகங்கை, நவ.8 -
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஆறு, குளங்களில் மணல் மற்றும் கிராவல், சவடு மண் கொள்ளை அதிக அளவில் நடந்து வருகிறது.  சிவகங்கை மாவட்டத்தில் வைகையாறு, நாட்டாறு, சருகணியாறு உள்ளிட்ட பெரிய மற்றும் சிறு ஆறுகள், பொதுப்பணித்துறை கண்மாய்கள் 968, ஒன்றிய கண்மாய்கள் 4 ஆயிரத்து 871 உள்ளன. ஆறுகளில் மணல் அள்ள தடைவிதிக்கப்பட்டுள்ளது.

ஆனால் கல்லல் அருகே சருகணியாற்றில் மணல் திருட்டு சர்வசாதாரணமாக நடந்து வருகிறது. இந்த ஆற்றில் அதிகமான அளவில் மழை பெய்தால் மட்டுமே நீர் தேங்கும். இதுவும் சாதகமாகி போவதால் மண் திருட்டு தங்கு தடையின்றி நடந்து வருகிறது. பகல் மற்றும் இரவு நேரங்களில் டிராக்டர்கள், லாரிகளில் அள்ளப்பட்டு மணல் விற்பனை செய்யப்படுகிறது. 

தினந்தோறும் அள்ளப்படும் மணலால் ஆற்றுப்பகுதியில் பெரிய அளவிலான பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் முற்றிலும் நீர் இல்லாமல் விவசாயம் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதேபோல் மானாமதுரை, திருப்புவனம் தாலுகா பகுதி வழியாக செல்லும் வைகையாற்றில் பகல் மற்றும் இரவு நேரங்களில் மணல் அள்ளப்படுகிறது. இதனால் மழைக்காலங்கள் அல்லது அணையில் நீர் திறந்து அவை ஆற்றில் வந்தாலும் விவசாயத்திற்கோ அல்லது குடிநீர் தேவைக்கோ பயன்படாத நிலை உள்ளது. காளையார்கோவில் பகுதியில் நாட்டாறு உள்ளது. இதன் உட்பிரிவாக பல்வேறு கால்வாய்கள் உள்ளன. இதில் நீர் இல்லாததால் இங்கும் மணல் திருட்டு நடந்து வருகிறது. மேலும் அதப்படக்கி குரூப், ஆல்பட்ட விடுதி குரூப்பில் உள்ள நென்மேனி, கண்ணகிபுரம், பனங்குடி, கடியாவயல், கலசாங்குடி, கள்ளிக்குடி பகுதி, பெரியகண்ணனூர் குரூப் பகையஞ்சான், கடம்பங்குடி, கண்ணமுத்தான்கரை, சேம்பார் குரூப் மற்றும் ஆற்றை ஒட்டியுள்ள கிராமங்களில் மணல் திருட்டு நடந்து வருகிறது. இதுதவிர, கண்மாய் மற்றும் கிராவல் மண் அள்ள அனுமதி பெற்றவர்கள்  அனுமதியின்றி பல மீட்டர் ஆழத்திற்கு அள்ளி வருகின்றனர். திருப்புவனம் அருகே கானூர், கல்லூரணி, மாத்தூர், கண்ணாரிருப்பு, படமாத்தூர் பகுதிகளில் சவடு மண் பல மீட்டர் ஆழத்திற்கு அள்ளப்படுவதாக புகார் எழுந்துள்ளது. ஆறுகளில் மணல் திருட்டு, கிராவல் மண் திருட்டு நடப்பது வருவாய்த்துறை அதிகாரிகள், போலீஸ் உள்ளிட்ட அனைவருக்கும் தெரியும். ஆனால் அனைவரும் கவனிக்கப்பட்டு விடுவதால் மணல் திருட்டை கண்டுகொள்ளாமல் உள்ளனர். மணல் அள்ளிச்செல்லும் வாகனங்களை மறித்து வருவாய்த்துறையினர், போலீசுக்கு தகவல் தெரிவித்தாலும் சம்பவ இடத்திற்கு வந்து இனிமேல் இப்படி செய்யக்கூடாது என எச்சரிக்கை மட்டும் செய்து அனுப்பிவிடுகின்றனர். 

இது குறித்து கிராமத்தினர் கூறியதாவது:  அரசு அனுமதி இல்லாமல் மணல் அள்ளி வருபவர்கள் மீது பல்வேறு புகார் மனு அளித்தும் பயனில்லை. கையும், களவுமாக வாகனங்களை சிறைப்பிடித்து கொடுத்தாலும் விட்டு விடுகின்றனர். தற்போது மணல், சவடு, கிராவல் மண் கொள்ளை அதிக அளவில் நடந்து வருகிறது. ஒரு நாளைக்கு பல லோடு மண் அள்ளப்படுகிறது. அரசு அதிகாரிகளின் துணையோடு திருட்டு நடக்கிறது. மாவட்ட நிர்வாகத்தினரும் கண்டும் காணாமல் உள்ளனர் என்றனர். 

Label