OUR CLIENTS
பண மதிப்பிழப்பு- ஜி.எஸ்.டி.க்கு எதிரான போராட்டம் தொடரும் : மு.க.ஸ்டாலின் பேச்சு
பண மதிப்பிழப்பு- ஜி.எஸ்.டி.க்கு எதிரான போராட்டம் தொடரும் : மு.க.ஸ்டாலின் பேச்சு Posted on 09-Nov-2017 பண மதிப்பிழப்பு- ஜி.எஸ்.டி.க்கு எதிரான போராட்டம் தொடரும் :  மு.க.ஸ்டாலின் பேச்சு

மதுரை, நவ.9-
பண மதிப்பிழப்பு மற்றும் ஜி.எஸ்.டிக்கு எதிரான போராட்டம் தொடரும் என மதுரையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
 
மதுரையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-  பண மதிப்பிழப்பு அறிவிக்கப்பட்ட இந்த நாள் கருப்பு நாள் மட்டுமல்ல, வேதனை நிறைந்த நாளாகும். பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்தவுடன் கருப்பு பணத்தை ஒழிப்போம் என்று சொன்னார்கள். ஆனால் 125 கோடி மக்களுக்கும் பண மதிப்பிழப்பால் துன்பத்தை தான் ஏற்படுத்தினார்கள்.  பண மதிப்பிழப்பு நடவடிக்கை யாரும் எதிர் பாராமல் திடீரென்று இரவு நேரத்தில் அறிவிக்கப்பட்டது. நள்ளிரவு நேரத்தில் தான் நம் நாடு சுதந்திரம் பெற்றது. அதே இரவு நேரத்தில் தான் நாம் சுதந்திரத்தையும் இழந்தோம்.

புழக்கத்தில் இருந்த பழைய ரூ.500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் அறிவித்தார். இதன் காரணமாக மக்கள் பல துன்பங்களுக்கு ஆளாக்கப்பட்டார்கள்.  ஏ.டி.எம். வாசல்களில் கால்கடுக்க மக்கள் காத்திருந்தார்கள். பலர் பணிபுரியும் நிறுவனங்களில் விடுமுறை எடுத்து அடிப்படை தேவைகளுக்காக பணத்தை பெற வங்கிகளிலும், ஏ.டி.எம்.மிலும் காத்திருந்தனர்.  கூலித்தொழிலாளி அரிசி வாங்கக்கூட வங்கியைத் தான் நாட வேண்டிய நிலை ஏற்பட்டது. அவசர சிகிச்சைக்கு கூட பணம் பெற ஏ.டி.எம்.க்கு செல்லும் நிலை இருந்தது.

பண மதிப்பிழப்பு நடவடிக்கை ஒட்டு மொத்தமாக பணப்பழக்கத்தை முடக்கியுள்ளது. வங்கிகளிலும், ஏ.டி.எம்.களிலும் பொது மக்கள் காத்திருந்தபோது 100-க்கும் மேற்பட்டோர் இறந்தார்கள். இதற்கு பிரதமர் மோடி பதில் சொல்ல வேண்டிய நேரம் வரும்.  பண மதிப்பிழப்பு அறிவித்தபின் பல அறிவிப்புகள் ரிசர்வ் வங்கி மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. ஆனால் எந்தவித முன்னேற்பாடு திட்டங்களை அரசு செய்யவில்லை. பொருளாதார நிபுணர்களையும் கலந்து ஆலோசிக்கவில்லை.

கடந்த முறை பாரதிய ஜனதா ஆட்சியில் நிதித்துறை அமைச்சராக இருந்த யஸ்வந்த் சின்கா, பொருளாதார நிபுணராக கூறிக்கொள்ளும் சுப்பிரமணியசாமி ஆகியோரும் பண மதிப்பிழப்பிற்கு எதிராக கருத்துக்களை கூறி வருகிறார்கள்.  பாரதிய ஜனதாவின் கூட்டணி கட்சியும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. தி.மு.க. மற்றும் தோழமை கட்சிகளான காங்கிரஸ், கம்யூனிஸ்டுகளும் இந்த நடவடிக்கைக்கு முதலில் இருந்தே எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம்.

என்ன காரணம்? தனிப்பட்ட எங்களுக்கு பாதிப்பா? கட்சிக்கு பாதிப்பா? இல்லை. சிறு தொழில், குறுந்தொழில் எந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. கூலித் தொழிலாளர்கள், அமைப்பு சாரா தொழிலாளர்கள் எந்த நிலையில் உள்ளனர்? இதையெல்லாம் மனதில் வைத்துத்தான் எதிர்ப்பு தெரிவித்தோம்.  தி.மு.க. எதிர்க்கிறது என்றால் மக்கள் பிரச்சனைக்காக தான். 5 முறை தமிழகத்தில் முதல்வராக இருந்த கலைஞர் பல்வேறு நலத்திட்டங்களை மக்களுக்கு வழங்கி உள்ளார். அவர்களின் உணர்வு, உரிமைகளுக்காக எதிர்க்கிறோம்.  நாட்டிற்கு எந்த நேரத்தில் ஆபத்து வந்தாலும் அதனை தட்டிக்கேட்கும் இடத்தில் தி.மு.க. இருந்திருக்கிறது. அதன் அடிப்படையில் தான் காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான குலாம் நபி ஆசாத் பண மதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தை கூட்டியபோது அதில் தி.மு.க. சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி பங்கேற்றார். கூட்டத்தில் பல கருத்துக்கள் பேசப்பட்டன.

நவம்பர் 8-ந் தேதியை பண மதிப்பிழப்பு நாளாக, கருப்பு நாளாக நடத்திட வேண்டும் எனவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.  அதன்படி தி.மு.க. சார்பில் அன்றைய தினம் கருப்பு உடை அணிந்திட வேண்டும். கருப்பு சின்னங்களை பதிவு செய்ய வேண்டும். உண்ணாவிரதம் உள்ளிட்ட பல்வேறு போராட்ட முடிவுகளை சூழ்நிலைக்கு ஏற்ப எடுத்துக் கொள்ள வேண்டும் என தி.மு.க. செயல் தலைவர் என்ற முறையில் தெரிவித்தேன்.  தி.மு.க. மட்டுமல்லாமல் ஒத்த கருத்துக்கள் உடைய கட்சிகளின் ஆதரவோடு மாவட்ட தலைநகரங்களில் போராட்டங்கள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டது. 

ஆனால் நேற்று முன்தினம் பத்திரிகைகளில் மோடி கோபாலபுரத்திற்கு சென்று ஸ்டாலினுடன் கை குலுக்கியதால் தி.மு.க.வின் போராட்டம் நிறுத்தப்பட்டு விட்டதாக செய்திகள் வந்தன. மேலும் பாரதிய ஜனதாவுடன் தி.மு.க. கூட்டணி வைக்கும் என கற்பனை செய்திகளும் வெளியாகி உள்ளன.

பண மதிப்பிழப்புக்கு எதிராக இன்று(நேற்று) தி.மு.க. போராட்டம் 6 மாவட்டங்களை தவிர்த்து தமிழகம் முழுவதும் நடந்து வருகிறது. மழை காரணமாக 6 மாவட்டங்களுக்கு விதி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.  முன்னதாக சர்க்கரை விலை உயர்வை கண்டித்து ரேசன் கடைகளுக்கு முன்பு ஆர்ப்பாட்டம் 6-ந் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் மழை காரணமாக ஆர்ப்பாட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.  6-ந்தேதி பிரதமர் மோடி சென்னை வருகிறார். எனவே ஆர்ப்பாட்டத்தை மாலையில் வைத்துக் கொள்ளுமாறு சென்னை நகர போலீஸ் கமி‌ஷனர் தொலைபேசி மூலம் அண்ணா அறிவாலயத்துக்கு தொடர்பு கொண்டு கூறினார். ஆனால் நாங்கள் மாலை நேரங்களில் ரேசன் கடை இயங்காது. காலையிலேயே போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தோம்.

பல்வேறு விழாக்களில் கலந்து கொள்ள வந்த மோடி வயது மூப்பு காரணமாக ஓய்வெடுத்து வரும் தி.மு.க. தலைவரை மனிதாபிமான அடிப்படையில் நலம் விசாரிக்க சென்னை வந்தார். அவரை வரவேற்பதற்காக நானும் முன்கூட்டியே துபாயில் இருந்து 5-ந் தேதியே சென்னை வந்தேன்.  தி.மு.க. தலைவரை சந்தித்து நலம் விசாரித்த பிரதமர் மோடி டெல்லியில் உள்ள தனது இல்லத்துக்கு வந்து ஓய்வு எடுக்குமாறு அவரிடம் அழைப்பு விடுத்தார். இது மனிதாபிமானம் தான். அரசியலுக்கு அப்பாற்பட்டது.  ஆனால் இதை திரித்துக் கூறி குழப்பத்தை ஏற்படுத்தலாம் என முயற்சி நடக்கிறது. ஆனால் அந்த கனவு நிச்சயம் பலிக்காது.

பண மதிப்பிழப்பு காரணத்தால் பலரும் சொல்ல முடியாத கொடுமைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.  முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் பண மதிப்பிழப்பு நடவடிக்கை திட்டமிட்ட கொள்ளை. பொருளாதாரத்திற்கும், ஜனநாயகத்திற்கும் கருப்பு தினம் என கூறியுள்ளார்.  இதே போல் முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் பொருளாதார வளர்ச்சி இல்லை. வளர்ச்சி விகிதமும் குறைந்துள்ளது.  99 சதவிகித பணம் வங்கிகளுக்கே திரும்பியுள்ளதால் பண மதிப்பிழப்பின் கருப்பு பண ஒழிப்பின் நடவடிக்கை நிறைவேறவில்லை என்று கூறியுள்ளார்.

நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் அமர்தியாசென், பண மதிப்பிழப்பு நடவடிக்கை காகித பணத்தை மதிப்பிழக்க செய்து விட்டது. இது சர்வாதிகார எதேச்சதிகார நடவடிக்கை என இந்த ஆட்சியின் அவலம் பற்றி குறிப்பிட்டு உள்ளார்.   பண மதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்ட போது மத்திய அரசு 3 காரணங்களை கூறியது. 1 கள்ள நோட்டை ஒழிப்பது. 2. கருப்பு பணத்தை ஒழிப்பது. 3. தீவிரவாதத்துக்கு வரும் நிதியை தடுத்து நிறுத்துவது. ஆனால் இதில் ஒன்றையாவது மத்திய அரசு காப்பாற்றி இருக்கிறதா?.

இதேபோல் மத்திய அரசு பல குளறுபடியுடன் ஜி.எஸ்.டி. வரியை அமல்படுத்தியது. நான் அப்போது கோரிக்கை விடுத்தேன். இதனால் மனித சமுதாயத்தினர் பாதிக்கப்படுவார்கள். எனவே தயவு செய்து யோசியுங்கள். அவகாசம் கொடுங்கள். 3 மாத காலம் அவகாசம் கொடுத்தால் நல்லது என தி.மு.க. சார்பில் வலியுறுத்தினேன். ஆனால் அதை பாரதிய ஜனதா தலைமையிலான மத்திய அரசு ஏற்கவில்லை.  28 சதவீத வரியினால் மக்கள் பெரும் துயரத்துக்கு ஆளானார்கள். இதனை மத்திய அரசின் அதிகாரி இப்போது தெரிவித்துள்ளார். ஜி.எஸ்.டி. வரி விகிதம் முற்றிலும் மாற்றி அமைக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். நிதி அமைச்சகத்தின் தலைமையில் செயல்படும் ஜி.எஸ்.டி. கமி‌ஷன் என்ன முடிவு எடுத்துள்ளது? ஜி.எஸ்.டி.யில் மேலும் மாற்றம் கொண்டு வருவோம் என்று. இதனை குஜராத்தில் தற்போது தேர்தல் வருவதால் பிரதமர் மோடியே அங்கு தெரிவித்துள்ளார். அன்று எதிர்க்கட்சிகள் சொன்ன கருத்தை ஏற்க மறுத்தவர் இப்போது ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு வந்துள்ளார்.

பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த முன்னாள் நிதி அமைச்சர் யஷ்வந்த் சின்கா, சுப்பிரமணியசாமி ஆகியோரும் பணம் மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. மக்களை பாதித்துள்ளது என எதிரான கருத்தை தெரிவித்துள்ளனர்.  மத்திய அரசின் முடிவு அனைத்து தரப்பு மக்களையும் பாதித்து உள்ளது. இதனை சுட்டிக்காட்டவும், மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், டெல்லியில் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி இந்த போராட்டம் நடைபெற்று உள்ளது. இது இன்றோடு முடிகிற போராட்டம் அல்ல. நிச்சயம் தொடரும். இதனை முன்னின்று நடத்த தி.மு.க. துணை நிற்கும் என்பதை பாரதிய ஜனதா தலைமையிலான மத்திய அரசுக்கு எச்சரிக்கையாக தெரிவித்துக் கொள்கிறேன்.  இவ்வாறு அவர் பேசினார்.

Label