OUR CLIENTS
இரட்டை இலை சின்னம் விசாரணையில் ஆட்டம் காட்டிய தினகரன் : மிரட்டலை விடுத்துவிட்டு சோதனை நடத்திய ஐடி!
இரட்டை இலை சின்னம் விசாரணையில் ஆட்டம் காட்டிய தினகரன் : மிரட்டலை விடுத்துவிட்டு சோதனை நடத்திய ஐடி! Posted on 10-Nov-2017 இரட்டை இலை சின்னம் விசாரணையில் ஆட்டம் காட்டிய தினகரன் :  மிரட்டலை விடுத்துவிட்டு சோதனை நடத்திய ஐடி!

சென்னை, நவ.10
தேர்தல் ஆணையத்தில் நடைபெற்ற இரட்டை இலை சின்னம் தொடர்பான விசாரணையில் தினகரன் தரப்பு அடுத்தடுத்து குடைச்சல் கொடுத்து நெருக்கடியை ஏற்படுத்திய கோபத்தில்தான் வருமான வரித்துறை ரெய்டு நடத்தியுள்ளது என்கிறது அரசியல் வட்டாரங்கள்.

 சசிகலா குடும்பம் தொடர்புடைய அனைத்து வர்த்தக தொடர்புகளிலும் ஒரே நேரத்தில் கால் நுழைத்திருக்கிறார்கள் வருமான வரித்துறை அதிகாரிகள். கார்டன் கணக்கு வழக்குகளில் சசிகலா குடும்பத்துக்கு மட்டும் 1 லட்சம் கோடிக்கு மேல் சொத்துக்கள் இருக்கின்றன. இதற்கு மேலும் அதிமுக&வுக்குள் குழப்படி ஏற்படுத்தும் வேலைகளில் ஈடுபட்டுள்ளதால் டெல்லி உத்தரவின்பேரில் ஐ.டி நுழைந்திருக்கிறது என்கின்றனர் அதிகாரிகள்.

சென்னை நுங்கம்பாக்கம், ஆயக்கர் பவனில் உள்ள வருமானவரித்துறை அலுவலகத்தில் கடந்த சில நாட்களாகவே ரகசிய கூட்டங்கள் நடந்து வந்தன. இந்தக் கூட்டம் குறித்த தகவல்களை மேலிட அதிகாரிகள் வெகுரகசியமாகவே பாதுகாத்து வந்தனர்.  சேகர் ரெட்டி வீட்டு ரெய்டுக்குப் பிறகு, தமிழகத்தை உலுக்கியிருக்கிறது சசிகலா தொடர்புடைய வர்த்தக மையங்களில் நடக்கும் சோதனைகள். தினகரன், திவாகரன், டாக்டர் வெங்கடேஷ், கலியபெருமாள், கிருஷ்ணபிரியா, விவேக் ஜெயராமன் ஆகியோர் மட்டுமல்லாமல், விவேக்கின் மாமனார் பாஸ்கர், பரணி கார்த்திக் என பணத்தை நிர்வாகம் செய்து வந்த அனைவருமே இந்தச் சோதனையில் வளைக்கப்பட்டிருக்கிறார்கள். 

சோதனை குறித்து பேசிய பா.ஜ.க  பிரமுகர், இரட்டை இலை விவகாரம் எடப்பாடி பழனிசாமி தரப்புக்குக் கூடுதல் தலைவலியை உருவாக்கியிருக்கிறது. பன்னீர்செல்வத்தைவிடவும் எடப்பாடி தரப்பினர் ஆட்சி அதிகாரத்தில் செயல்படும் விதங்களை டெல்லி ஏற்றுக் கொண்டுவிட்டது. இவர்கள் தரப்புக்கே இலை செல்ல வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர். ஆனால், இலை விவகாரத்தில் தினகரன் தேடித் தேடி கொண்டு வரும் சாட்சிகளும் மூத்த வழக்கறிஞர்களின் வாதமும் ஆணையத்துக்குக் கூடுதல் தலைவலியை ஏற்படுத்திவிட்டது. நாங்களே நினைத்தாலும் எடப்பாடி பழனிசாமிக்கு இலையைக் கொடுக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது என பா.ஜ.க மேலிடத்துக்குத் தெரியப்படுத்தியுள்ளனர்.

இதனையடுத்து, மன்னார்குடி உறவுகளைத் தொடர்பு கொண்ட டெல்லி தரகர் ஒருவர், முப்பது ஆண்டுகளில் பல லட்சம் கோடிகளைச் சம்பாதித்துவிட்டீர்கள். உங்கள் வர்த்தக தொடர்புகளை நாங்கள் ஆராயவில்லை. அப்படிச் செய்தால் என்ன நடக்கும் என்பதும் உங்களுக்குத் தெரியும். இருக்கும் பணத்தை வைத்துக் கொண்டு வர்த்தகத்தில் கவனம் காட்டுங்கள். நாங்கள் பதவியில் இருக்கும் வரையில் உங்களால் அரசியலுக்குள் கால் பதிக்க முடியாது.  நாங்கள் சொல்லும் நபருக்கு சின்னம் செல்லாவிட்டால், அனைத்தும் கெட்டுப் போகும். உங்களுக்கும் நல்லது நடக்காது' எனப் புரிய வைத்திருக்கிறார்.

இதற்குப் பதில் கொடுத்த மன்னார்குடி உறவினர் ஒருவர், இலை இருக்கும் வரையில்தான் கட்சிக்குள் குடும்பத்தின் ஆதிக்கம் இருக்கும். அதுவும் போய்விட்டால், இத்தனை வருடம் உழைத்த பலன் கிடைக்காமல் போய்விடும். எடப்பாடி கைக்கு சின்னம் போய்விட்டால், கட்சித் தொண்டர்களையும் வளைத்துவிடுவார்கள். அதனால், சின்னத்தை விட்டுக் கொடுக்கும் முடிவில் நாங்கள் இல்லை என மௌனமாகக் கூறியிருக்கிறார்.

இந்தப் பதில் டெல்லி பா.ஜ.க மேலிடத்துக்கு கூடுதல் கடுப்பைக் கொடுத்திருக்கிறது. நாங்கள் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் இருக்கிறீர்கள். இந்தமுறை சாதாரண ரெய்டு என நினைத்துவிட வேண்டாம் என எச்சரித்துவிட்டே களம் இறங்கியுள்ளனர். இதன் தொடர்ச்சியாக கிரிமினல் வழக்குகளை தினகரன் தரப்பினர் எதிர்கொள்ள வேண்டியது வரும் என்றார் விரிவாக. 

தினகரன் தரப்பினருக்கே இரட்டை இலை செல்ல வேண்டும். அதனால் தான் இறுதி வாதம் நிறைவு பெற்றும், சின்னம் குறித்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவேதான், தினகரன் தரப்பினரை சிக்க வைக்க வேண்டும் என்று அனைத்து இடங்களிலும் ஒரே நேரத்தில்  இந்த ஐடி ரெய்டு.   இரட்டை இலை தொடர்பாகவே திட்டுமிட்டு ஐடி ரெய்டு நடத்தப்பட்டுள்ளது என்று அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. உண்மை எதுவென்று காலம்தான் பதில் சொல்லும், பொறுத்தார் பூமி ஆள்வார்... பொறுத்திருப்போம்.

Label