OUR CLIENTS
சின்னம்மாவும் நானும் அரசியலில் இருக்கக்கூடாது என்பதற்காக சதி நடக்கிறது :டிடிவி தினகரன் ஆவேசம்
சின்னம்மாவும் நானும் அரசியலில் இருக்கக்கூடாது என்பதற்காக சதி நடக்கிறது :டிடிவி தினகரன் ஆவேசம் Posted on 10-Nov-2017 சின்னம்மாவும் நானும் அரசியலில் இருக்கக்கூடாது என்பதற்காக சதி நடக்கிறது   :டிடிவி தினகரன் ஆவேசம்

சென்னை, நவ.9
சின்னம்மாவும் நானும் அரசியலில் இருக்கக்கூடாது என்பதற்காக சதி நடக்கிறது.  வருமான வரித்துறை அதிகாரிகள் தன் வீட்டில் எந்த சோதனையும் நடத்தவில்லை என்றும், ஜெயிலுக்குப் போனாலும் இதற்கு காரணமானவர்களை விடமாட்டேன் என்றும் டிடிவி தினகரன் தெரிவித்தார்.

வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று தமிழகம் முழுவதும் ஒரே சமயத்தில் சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் வீடுகள் மற்றும் நிறுவனங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். ஜெயா டிவி அலுவலகத்தில்  தொடங்கி கோடநாடு எஸ்டேட் வரை  இந்த சோதனைப் பட்டியல் நீள்கிறது.  சென்னையில் உள்ள டிடிவி தினகரன் வீட்டிலும் சோதனை நடப்பதாக தகவல் வெளியானது. இதற்காக போலீஸ் பாதுகாப்புடன் சென்றனர். அதேசமயம் தினகரன் வீட்டில் கோபூஜை நடத்தப்பட்டது. பூஜையின் தினகரனுடன் அவர் மனைவியும் பங்கேற்று பசுவுக்கு வாழைப்பழங்கள் வழங்கினார்.

சிறிது நேரம் கழித்து டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-  நேற்று காலையில் நான் குளித்துக்கொண்டிருக்கும்போது, யாரோ அதிகாரிகள் வந்திருப்பதாக கூறினார்கள். வெளியே வந்து பார்த்தேன். யாரும் இல்லை. 2 போலீஸ்காரர்கள் மட்டும் வாசலில் நின்றுகொண்டிருந்தனர். அவர்களிடம் கேட்டபோது, வருமான வரித்துறை அதிகாரி வந்ததாகவும், வெளியே சென்றிருப்பதாகவும் கூறினார்கள். உடனே அவர்களிடம் நான் அதிகாரியின் பாதுகாப்புக்கு வந்தீர்களா? இல்லை என்னை வீட்டுச் சிறையில்வைக்க வந்தீர்களா? என்று கேட்டேன்.  வெளியே சென்ற அந்த அதிகாரி வருவாரா வரமாட்டாரா? என தெரியவில்லை. விசாரித்தபோது, ஆரோவில் பகுதியில் உள்ள என் பண்ணை வீட்டில் சோதனை நடத்தப்படுவதாக தகவல் வந்தது. உடனே என் வழக்கறிஞர்களை அங்கு அனுப்பி வைத்தேன்.

இவர்கள் தானாக வரவில்லை. யாரோ  ஏவி வந்திருக்கிறார்கள். சின்னம்மாவும் நானும் அரசியலில் இருக்கக்கூடாது என்பதற்காக சதி நடக்கிறது.  இதேபோன்று அம்மாவை அரசியலைவிட்டு விரட்டிவிட வேண்டும் என்று இதற்கு முன்பு நினைத்தனர். அவருக்கு பாதுகாப்பாக இருந்து கட்சியை பாதுகாத்தோம்.  எங்களைப் பிடித்து ஜெயிலில் போட்டாலும் வெளியே வந்து, இதற்கு காரணமானவர்களை விடமாட்டேன். வருமான வரி குற்றத்துக்கு தூக்குத் தண்டனை எல்லாம் விதிக்க முடியாது.  இந்த சோதனையின் பின்னணியில் மத்திய அரசு இருக்கிறது என்பது வெளிப்படையாக தெரிகிறது. எந்த வழக்கு போட்டாலும் சந்திக்க தயாராக இருக்கிறோம்.

எங்கள் குடும்பத்திற்கு பயம் என்பது கிடையாது. 33 வருடங்களாக சோதனைகளை சந்தித்து வரும் நாங்கள் இந்த சோதனைகளுக்கு எல்லாம் பயப்பட மாட்டோம்.  எங்களை அடக்கி ஒடுக்க வேண்டும் என்று நினைத்தால் அவர்கள் தலையில் அவர்களே மண்ணை வாரி போட்டுக் கொள்வார்கள்.  ஒரு கட்சியை அழித்து இன்னொரு கட்சி வளர முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

Label