OUR CLIENTS
உத்தரப்பிரதேச உள்ளாட்சித் தேர்தல் அறிக்கையை பாஜக வெளியிட்டது
உத்தரப்பிரதேச உள்ளாட்சித் தேர்தல் அறிக்கையை பாஜக வெளியிட்டது Posted on 13-Nov-2017 உத்தரப்பிரதேச உள்ளாட்சித் தேர்தல் அறிக்கையை பாஜக வெளியிட்டது

லக்னோ, நவ.13
உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தல் அறிக்கையை பாஜக நேற்று வெளியிட்டது.  மாநில பாஜக அலுவலகத்தில் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளாட்சி தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.

தேர்தல் அறிக்கைக்கு “சங்கல்ப பத்ரா” என பெயரிடப்பட்டுள்ளது.  மொத்தம் 28 வாக்குறுதிகள் தேர்தல் அறிக்கையில் இடம்பெறுகின்றன. அவற்றில் மிக முக்கியமானவை பொது இடங்களில் வைஃபை வசதி இலவசமாக வழங்கப்படும். பெண்களுக்கென பிங்க் டாய்லெட்கள் அமைக்கப்படும் என தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் மாநில துணை முதல்வர்கள் கேசவ் பிரசாத் மெளரியா, தினேஷ் சர்மா ஆகியோரும், நகர்ப்புற வளர்ச்சி அமைச்சர் சுரேஷ் கண்ணாவும், மாநில பாஜக தலைவர் மகேந்திர நாத் பான்டேயும் கலந்துகொண்டனர். 

தேர்தல் அறிக்கையை வெளியிட்டு பேசிய முதல்வர் யோகி ஆதித்யநாத், அயோத்தியா, மதுரா ஆகிய  நகரங்கள் மாநகராட்சிகளாக உயர்த்தப்பட்டுள்ளன. இங்கு முதல்முறையாக மாநகராட்சி தேர்தல்கள் நடைபெற உள்ளன.  இந்த தேர்தல் குறித்த அறிக்கையை வெளியிடுவதில் நான் பெரிதும் மகிழ்கிறேன் எனக் கூறினார். 

மாநில பாஜக தலைவர் மகேந்திர நாத் பேசும்போது, அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக பாஜக தேர்தலில் போட்டியிடுவதில்லை, மக்களுக்கு சேவை செய்வதற்காகவே போட்டியிடுகிறது என்று கூறினார்.  மக்களுக்கு சிறந்த தரமான வாழ்க்கையை அமைத்துத் தர வேண்டும் என்பதுதான் பாஜகவின் நோக்கம்.  நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களில் பாஜக பெரும் வெற்றிபெறும் என மகேந்திர நாத் பான்டே குறிப்பிட்டார்.  உத்தரப்பிரதேசத்தில் மொத்தம் 652 நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.

நவம்பர் 22, 26, 29 ஆகிய 3 தேதிகளில் 3 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும் எனவும், டிசம்பர் 1ம் தேதி வாக்குக்கள் எண்ணப்படும் எனவும் மாநிலத் தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.

இந்த 652 அமைப்புகளில் மொத்தம் 3.32 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.  16 மாநகராட்சிகளுக்கும், 198 முனிசிபாலிட்டி போர்டுகளுக்கும், 439 நகராட்சிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது.

Label