OUR CLIENTS
12 மணி நேரம் இயங்கும் தனியார் பள்ளி விசாரணை நடத்த கோரி மாணவர்கள் போராட்டம்
12 மணி நேரம் இயங்கும் தனியார் பள்ளி விசாரணை நடத்த கோரி மாணவர்கள் போராட்டம் Posted on 13-Nov-2017 12 மணி நேரம் இயங்கும் தனியார் பள்ளி  விசாரணை நடத்த கோரி மாணவர்கள் போராட்டம்

 ஐதராபாத், நவ.13
தெலுங்கானாவில் தனியார் பள்ளி ஒன்றில் நீண்ட நேரம் வகுப்பறைகள் செயல்படுவது தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் சைதன்யபுரி என்ற பகுதியில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் காலை 6.30 மணிக்கு தொடங்கும் பாடவேளைகள் மாலை 6.30 மணி வரை நடைபெற்று வருகிறது. இதனால் அங்கு படிக்கும் மாணவர்கள் தங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதுதொடர்பாக அந்த மாணவர்கள் கூறுகையில், மற்ற பள்ளிகளை விட எங்கள் பள்ளி காலை 6.30 மணிக்கு ஆரம்பித்துவிடும். காலை 8 மணிக்குதான் முதல் வகுப்பு ஆரம்பமாகும். மாலை 4.30 மணிக்கு வகுப்புகள் முடிந்து விடும்.   அதன்பின்னர், டியூசன், வீட்டுப்பாடம் என மாலை 6.30 மணி வரை பாடம் நடத்துகின்றனர். பள்ளி முடிந்து வீட்டுக்கு சென்று மற்ற வேலைகள் முடிந்து தூங்க செல்வதற்கு இரவு 11 மணியாகிறது. மறுநாள் காலையில் 4.30 மணிக்கு எழுந்தால்தான் காலை 6.30 மணிக்கு பள்ளியில் இருக்க முடிகிறது. இதனால் தூக்கம் கெட்டு எங்களுக்கு மிகுந்த மன அழுத்தம் ஏற்படுகிறது. இதற்கு ஒரு நல்ல தீர்வு காண வேண்டும். எனவே பள்ளி நிர்வாகத்தினர் பாட வேளைகளின் காலத்தை குறைக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து சமூக அமைப்பினர் கூறுகையில், தனியார் பள்ளிகளில் மாணவர்கள் குறைந்தது 13 முதல் 14 மணி நேரம் வரை படித்து வருகின்றனர். இதனால் அவர்களின் உடல் நிலையில் பாதிப்பு ஏற்படுகிறது. இதுதொடர்பாக மாவட்ட கலெக்டரிடம் தெரியப்படுத்தி உள்ளோம். அவர் விசாரிப்பதாக உறுதியளித்துள்ளார் என தெரிவித்துள்ளனர்.   ஆனால், மாணவர்கள் கூறிவரும் புகாருக்கு பள்ளி நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது. நீண்ட நேரம் பாடங்கள் நடத்தப்படுவது தொடர்பாக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   ஏற்கனவே, மராட்டிய மாநிலம் புனேவில் 7 கிலோ சுமை கொண்ட புத்தக பைகளை தூக்குவதன் சிரமம் எங்களுக்கு மட்டும்தான் தெரியும் என பள்ளி மாணவர்கள் சிலர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்து பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Label