10 நாடுகளை உலுக்கிய ‘ஈராக்’ நிலநடுக்கம் Posted on 13-Nov-2017
பாக்தாத், நவ.13
ஈராக்- ஈரான் எல்லையில் ஏற்பட்ட பயங்கரமான நிலநடுக்கமானது பாகிஸ்தான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், குவைத், லெபனான், துருக்கி, இஸ்ரேல் உள்ளிட்ட 10 நாடுகளை அதிர வைத்திருக்கிறது.
ஈராக்கின் ஹலாப்ஜா நகரில் இருந்து 31 கி.மீ. தொலைவில் இன்று அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டரில் இது 7.3 ஆக பதிவாகி இருந்தது. தலைநகர் பாக்தாத்தில் இருந்து 350 கி.மீ. தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்நிலநடுக்கத்தால் ஹலாப்ஜா நகரே உருக்குலைந்து போயுள்ளது. அத்துடன் ஈராக்கின் அத்தனை மாகாணங்களையும் இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உலுக்கி எடுத்திருக்கிறது. இதனால் வீடுகள், கட்டிடங்களை விட்டு பொதுமக்கள் அலறியடித்து வெளியேறினர்.
அதேநேரத்தில் இந்நிலநடுக்கமானது ஈராக் உட்பட 10 நாடுகளையும் அதிர வைத்திருக்கிறது. ஈராக், ஈரான், துருக்கி, சிரியா, குவைத், ஜோர்ட்டான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், அர்மீனியா, அஜர்பைஜான், ஜார்ஜியா ஆகிய நாடுகளையும் இந்நிலநடுக்கம் குலுங்க வைத்திருக்கிறது. வளைகுடா நாடுகளைச் சேர்ந்தவர்கள் தாங்கள் நிலநடுக்கத்தை உணர்ந்ததாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
பசிபிக் கடற்கரை நாடான கோஸ்டா ரிக்காவிலும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. அதன் தலைநகரான சான் ஜோஸில் அதிகபட்சமாக 6.5 என்கிற அளவில் நிலநடுக்கம் பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கத்தால் பசிபிக் பகுதியில் சுனாமி வர வாய்ப்புகள் இல்லை என்று அமெரிக்க பருவநிலை மையம் தெரிவித்து உள்ளது.
இந்நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் சரிந்து விழுந்தன. இந்த இடிபாடுகளில் சிக்கி 135 பேர் பலியாகி உள்ளனர். 500க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். சக்திவாய்ந்த இந்த நிலநடுக்கமானது பாகிஸ்தான், ஈரான், குவைத், துபாய், இஸ்ரேல் என பல நாடுகளையும் அதிரவைத்துள்ளது. கடந்த 2003-ம் ஆண்டு ஈரானில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டு 26,000 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.
நிலநடுக்கத்தையொட்டி நகரில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. குண்டுவெடித்தது போன்ற இந்த நிலநடுக்கத்தின் விளைவுகள் ஏற்பட்டதாக அங்குள்ளவர்கள் கூறுகின்றனர்.
ஈரான், ஈராக் உள்ளிட்ட நாடுகளில் இந்தியர்கள் அங்குள்ள எண்ணெய் நிறுவனங்களிலும் பல்வேறு நிறுவனங்களிலும் பணியாற்றுகின்றனர். எல்லையில் நிகழ்ந்த நிலநடுக்கத்தால் ஏராளமானோர் உயிரிழந்துள்ள நிலையில் அங்கு இந்தியர்களின் நிலை என்னவென்று தெரியவில்லை. துருக்கி, சிரியா, குவைத், ஜோர்டான், ஐக்கிய அரபு அமீரம், ஆர்மேனியா, அஜர்பைஜான் மற்றும் ஜார்ஜியா ஆகிய நாடுகளில் நிலநடுக்கம் உணரப்பட்டது. ஈராக்- ஈரான் நிலநடுக்கத்தைத் தவிர்த்து ஏனைய இடங்களில் வசித்து வரும் இந்தியர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.