OUR CLIENTS
கொடநாடு கிரீன் டீ எஸ்டேட்டில் கோடிக்கணக்கில் பழைய ரூபாய் நோட்டுக்கள் பறிமுதல்
கொடநாடு கிரீன் டீ எஸ்டேட்டில் கோடிக்கணக்கில் பழைய ரூபாய் நோட்டுக்கள் பறிமுதல் Posted on 14-Nov-2017 கொடநாடு கிரீன் டீ எஸ்டேட்டில் கோடிக்கணக்கில் பழைய ரூபாய் நோட்டுக்கள் பறிமுதல்

கோத்தகிரி, நவ.14
கொடநாடு கிரீன் டீ எஸ்டேட்டில் 5-வது நாளாக நடைபெற்ற சோதனையில் கோடிக்கணக்கில் பழைய ரூபாய் நோட்டுக்கள், 3 கிலோ தங்கத்தை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்தனர். 
 
கொடநாடு கிரீன் டீ எஸ்டேட்டில் நேற்று 5-வது நாளாக சோதனை நடைபெற்று வருகிறது.  தமிழகம் முழுவதும் சசிகலா மற்றும் டி.டி.வி தினகரன் உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்களின் விடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த 9-ம் தேதி முதல் சோதனை மேற்கொண்டனர்.   பெரும்பாலான இடங்களில் சோதனை முடிந்த நிலையில் கொட நாட்டில் உள்ள சசிகலாவுக்கு சொந்தமான கிரீன் டீ எஸ்டேட்டில் நேற்று  5-வது நாளாக சோதனை நடைபெற்றது. இதற்காக கூடுதல் அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு உள்ளனர். நேற்று காலை 2 கார்களில் 4 அதிகாரிகள் சென்று சோதனை நடத்தி வருகிறார்கள்.

மேலும் எஸ்டேட் மேலாளர் நடராஜனிடம் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது. இவருக்கும் கொடநாடு எஸ்டேட்டில் மர வேலை செய்து கொடுத்த கேரளாவை சேர்ந்த சஜிவனுக்கும் எப்படி பழக்கம் ஏற்பட்டது ? அவர்களுக்குள் உள்ள தொடர்பு என்ன? என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.  மேலும் சசிகலாவுக்கு வேறு ஏதேனும் சொத்துக்கள் உள்ளதா? பினாமி பெயரில் சொத்துக்கள் சேர்த்து உள்ளாரா? என வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்துகிறார்கள். விசாரணையின் போது எஸ்டேட் மேலாளர் நடராஜன் தனது மனைவி மற்றும் குழந்தைகளை பார்த்து பேச வேண்டும் என கூறினார். இதையடுத்து நடராஜனின் மனைவி மற்றும் குழந்தைகளை அருகில் உள்ள கொடநாடு எஸ்டேட்டில் இருந்து அழைத்து வந்து 20 நிமிடங்கள் பேச அனுமதித்தனர்.

வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையின் போது கிரீன் டீ எஸ்டேட்டில் இருந்து தடை செய்யப்பட்ட பழைய ரூபாய் நோட்டுக்கள் கோடிக்கணக்கிலும், 3 கிலோ தங்க நகைகளும் மற்றும் ஏராளமான ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.   இதனை தனியார் வாகனம் மூலம் வருமான வரித்துறை அதிகாரிகள் சென்னை கொண்டு சென்றுள்ளனர். அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வந்தாலும் கொடநாடு மற்றும் கிரீன் டீ எஸ்டேட்டுகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் வழக்கம் போல் தங்கள் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.  சோதனையின் போது டி.டி.வி. தினகரன் ஆதரவாளர்கள் எஸ்டேட் முன் குவிந்து வருவதால் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

Label