OUR CLIENTS
பயிர் காப்பீடு செய்ய மறுக்கும் வங்கிகள் : விவசாயிகள் அலைக்கழிப்பு
பயிர் காப்பீடு செய்ய மறுக்கும் வங்கிகள் : விவசாயிகள் அலைக்கழிப்பு Posted on 14-Nov-2017 பயிர் காப்பீடு செய்ய மறுக்கும்  வங்கிகள்   : விவசாயிகள் அலைக்கழிப்பு

ராமநாதபுரம், நவ.14
பயிர்க் காப்பீடு செய்ய தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகள் மற்றும் தேசிய வங்கிகள் மறுப்பதால் விவசாயிகள் என்ன செய்வதென்று தெரியாமல் பரிதவித்து வருகின்றனர்.

 ராமநாதபுரம் மாவட்டத்திலேயே திருவாடானை தாலுகாவில்தான் அதிகளவில் 43 ஆயிரம் ஹெக்டேரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது போதிய மழை பெய்யாமல் சாகுபடி தாமதமாகி வருகிறது. இந்நிலையில் பிரதம மந்திரியின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் காப்பீடு செய்ய விவசாயிகள் கிராம நிர்வாக அலுவலரிடம் அலைந்து அடங்கல் வாங்கிக்கொண்டு தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்திற்குச் சென்றனர். ஆனால், அங்கு காப்பீடு செய்ய ஊழியர்கள் மறுக்கின்றனர். 

தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்தில் கடன் பெறும் விவசாயிகளுக்கு மட்டும்தான் காப்பீடு செய்வோம், கடன்பெறா விவசாயிகளுக்கு இந்த ஆண்டு காப்பீடு செய்யமாட்டோம் எனக் கூறி மறுக்கின்றனர். இதையடுத்து விவசாயிகள் தேசிய வங்கிகளுக்குச் சென்றால் அங்கும் காப்பீடு செய்ய மறுக்கின்றனர் இதனால் வாங்கிய அடங்கலை கையில் வைத்துக்கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் விவசாயிகள் பரிதவிக்கின்றனர். இது குறித்து விவசாய சங்கத் தலைவர் நாகநாதன் கூறுகையில், “சென்ற ஆண்டு வறட்சியால் விவசாயம் பாதிக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு இதுவரை பருவமழை சரியாகப் பெய்யவில்லை. இதனால், காப்பீடு செய்ய விவசாயிகள் சென்றால் அதை வாங்க மறுத்து கூட்டுறவு கடன் சங்கம் முதல் தேசிய வங்கிகள் வரை விரட்டியடிக்கின்றன.   நவ.30ம் தேதிதான் காப்பீடு செய்ய கடைசி நாள். அதற்கு இன்னும் கொஞ்சம் நாட்களே உள்ள நிலையில், வங்கிகள் மறுப்பதால் காப்பீடு செய்ய முடியாமல் தவித்து வருகிறோம். 

அரசு அதிகாரிகளும் விவசாயிகளை மோசமாக நடத்துவதால்தான் வங்கிகள் வாங்க மறுக்கின்றன. அடங்கல் வாங்கி பல நாட்களாக கையில் வைத்துக்கொண்டு செய்வதறியாமல் விவசாயிகள் தவித்து வருகிறோம். திருவாடானை பகுதியில் அதிக விவசாயிகள் உள்ளனர். காப்பீட்டு திட்டத்தில் முன்கூட்டியே காப்பீடு செய்தால்மட்டும்தான் முழுமையாக காப்பீடு பெற முடியும். ஆனால் வங்கிகள் தற்போது வாங்க மறுத்துவிட்டு பின்னர் காப்பீடு செய்ய முன்வந்தால் கடைசியாக சில நாட்களில் காப்பீடு செய்து முடிக்க முடியாது எனக் கூறி விடுகின்றனர்.  எனவே, காப்பீடு செய்ய மறுக்கும் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகள் மற்றும் தேசிய வங்கிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், உடனடியாக காப்பீடு செய்ய வங்கி அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்” என்றார். கொன்னக்குடியைச் சேர்ந்த விவசாயி வீரமணி கூறுகையில், “தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் கடன்பெறா விவசாயிகளிடம் காப்பீடு செய்ய மறுக்கின்றன. 15ம் தேதிக்குப் பிறகு அதுவும் கூட்டுறவு வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் மட்டும் காப்பீடு செய்யலாம் என்கின்றனர். சென்ற ஆண்டு தேசிய வங்கிக் கணக்கு இருந்தாலும் அதை வைத்து கூட்டுறவு வங்கியில் காப்பீடு செய்தோம். இப்போது ஏற்க மறுக்கின்றனர்.   இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அனைவரும் கூட்டுறவு வங்கியில் கணக்குத் தொடங்க சாத்தியம் இல்லை. அப்படி கணக்கு தொடங்கச் சென்றாலும் கூட்டுறவு வங்கி ஊழியர்கள் அனுமதிப்பதில்லை. இதனால் பல விவசாயிகள் இந்த ஆண்டு காப்பீடு செய்யமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 

தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகள் காப்பீடு செய்தவுடன் மறுதினமே ஆன்லைனில் உரிய காப்பீட்டு அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. பல கிராமங்களில் இணையதள வசதி இல்லை. இதனால்தான் மறுப்பதாக கூட்டுறவு வங்கி அதிகாரிகள் கூறுகின்றனர். சென்ற ஆண்டைப்போல காப்பீடு செய்தவர்கள் பட்டியலை சி.டி.யாக தயார்செய்து உரிய வங்கிகளுக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுத்தால் காப்பீடு செய்ய தயக்கம் இல்லை என்கின்றனர். எனவே உண்மைநிலையைக் கண்டறிந்து  அனைத்து விவசாயிகளும் காப்பீடு செய்ய மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

Label