OUR CLIENTS
ஒரே மருத்துவருடன் இயங்கும் அரசு மருத்துவமனை புகார் அளித்தும் அலட்சியமாக இருக்கும் அதிகாரிகள்
ஒரே மருத்துவருடன் இயங்கும் அரசு மருத்துவமனை புகார் அளித்தும் அலட்சியமாக இருக்கும் அதிகாரிகள் Posted on 14-Nov-2017 ஒரே மருத்துவருடன் இயங்கும்  அரசு மருத்துவமனை  புகார் அளித்தும் அலட்சியமாக இருக்கும் அதிகாரிகள்

சின்னசேலம், நவ.14
 சின்னசேலத்தில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் பஸ்நிலையம் அருகில் ஆரம்ப சுகாதார நிலையம் கட்டப்பட்டது. இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் சின்னசேலத்தை சுற்றி உள்ள நா.குப்பம், பாண்டிங்குப்பம், பூசப்பாடி, எலவடி, கல்லாநத்தம், தகரை மற்றும் சின்னசேலம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் மருத்துவ சிகிச்சை பெற்று வந்தனர். 

சின்னசேலம் பஸ் நிலையத்திற்கு அருகில் ஆரம்ப சுகாதார நிலையம் இருந்ததால் மக்களுக்கு பயன் உள்ளதாக இருந்தது. அதன்பிறகு சின்னசேலம் ஆரம்ப சுகாதார நிலையம் 30 படுக்கை வசதிகளுடன் கூடிய மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது.  இதனால் கூகையூர் சாலையில் அரசு மாணவர் விடுதிக்கு அருகில் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் கட்டப்பட்டது. இதனால் பேருந்துகளில் இருந்து வரும் மக்கள் 3 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று மருத்துவ சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் கடந்த 5 மாதங்களுக்கு முன் சின்னசேலம் ஆரம்ப சுகாதார நிலையம் தரம் உயர்த்தப்பட்ட அரசு மருத்துவமனையாக மாற்றப்பட்டது. அரசு ஆரம்ப சுகாதார நிலையமாக இருந்தபோது சுமார் 4 மருத்துவர்கள் இருந்தனர். ஆனால் தற்போது ஒரு மருத்துவர் மட்டுமே உள்ளார். 

இதனால் கிராமப்புறத்தில் இருந்து வரும் நோயாளிகள் நீண்ட நேரம் காத்திருந்து சிகிச்சை பெறும் நிலை உள்ளது. குறிப்பாக கர்ப்பிணிகளும், வயதான முதியவர்களும் பட்டினியால் வாடி வதங்கும் நிலை உள்ளது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட மக்கள் மாவட்ட கலெக்டருக்கு புகார் மனு அனுப்பி உள்ளனர். இதை கண்காணிக்க வேண்டிய விழுப்புரம் மாவட்ட இணை இயக்குநரும் நோயாளிகள் நலனில் அக்கறை காட்டாமல் அலட்சியமாக உள்ளார். ஆகையால் சின்னசேலம் அரசு மருத்துவமனையை கலெக்டர் ஆய்வு செய்து பணிக்கு வராத மருத்துவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Label