OUR CLIENTS
அதிமுகவை அக்கட்சியினரே அழித்து விடுவார்கள் : பொன்.ராதாகிருஷ்ணன் பொன்னான வார்த்தைகள்
அதிமுகவை அக்கட்சியினரே அழித்து விடுவார்கள் : பொன்.ராதாகிருஷ்ணன் பொன்னான வார்த்தைகள் Posted on 15-Nov-2017 அதிமுகவை அக்கட்சியினரே அழித்து விடுவார்கள் : பொன்.ராதாகிருஷ்ணன் பொன்னான வார்த்தைகள்

நாகர்கோவில், நவ.15
அதிமுகவை  வெளியில் இருந்து யாரும் வந்து அழிக்க வேண்டியது இல்லை. அக்கட்சியை அதிமுகவினரே அழித்து விடுவார்கள் என மத்திய அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன் கூறியுள்ளார்.

நாகர்கோவிலில்  மத்திய அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன் நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார்.   தமிழகத்தில் சசிகலாவின் உறவினர் வீடுகளில் வருமான வரி சோதனை நடக்கிறது. வருமான வரித்துறை தன்னாட்சி அதிகாரம் கொண்ட அமைப்பாகும்.  அவர்கள் எங்கு சோதனை நடத்த வேண்டும் என்றாலும் திட்டமிட்டு செயல்படுவார்கள். இதில் பாரதிய ஜனதா கட்சியின் பங்கு எதுவும் இல்லை.  பாரதிய ஜனதா கட்சி தவறுக்கு துணை போகாது. தவறு செய்பவர்களை தண்டிக்காமலும் விடாது. தவறு செய்ய தூண்ட மாட்டோம். தவறு செய்வோரையும் விடமாட்டோம்.

கருப்பு பணத்தை கண்டறியவே சோதனை நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் எடுத்தேன்... கவிழ்த்தேன் என்று கருத்துச் சொல்ல முடியாது. ஏற்கனவே இது போல சோதனை நடத்தப்பட்டவர்கள் குறித்து அத்துறையினர் உரிய நடவடிக்கை எடுப்பார்கள்.  வருமான வரித்துறை நடத்தும் சோதனைக்கு தமிழக எதிர் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. ஒரு வட்டத்திற்குள் இருந்து யாரும் கருத்துச் சொல்ல கூடாது.

பா.ம.க. தலைவர் ராமதாஸ் கூறும் போது, சசிகலா உறவினர்கள் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில் கண்டறியப்பட்ட சொத்துக்கள் ஜெயலலிதா முதல்வராக இருந்த போது சேர்த்தது, என்று கூறியுள்ளார். இது வருமான வரித்துறையின் விசாரணைக்கு பின்னரே தெரிய வரும்.   அதிமுகவை வெளியில் இருந்து யாரும் வந்து அழிக்க வேண்டியது இல்லை. அக்கட்சியை அதிமுகவினரே அழித்து விடுவார்கள்.

திமுக தலைவர் கருணாநிதியை பிரதமர் மோடி சந்தித்தது உணர்ச்சிபூர்வமானது. இந்த சந்திப்பில் அரசியல் இல்லை. உணர்ச்சிபூர்வமே இருந்தது. இதனை கருணாநிதியின் உறவினர்கள், குடும்பத்தினர் அறிவார்கள்.  ஜெயலலிதாவை பிரதமர் மோடி சந்திக்காததற்கு ஆஸ்பத்திரி சூழ்நிலையே காரணமாகும்.  தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமுல்படுத்த வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கையாகும்.  தமிழகத்தில் நடைபெறும் விபத்துகளுக்கு மது போதையே காரணமாகும். விபத்துக்களால் ஏற்படும் 75 சதவீத மரணங்களுக்கு மதுவே காரணம் என்று தெரிய வந்துள்ளது. எனவே மது பழக்கத்தை கைவிட வேண்டும்.

நாடு முழுவதும் ஒரே மாதிரியான வரி விதிப்பை அமுல்படுத்தவே ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு கொண்டு வரப்பட்டது.  5, 12, 18, 28  சதவீத வரி விதிப்பு முறையினை மத்திய அரசு அறிவித்தது.  இதில் மீன் வலை உற்பத்திக்கு 12 சதவீத வரி விதிக்கப்பட்டிருந்தது. இதனால் குமரி மாவட்டம் உள்பட நாடு முழுவதும் உள்ள மீன் வலை உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படுவதாகவும், அவர்களின் தொழில் முடங்கி போனதாகவும் கூறினர். எனவே மீன்வலைக்கான வரியை குறைக்க கோரி இருந்தனர். இது பற்றி நிதி மந்திரியிடம் தெரிவிக்கப்பட்டது. சமீபத்தில் வரி குறைப்பு நடவடிக்கை எடுக்கப்பட்ட போது மீன் வலைக்கான வரி 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் குமரி மாவட்டத்தில் உள்ள 110 மீன்வலை கம்பெனிகள் வளர்ச்சி அடையும். இங்கு பணிபுரியும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளிகளும் பலன்பெறுவார்கள். நாடு முழுவதும் உள்ள மீன்வலை கம்பெனிகளும் இதனால் பலன்பெறும்.  இவ்வாறு அவர் கூறினார்.

Label