OUR CLIENTS
டாஸ்மாக் கடைகளை மேலும் திறக்கும் விபரீத விளையாட்டு வேண்டாம் : ஸ்டாலின் எச்சரிக்கை
டாஸ்மாக் கடைகளை மேலும் திறக்கும் விபரீத விளையாட்டு வேண்டாம் : ஸ்டாலின் எச்சரிக்கை Posted on 15-Nov-2017 டாஸ்மாக் கடைகளை மேலும் திறக்கும் விபரீத விளையாட்டு வேண்டாம்  : ஸ்டாலின் எச்சரிக்கை

சென்னை, நவ. 15
தமிழ்நாட்டில் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளை  மீண்டும் திறக்கும் விபரீத விளையாட்டு வேண்டாம் என அதிமுக அரசுக்கு சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும் திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து மு.க. ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: மதுவிலக்கு படிப்படியாக அமல்படுத்தப்பட்டு பூரண மதுவிலக்கு என்ற நிலை எய்தப்படும் என 2016 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வாக்குறுதி அளித்து விட்டு, பல வாக்குறுதிகளைக் காற்றில் பறக்கவிட்டதைப் போல, நேற்று புதிதாக மதுக் கடைகளைத் திறப்பதற்காக, உச்சநீதிமன்றம் வரை 'குதிரை பேர' அரசே ஓடோடிச் சென்று வாதிட்டுக் கொண்டிருப்பது வேதனை அளிப்பதாக உள்ளது. 

சில்லரை மதுபான கடைகள் திறந்திருக்கும் நேரம் குறைக்கப்படும், கடைகளின் எண்ணிக்கை குறைக்கப்படும், பின்னர் சில்லரை மதுபான கடைகளுடன் இணைந்த பார்கள் மூடப்படும், குடிப்பழக்கத்திற்கு உள்ளாகி இருப்போரை மீட்பதற்கான மீட்பு நிலையங்கள் அமைக்கப்படும், என்றெல்லாம் மோசடி தேர்தல் வாக்குறுதிகளை அளித்து தமிழக மக்களை நம்பவைத்து ஏமாற்றி யிருக்கின்ற 'குதிரை பேர' அரசின் கொடூர மனப்பான்மைக்கு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

பூரண மதுவிலக்கு என்று தம்பட்டம் அடித்து, குதித்துக் கொண்டிருந்த ‘குதிரை பேர' அரசு தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் இருந்து 500 மீட்டர் தூரத்திற்குள் வைக்கப் பட்டுள்ள மதுக்கடைகளுக்கு எதிராக நீதிமன்றம் அளித்த தீர்ப்பை முழுமனதுடன் ஏற்று, தமிழக பெண்களின் எதிர் பார்ப்பையும் நிம்மதியையும் கருதி, அனைத்து பகுதிகளிலுமே டாஸ்மாக் கடைகளை மூட முன் வந்திருக்க வேண்டும். இதனை நான் அப்போதே அறிக்கை மூலம் வலியுறுத்தினேன்.

ஆனால், அதற்கு பதிலாக உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை வலுவிழக்க வைக்கும் விதத்தில், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளின் வழியாக செல்லும் தேசிய மற்றும் மாநில நெடுஞ் சாலைகளை உள்ளாட்சி களின் சாலைகளாக வகைமாற்றம் செய்து, மீண்டும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் டாஸ்மாக் கடைகளைத் திறக்க முயற்சிப்பது, சமூகத் தீமைக்கும் - பெண்குலத்தின் போராட்டத்திற்கும் சிவப்புக் கம்பளம் விரிக்கும் இந்த அரசின் விபரீத மனநிலையைப் பிரதிபலிக்கிறது.

தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் ஏற்கனவே நடைபெற்றுக் கொண்டிருக்கும் விபத்து களால் பல குடும்பங்கள் தங்கள் எதிர்காலத்தை தொலைத்து விட்டுத் தெருவில் நிற்கின்றன. இந்தக் கடைகளால் தங்களின் வாழ் வாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள சவாலையும் ஆபத்தையும் சமாளிக்க முடியாமல் தாய்மார்கள் திணறிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் சட்டம் ஒழுங்கு, பொது அமைதி, பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்கள் என எதுபற்றியும் துளியும் கவலைப்படாமல், டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கையை எப்படியும் உயர்த்திவிடுவது குறுகிய மனப்பான்மையில், வருமானம் ஒன்றையே கவனத்தில் வைத்து இந்த அரசு செயல்படுவது கண்டிக்கத்தக்கது. அபாய பாதை குடிமக்களின் துயரத்தையும், அவர்களின் உடல் நலத்திற்கு விளைவிக்கும் கேடுகளையும் புரிந்துகொள்ள மறுத்து இந்த அதிமுக அரசு தள்ளாடிக் கொண்டிருக்கிறது.

எண்ணற்ற குடும்ப ங்களை இன்னல் சுழலில் தள்ளி விடுவதற்காக, ‘எங்கு காணினும் டாஸ்மாக் கடைகள்', என்ற மதிமயக்க நிலையை ஏற்படுத்தப் போராடிக்கொண்டிருக்கும் இந்த மக்கள் விரோத அரசுக்கு கடும் கண்டனத்தை மீண்டும் தெரிவித்து, டாஸ்மாக் கடைகளைத் திறக்கும் முடிவை அரசு உடனடியாகக் கைவிட்டு, ஏழை - எளிய நடுத்தரக் குடும்பங்களைக் காப்பாற்ற வேண்டும் என்று பெரிதும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாற மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

Label