OUR CLIENTS
ஆளுநர் ஆய்வு செய்தது மாநில சுயாட்சிக்கு எதிரான யுத்தம் : அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம்
ஆளுநர் ஆய்வு செய்தது மாநில சுயாட்சிக்கு எதிரான யுத்தம் : அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் Posted on 16-Nov-2017 ஆளுநர் ஆய்வு  செய்தது  மாநில சுயாட்சிக்கு எதிரான யுத்தம் : அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம்

சென்னை, நவ.16
தமிழக ஆளுநர் அரசு அதிகாரிகளை அழைத்து ஆலோசனை நடத்துவது மாநில சுயாட்சிக்கு எதிராக நடைபெறுகின்ற யுத்தமாகும் என்று, துரைமுருகன், வைகோ, திருநாவுக்கரசர், முத்தரசன், திருமாவளவன், ஈஸ்வரன், டிடிவி தினகரன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

கோவையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அரசு உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி ஆய்வு மேற்கொண்டதற்கு அரசியல் தலைவர்கள்  கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஆளுநரின் ஆய்வை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. மாநில சுயாட்சியில் தலையிடும் செயல் இது என்று   தமிழக அரசியல் கட்சிகள் குரல் கொடுக்கின்றன. இதே போன்று இது சட்ட விதி மாண்புகளுக்கு எதிரானது என்றும் அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
 
தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் கூறியதாவது:   மத்திய அரசை வணங்கும் அமைச்சர்களுக்கு ஆளுநர் உள்ளூர் தெய்வமாக விளங்குகிறார். முதல்வர் நாற்காலியில் ஆளுநரே அமர்ந்தாலும் அமைச்சர்களுக்கு கவலையில்லை. ஆட்டுக்கு தாடி போல தமிழ்நாட்டுக்கு ஆளுநர் நிர்வாகத்தில் நேரடியாக தலையிடுவது மாநில சுயாட்சி கொள்கைகளுக்கு எதிரானது.   செயல்படாத ஆட்சியை செயல்பட வைப்பதும், ஆட்சியை கலைப்பதுமே ஆளுநரின் பணி. ஆனால் அவர் இன்று அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தி இருப்பது மரபை மீறிய செயல் என்றும் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் இரா.முத்தரசன்:  தமிழ்நாட்டில் ஓராண்டு காலமாக செயல்படாத அரசு இருந்து வருகிறது. தமிழகத்தில் நடக்கும் ஆட்சி மக்கள் ஆதரவை, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவை இழந்து, ஒரு தார்மீக பலத்தை இழந்து விட்ட நிலையில் இப்படிப்பட்ட விபரீதங்கள் தொடர்கின்றன.  அதன் ஒரு பகுதியாக ஆளுநர் கோவையில் கலெக்டர் மற்றும் அதிகாரிகளின் ஆலோசனை கூட்டத்தை நடத்தியுள்ளார்.  மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட அரசு இருக்கிறது. அதன் செயல்பாடு எப்படி இருந்தாலும் தேர்ந்து எடுக்கப்பட்ட அரசு என்பதை மறுக்க முடியாது.  ஆனால் தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி நடப்பது போல ஆளுநர் செயல்பட்டு கொண்டிருக்கிறார். இது தவறான முன் உதாரணமாகும். மாநில சுயாட்சிக்கு எதிராக நடைபெறுகின்ற யுத்தமாகும்.

விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன்:  ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கூட மாகாண முதல்வர்களை மீறி கவர்னர்கள் இப்படி அத்து மீறி செயல்பட்டதாக தெரிய வில்லை. மிசா நடைமுறையில் இருந்த காலத்தில் ஆளுநர்தான் ஆட்சி நிர்வாகத்தை வழி நடத்தினார். அதே போல குடியரசு தலைவர் ஆட்சி நடை முறையில் உள்ள மாநிலங்களில் மட்டுமே ஆளுநர் நேரிடையாக அதிகாரிகளை சந்திப்பது, ஆணையிடுவது வழக்கம்.  தற்போது இந்தியாவில் மிசாவும் நடைமுறையில் இல்லை. தமிழகத்தில் குடியரசு தலைவர் ஆட்சியும் நடைமுறையில் இல்லை. ஆனால் ஆளுநர் தனது அதிகார வரம்புகளை மீறி மாவட்ட உயர் அதிகாரிகளை சந்தித்து இருப்பது சட்டத்தையும், ஜனநாயகத்தையும் அவமதிக்கும் செயலாகும். இதனை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது.
 
தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர் கூறியதாவது:  தமிழகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசாங்கம் இருக்கிறது. முதல்வர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் இருக்கிறார்கள்.

இந்த நிலையில் ஆளுநர் சுற்றுப்பயணம் செய்து மாவட்டம் மாவட்டமாக ஆய்வுக்கூட்டம் நடத்தி கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டை கூப்பிட்டு பேசுவதும் ஆர்.டி.ஓ. தாசில்தார் பி.டி.ஓ.வை அழைத்து பேசுவதும் சரியல்ல.  ஜனநாயகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை மீறி ஒரு ஆளுநர் செயல் படமுடியாது. அப்படி செய்ய மாட்டார் என நினைக்கிறேன். இனி எப்படி நடந்து கொள்கிறார் என்று பார்ப்போம்.
 
கொங்கு நாடு மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன்:  ஆளுநர் பன்வாரிலால் அசாம் மாநிலத்திலும் இதே வேலையைத்தான் செய்தார். ஆனால் அங்கு பா.ஜ. ஆட்சி நடந்து வருகிறது. அவர் தமிழகத்திலும் அப்படி செயல்படுவார் என்று எதிர்பார்த்ததுதான்.  பா.ஜ.க.வின் நோக்கத்தை அவர் வெளிப்படுத்துகிறார். அவரின் நடவடிக்கை ஆளுநர் ஆட்சியை தமிழகத்தில் கொண்டு வர பிள்ளையார் சுழியாக நான் கருதுகிறேன். நல்ல எண்ணத்தில் அவர் செய்வதாக பார்க்க முடியாது.
 
ஆளுநர் ஆய்வு நடத்துவது மாநில அரசின் அதிகாரத்தில் தலையிடுவதாக உள்ளது என்று டி.டி.வி. தினகரன் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டரில் கூறி இருப்பதாவது:  இது போன்ற ஆய்வுகள் வரவேற்கப்பட வேண்டியது என்று அமைச்சர்கள் கூறுவது வெட்கக்கேடானது. இதற்கெல்லாம் பதில் சொல்லவேண்டிய முதல்வர் பழனிச்சாமி தனது சுயநலத்தில் மட்டுமே கவனமாக இருக்கிறார்.  முதல்வர் பழனிச்சாமியின் அரசு, தங்களை காப்பாற்றிக் கொள்வதற்காக, மாநிலத்தின் நலன்களை அடகு வைக்க துளியும் தயங்காது என்பதையே ஆளுனரின் ஆய்வு உணர்த்துகிறது. நீட் தேர்வு முதல், தொடர்ந்து தமிழகத்தின் நலன்கள் பறிபோய்க் கொண்டிருக்கின்றன.  தமிழகத்தில் இப்போது நடப்பது இதயதெய்வம் அம்மாவின் ஆட்சி அல்ல என்பதை இந்த ஆய்வு உறுதிப்படுத்துகிறது. அம்மா ஒருபோதும் இதுபோன்ற ஆய்வுகளை அனுமதிக்க மாட்டார். மாநில சுயாட்சியை எல்லா நிலைகளிலும் உறுதிப்படுத்துவதே அ.தி.மு.க.வின் கொள்கை. புதுச்சேரி மற்றும் டில்லியில் துணைநிலை ஆளுனர்களின் தலையீட்டால் எப்படி நிர்வாகம் ஸ்தம்பித்திருக்கிறதோ அதே நிலை தமிழகத்திற்கும் வரலாம். அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக அரசு அதிகாரத்தில் ஊடுறுவும் பி.ஜே.பி.யின் பாணி இது போலும்.   

ஆளுநரின் செயல், தமிழகத்தில் மாநில உரிமைகளின் அடிப்படைக்கே வேட்டு வைக்கின்ற வேலை என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விமர்சித்துள்ளார்.  இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  இந்திய தேசிய காங்கிரசின் முதுபெரும் தலைவர்களுள் ஒருவரும், சுதந்திரப் போராட்டத் தியாகியுமான ஆச்சார்யா கிருபளானி, ஆளுநர் பதவி குறித்து அன்று கூறியது இன்றைக்கும் மிகப் பொருத்தமாக இருக்கின்றது.  மத்திய அரசின் கொள்கையை வலியுறுத்தி, அதைப் பாதுகாக்கின்ற ஏஜெண்டாக இருப்பவர்தான் ஆளுநர் ஆவார்.’ இதைச் சொன்னவர், சுதந்திரப் போராட்ட வீரரான மகாவீர் தியாகி ஆவார். சொன்ன இடம், இந்திய அரசியல் அமைப்புச் சபை.

ஆளுநர் பதவி தேவை அற்றது என்று பேரறிஞர் அண்ணா கூறினார்கள். 1980 ஜூலை 25ம் நாள், மாநிலங்கள் அவையில், ஆளுநர் பதவி குறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் புபேஷ் குப்தா கொண்டு வந்த தனி நபர் மசோதாவில் நான் பேசும்போது, ஏழை மக்களின் வரிப்பணத்தில் இருந்து ஏராளமான  தொகையைத் தண்டத் தீனியாக விழுங்கிக் கொண்டு இருக்கும் ஆளுநர் பதவி தேவைதானா?’ என்பதே நமது அடிப்படை கேள்வி; ஆளுநர் பதவியை ஒழிக்க வேண்டும்  என வலியுறுத்தினேன். தங்களுக்கு இசைவாக மாநில அரசுகள் செயல்படவில்லை எனில், அரசியல் சட்டத்தின் 356 ஆவது பிரிவு எனும் கொடுவாளை வீசி, மாநில அரசைக் கலைப்பதற்கு ஆளுநர்கள், கைக்கருவிகளாகச் செயல்பட்டார்கள். அப்படி இந்தியாவில் ஐம்பதுக்கும் மேற்பட்ட முறை மாநில அரசுகள் கலைக்கப்பட்டன.

மனச்சாட்சி உள்ள மனிதராக இருந்த தமிழக ஆளுநர் சுர்ஜித்சிங் பர்னாலாதான், 1991ம் ஆண்டு, தி.மு.க. ஆட்சியைக் கலைப்பதற்கு அறிக்கை தர மறுத்தார். அப்போது, வேறு வழிகளிலும் கலைக்கலாம் என்ற வரியைப் பயன்படுத்தி தி.மு.க. அரசைக் கலைத்தார்கள்.  எஸ்.ஆர். பொம்மை வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புதான், ஆட்சிக் கலைப்புக்குக் கடிவாளம் போட்டது.

இந்தியா, கனடா, ஆஸ்திரேலியா போன்ற காமன்வெல்த் நாடுகளில் மட்டும்தான் ஆளுநர்கள் இருக்கின்றார்கள். இதர கூட்டு ஆட்சி நாடுகளில், ஆளுநர் பதவி கிடையாது. அமெரிக்காவில் மாநில முதல்வர்களை மக்களே வாக்கு அளித்து நேரடியாகத் தேர்ந்து எடுக்கின்றார்கள். அந்தப் பொறுப்புக்குத்தான் அங்கே ‘ஆளுநர்’ என்று பெயர்.

டில்லியிலும், புதுவை மாநிலத்திலும் துணைநிலை ஆளுநர்கள், மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட மாநில அரசுகளை உதாசீனம் செய்துவிட்டு, சர்வாதிகாரிகளைப் போலச் செயல்படுகின்றார்கள். அந்த வரிசையில், இப்போது தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சேர்ந்து இருக்கின்றார்.

அரசு அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தி இருக்கின்றார். இங்கே ஒரு மாநில அரசு செயல்படுகிறது என்பதே அவருக்கு நினைவு இல்லையா? என்ற கேள்வி எழுகின்றது.  ஆளுநரின் செயல், தமிழகத்தின் மாநில உரிமைகளின் அடிப்படைக்கே வேட்டு வைக்கின்ற வேலை; அதை நாம் அனுமதிக்க முடியாது; மோசமான முன்னுதாரணத்தை ஏற்படுத்த வாய்ப்பு அளிக்கக் கூடாது.

ஆளுநர் தமிழ்நாட்டைச் சுற்றிப் பார்க்கலாம்; விழாக்களில் பங்கேற்கலாம்; ஆனால், அரசு அதிகாரிகளை அழைத்து ஆய்வு செய்வது என்பது, அவரது அதிகார வரம்பை மீறிய செயல்; தமிழகத்தில் இதுவரை பின்பற்றப்பட்டு வந்த மரபை அவமதிக்கின்ற செயல். இவ்வாறு வைகோ  கூறியுள்ளார்.  இவ்வாறு, தமிழக ஆளுநர் அரசு அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டது குறித்து தமிழக அரசியல் தலைவர்கள் கருத்து கூறியுள்ளனர்.

Label