OUR CLIENTS
அதிகாரிகளுடன் ஆளுநர் ஆலோசனை நடத்துவது மத்திய - மாநில அரசுகளின் உறவுகளுக்கு உதவாது : மு.க. ஸ்டாலின் முத்தான அறிக்கை
அதிகாரிகளுடன் ஆளுநர் ஆலோசனை நடத்துவது மத்திய - மாநில அரசுகளின் உறவுகளுக்கு உதவாது : மு.க. ஸ்டாலின் முத்தான அறிக்கை Posted on 16-Nov-2017 அதிகாரிகளுடன் ஆளுநர் ஆலோசனை நடத்துவது  மத்திய - மாநில அரசுகளின் உறவுகளுக்கு உதவாது : மு.க. ஸ்டாலின் முத்தான அறிக்கை

சென்னை, நவ.16
தமிழக ஆளுநர் அதிகாரிகளை அழைத்து ஆய்வு நடத்துவது ஆரோக்கியமான மத்திய - மாநில அரசுகளின் உறவுகளுக்கோ, சீரான நிர்வாகத்திற்கோ துளியும் உதவாது என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மு.க.ஸ்டாலின்  நேற்று விடுத்துள்ள அறிக்கையில்,  தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நேற்று முன் தினம் கோவை சர்க்யூட் ஹவுஸில் கோவை மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர், மாநகர காவல்துறை ஆணையர் ஆகியோரை அழைத்து ஆய்வு நடத்தியிருக்கிறார். இச்செயல் தொடர்ந்து மாநிலங்களின் உரிமைகளைப் பறித்து வரும் மத்திய பா.ஜ.க. அரசின் அடுத்தகட்ட நடவடிக்கையாக அமைந்துள்ளது.

மாநில உரிமைகளில் நம்பிக்கை உள்ள அனைவருக்கும் இச்செயல் வேதனையளிக்கிறது. அந்த நடவடிக்கைகளை அவர் தொடர்வார் என்று அவரே கூறி இருப்பதும் கவலையளிக்கிறது.
அரை நூற்றாண்டுக்கு மேல் மாநில சுயாட்சிக் கொள்கைக்காகக் குரல் கொடுத்து வரும் தமிழகத்தில் மத்திய பா.ஜ.க. அரசும், ஆளுநரும் போட்டி போட்டுக்கொண்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் அதிகாரத்தைத் தங்கள் கையில் எடுத்துக்கொள்ளும் இந்த அரசியல் சட்டவிரோத முயற்சிக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

முழுக்க முழுக்க மத்திய அரசின் ஏஜெண்டாக, அலங்காரப் பதவியில் அமர்ந்திருக்கும் ஆளுநர் மாநில நிர்வாகத்தில் தலையிட்டு ஆய்வு செய்வது என்பது மத்திய - மாநில அரசுகளிடையே நிலவும் உறவுக்கும் உகந்தது அல்ல. அரசியல் சட்டப்படி உயர்ந்த பதவியில் இருக்கும் ஆளுநருக்கும் ஏற்ற செயல் அல்ல, என்பதை மூத்த அரசியல்வாதியான தமிழக ஆளுநர் உணர்ந்து கொள்வார் என்று கருதுகிறேன்.   தமிழகத்தைப் பொறுத்தவரை இப்போது அரசு நிர்வாகம் சீர்குலைந்து சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கிறது என்றால் அதற்கு முழுமுதல் காரணம் மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசும், ராஜ்பவனில் முன்பு இருந்த பொறுப்பு ஆளுநரும்தான் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

பெரும்பான்மையை இழந்த அதிமுக அரசை பதவியில் நீடிக்கவிட்டு, அழகு பார்த்துக் கொண்டிருந்த பொறுப்பு ஆளுநர் தற்போது விடுவிக்கப்பட்டு, புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோகித் பொறுப்பேற்றுக் கொண்டுள்ள நிலையில், அதன் பிறகாவது அரசியல் சட்டப்படி உள்ள அதிகாரத்தை அவர் பயன்படுத்தியிருக்கலாம்.  மாநிலத்தில் பொறுப்பான ஒரு அரசு நடக்க வேண்டுமென்றால் உடனடியாக இந்த முதலமைச்சரை பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட்டிருக்க வேண்டும்.  மாநில அரசு நிர்வாகத்தை முறைப்படுத்த, அரசியல் சட்டபூர்வமான அரசு ஆட்சியிலிருந்தால் போதும் என்பதை ஆளுநர் உணர்ந்து, அதற்கு நடவடிக்கை எடுத்திருந்தால், இந்த நிர்வாகச் சீர்குலைவு நிச்சயம் ஏற்பட்டிருக்காது. 

ஆனால், ஆர்.கே.நகர் தேர்தலில் லஞ்சம் கொடுத்த வழக்கில் தேர்தல் ஆணையத்தின் உத்தரவு, குட்கா ஊழல் விவகாரத்தில் கொடுக்கப்பட்ட புகார் மனு, இந்த அரசின் மீது கொடுக்கப்பட்ட பல்வேறு ஊழல் புகார்கள், சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு உத்தரவிட வேண்டும் என்று கொடுக்கப்பட்ட மனு உள்ளிட்ட ‘குதிரை பேர’ அரசின் மீதான பல புகார்கள் இன்னும் ராஜ்பவனில்தான் நிலுவையில் உள்ளன. 

அரசியல் சட்டப்படி தனக்கு இருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி அவற்றின் மீது எல்லாம் ‘அறிக்கை’ கேட்டிருக்க வேண்டிய ஆளுநர் திடீரென்று மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆளுநர் போல் அதிகாரிகளை அழைத்து “ஆய்வுக் கூட்டம்” நடத்துவது வருந்தத்தக்கது.  ‘குதிரை பேர’ அரசு அகற்றப்படுவதற்குள் மாநிலத்தின் அனைத்து உரிமைகளும் பறிபோய்விடும் ஆபத்தான சூழலில் தமிழகம் இப்போது இருப்பது கவலையளிக்கிறது. பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவு பிறப்பிக்காத ஒரே காரணத்தால் ஆயுளை நீடித்துக் கொண்டிருக்கும் இந்த ஆட்சியின் முதலமைச்சருக்கு, ஆளுநர் அவர்களின் ஆய்வு குறித்து கருத்துக்கூறும் திராணி இல்லை.

தமிழ்நாடு என்பது புதுவை அல்ல. மாநில நிர்வாகத்தில் தலையிட புதுவை ஆளுநருக்கு உள்ள குறைந்தபட்ச அதிகாரங்கள் கூட தமிழகத்தில் உள்ள ஆளுநருக்கு இல்லை. ஒரு அரசின் அன்றாட நிர்வாகப் பணிகளில் தலையிட்டு அமைச்சரவைக்கு ஆலோசனை வழங்க ஆளுநர் பதவி நிச்சயமாக இல்லை.  ஆகவே, தமிழக நிர்வாகத்தை சீர்படுத்த ஆளுநர் விரும்பினால், இந்த அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி முதலில் உத்தரவிட வேண்டும். அதை விடுத்து இப்படி அதிகாரிகளை அழைத்து ஆய்வு நடத்துவது ஆரோக்கியமான மத்திய - மாநில அரசுகளின் உறவுகளுக்கோ, சீரான நிர்வாகத்திற்கோ துளியும் உதவாது.  தமிழக நிர்வாகத்தை சீர்படுத்த ஆளுநர் விரும்பினால், இந்த அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி முதலில் உத்தரவிட வேண்டும்.  அதை விடுத்து இப்படி அதிகாரிகளை அழைத்து ஆய்வு நடத்துவது ஆரோக்கியமான மத்திய - மாநில அரசுகளின் உறவுகளுக்கோ, சீரான நிர்வாகத்திற்கோ துளியும் உதவாது.  இது போன்ற ஆய்வுகளை உடனடியாகக் கைவிடுமாறு தமிழக ஆளுநரைக் கேட்டுக் கொள்கிறேன்.  இவ்வாறு, திமுக செயல் தலைவர் ஸ்டாலின் நேற்று விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Label