OUR CLIENTS
அரசு நிலத்தை ஆக்கிரமித்ததாக புகார் : போக்குவரத்து துறை அமைச்சர் ராஜினாமா
அரசு நிலத்தை ஆக்கிரமித்ததாக புகார் : போக்குவரத்து துறை அமைச்சர் ராஜினாமா Posted on 16-Nov-2017 அரசு நிலத்தை ஆக்கிரமித்ததாக புகார் : போக்குவரத்து துறை அமைச்சர்  ராஜினாமா

திருவனந்தபுரம், நவ.16
கேரளாவில் இடதுசாரி கூட்டணி ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக  உள்ள தாமஸ்சாண்டி மீது நில அபகரிப்பு புகார் எழுந்துள்ள நிலையில், அவர் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.

கேரளாவில் கம்யூனிஸ்டு கூட்டணியில் இடம் பெற்றுள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ. தாமஸ்சாண்டி. போக்குவரத்து துறை அமைச்சராக உள்ளார். குட்டநாடு தொகுதியைச் சேர்ந்த இவருக்கு சொந்தமாக ரிசார்ட் உள்ளது. இதற்கு செல்ல அரசு நிலத்தை ஆக்கிரமித்து பாதை அமைத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடர்பாக ஆலப்புழா கலெக்டர் அனுபமா விசாரணை நடத்தி, அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்தார். அதில், அரசு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும், அதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி இருந்தது.  இதனை அமைச்சர் தாமஸ்சாண்டி மறுத்தார். ஆலப்புழா கலெக்டரின் அறிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்று கேரள உயர்நீதிமன்றத்தில் மனு செய்தார். இந்த மனு, நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது தாமஸ்சாண்டிக்கு நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

அமைச்சராக இருக்கும் ஒருவர், அரசு அதிகாரியை எதிர்த்து கோர்ட்டில் மனு தாக்கல் செய்யலாமா? அப்படியானால் அரசு மீது அமைச்சருக்கு நம்பிக்கை இல்லையா? அவர், பதவியை ராஜினாமா செய்வதுதான் நல்லது என்று கருத்து தெரிவித்தது. 

உயர்நீதிமன்றம் கண்டனத்தை தொடர்ந்து அமைச்சர் தாமஸ்சாண்டி ராஜினாமா செய்ய வேண்டுமென்று எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தினர்.  முதல்வர் பினராயி விஜயனும் இது தொடர்பாக கூட்டணி கட்சிதலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். அதில், தாமஸ்சாண்டி ராஜினாமா செய்ய வேண்டுமென இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் வலியுறுத்தினர். தாமஸ்சாண்டியின் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகளில் சிலரும் அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கூறினர். இதனால் தாமஸ்சாண்டிக்கு நெருக்கடி முற்றிய நிலையில், நேற்று அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து அவர் ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.

Label