OUR CLIENTS
அமைச்சர்கள் எல்லாம் அடிமைகள் ! : அன்புமணி விளாசல்
அமைச்சர்கள் எல்லாம் அடிமைகள் ! : அன்புமணி விளாசல் Posted on 17-Nov-2017 அமைச்சர்கள் எல்லாம் அடிமைகள் !  : அன்புமணி விளாசல்

 கோவை, நவ.17
அன்றாட நிர்வாகம் செய்ய கவர்னருக்கு எந்த அதிகாரமும் கிடையாது என கோவை விமான நிலையத்தில் அன்புமணி ராமதாஸ் கூறினார்.
 
பா.ம.க. இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கோவை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது -  தமிழக கவர்னர் ராஜ்பவனில் எந்த அதிகாரியையும் அழைத்து பேசலாம். அவருக்கு புகார் வந்தால் முதல்வரையோ, தலைமை செயலாளரையோ, ராஜ்பவனுக்கு அழைத்து விசாரிக்க கவர்னருக்கு அதிகாரம் இருக்கிறது. ஆனால் அவர் அன்றாட நிர்வாகம் செய்ய எந்த அதிகாரமும் கிடையாது.

அவர் ஒவ்வொரு மாவட்டமாக சென்று ஆய்வு நடத்துவது என்பது ஜனநாயக மரபு அல்ல. கவர்னர் ஆய்வு செய்வதில் எந்த தவறும் இல்லை என அமைச்சர்கள் கூறிவருவதை பற்றி கேட்கிறீர்கள். அவர்கள் அடிமைகள். அப்படித்தான் பேசுவார்கள். இவர்களுக்கெல்லாம் தலைமை அடிமை ஒருவர் இருக்கிறார். அவருக்கு கீழ் 30 அடிமைகள் இருக்கின்றனர். 
ஏற்கனவே 18 துறைகளில் நடந்த ஊழல் குறித்து கவர்னராக இருந்த ரோசய்யாவிடமும் புகார் கொடுத்து இருந்தோம். அந்த புகாரின் பேரில் எந்த நடவடிக்கையும் இல்லை. அதன் பிறகு வந்த பொறுப்பு கவர்னர் வித்யாசாகர்ராவிடம் அ.தி.மு.க.வை சேர்ந்த 18 எம்.எல்.ஏக்கள் அரசுக்கு கொடுத்த ஆதரவை திரும்ப பெறுவதாக ஒரு கடிதம் கொடுத்தார்கள். அதிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.  தற்போதைய கவர்னராவது அ.திமு.க. எம்.எல்.ஏக்கள் 18 பேர் கொடுத்த கடிதத்தின் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சரியில்லை. ஊழல் நடக்கிறது. தமிழக அரசு பினாமி அரசாகத்தான் இருக்கிறது. ஆனாலும் கவர்னர் தனது நெறிமுறைகளை மீறக்கூடாது.

கவர்னரின் நடவடிக்கைகளை போக போகத்தான் பார்க்க வேண்டும். தேவைப்பட்டால் எல்லா கட்சிகளும் சேர்ந்து ஜனாதிபதியை சந்தித்து முறையிடலாம். பிரதமர் மோடி தமிழகத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டார். மோடியின் அடிமைகளாகத்தான் முதல்வரும், அமைச்சர்களும் இருக்கின்றனர்.

ஜி.எஸ்.டி. வரியில் ஒரு சில பொருட்களுக்கு வரிகுறைப்பு செய்து உள்ளனர். இது போதுமானது இல்லை. மோட்டார் பம்ப், கிரைண்டர் போன்ற பொருட்களுக்கு முழு வரிவிலக்கு அளிக்க வேண்டும். அல்லது குறைந்த பட்ச 5 சதவீத வரியை விதிக்கலாம்.   பா.ம.க.தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள 3321 மதுக்கடைகள் 6 மாதங்களுக்கு முன்பு மூடப்பட்டது. அதன்பின்னர் தமிழக அரசு குறுக்கு வழியில் 3 ஆயிரம் கடைகளை திறந்து இருக்கிறார்கள். ஜெயலலிதா வழியில் ஆட்சி நடத்துவதாக கூறும் தமிழக அரசு அவர் தேர்தல் அறிக்கையில் அறிவித்ததற்கு நேர்மாறாக தற்போது மூடிய டாஸ்மாக் கடைகளை மீண்டும் திறந்து கொண்டு இருக்கிறது. எனவே டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக மிகப்பெரிய போராட்டம் நடத்த உள்ளோம்.

கமல்ஹாசன் அரசியலுக்கு வரட்டும். அதன் பின்னர் அவர் குறித்து பேசலாம். சமீபத்தில் தமிழகத்தில் ஆறுகளில் உள்ள மணலை எடுக்க தடை விதிக்க வேண்டும் என ஒரு பொது நலவழக்கு தொடர்ந்து உள்ளேன். கேரளா மற்றும் கர்நாடகாவில் ஆற்று மணல் எடுக்க தடை உள்ளது. அதே போல் தமிழகத்திலும் தடை விதிக்க வேண்டும்.  5 நாட்களாக சசிகலா குடும்பத்தினருக்கு சொந்தமான 187 இடங்களில் வருமான வரிசோதனை நடந்தது. இதில் 1400 கோடி மதிப்பிலான பொருட்களும், பணமும் கைப்பற்றப்பட்டதாக செய்திகள் வெளிவந்தன.

இந்த பணத்தை சேகரித்து கொடுத்த ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோரும் வருமான வரி சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். இவர்கள் தான் தரகர்கள். 27 ஆண்டாக ஒரு குடும்பம் இவ்வளவு சொத்து சேர்த்து இருக்கிறது. இந்த சோதனை எப்போதோ நடந்து இருக்க வேண்டும்.  அரசு இந்த சொத்துக்களை எடுத்து மக்களுக்கு மீண்டும் கொடுக்க வேண்டும். ஏற்கனவே 3 கண்டெய்னர்களில் பிடிபட்ட பணம் தொடர்பான வழக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை. தலைமை செயலகம், சேகர் ரெட்டி, வீடுகளில் நடந்த ரெய்டு என்ன ஆனது? ஆர்.கே. நகர் தேர்தலின் போது பணம் பட்டுவாடா தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. அப்போது அவரது வீட்டில் வருமான வரி சோதனை நடந்தது. அதன் பிறகு குட்கா விவகாரம் தொடர்பாகவும அவரது வீட்டில் சோதனை நடத்தினார்கள். இந்த சோதனைகளில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது என்று மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.  இவ்வாறு அவர் கூறினார்.   பின்னர் அன்புமணி ராமதாஸ் ஈரோடுக்கு புறப்பட்டு சென்றார்.

Label