OUR CLIENTS
ஊழலில் திளைக்கும் தமிழக மின்சாரத்துறை :ஸ்டாலின் குற்றச்சாட்டு
ஊழலில் திளைக்கும் தமிழக மின்சாரத்துறை :ஸ்டாலின் குற்றச்சாட்டு Posted on 17-Nov-2017 ஊழலில் திளைக்கும் தமிழக மின்சாரத்துறை :ஸ்டாலின் குற்றச்சாட்டு

சென்னை, நவ.17
தமிழக மின்சாரத்துறை ஊழலில் திளைப்பதாக திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர்   நேற்று விடுத்துள்ள அறிக்கை விவரம்:  ஒருமுனை மின்சாரப் பயன்பாட்டினை அளவீடு செய்வதற்கான மீட்டரை, உ.பி.யைச் சேர்ந்த “கேபிட்டல் பவர் ஸிஸ்டம்ஸ்” என்ற ஒரு மீட்டருக்கு 453 ரூபாய் என்ற விலையில்  வழங்கத் தயார் என்று கூறியிருக்கிறது. ஆனால், இந்த குறைந்தபட்ச விலையை நிராகரித்த தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், 495 ரூபாய்க்கு மின்சார மீட்டரை வழங்க முன்வந்த “ஹெச்.பி.எல்” என்ற நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கியுள்ளது. குறைந்த விலைக்கு வழங்க முன்வரும் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் கொடுக்க வேண்டும், என்ற டெண்டர் 

சட்டத்தின் அடிப்படை நோக்கத்தையே மீறும் அளவிற்கு இந்த டெண்டர் விஷயத்தில் அழுத்தம் கொடுத்தது யார்? என்ற கேள்வி எழுகிறது. ஏற்கனவே சூரிய ஒளி மின்சாரத்திற்கு அதிக விலை என்று தத்தளித்துக் கொண்டிருக்கும் மின்வாரியத்தில், இப்போது மின்சார மீட்டர் வாங்குவதிலும் அதிக விலை கொடுப்பதன் மூலம் மின்துறை அமைச்சர் தமிழக நலனுக்காக செயல்படுகிறாரா அல்லது தன் சொந்த நலனுக்காக பாடுபடுகிறாரா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. 

இந்த டெண்டர் பற்றிய விவரங்களை எல்லாம் தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக தலைவர் உடனடியாக வெளியிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

அரசின் இதுபோன்ற முறைகேடுகளுக்கு மின்பகிர்மானக் கழகத்தை பலி கொடுத்து விடக்கூடாது என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.  இவ்வாறு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

Label