OUR CLIENTS
பாசனத்திற்காக 4 அணைகளில் தண்ணீர் திறப்பு
பாசனத்திற்காக 4 அணைகளில் தண்ணீர் திறப்பு Posted on 17-Nov-2017 பாசனத்திற்காக 4 அணைகளில் தண்ணீர் திறப்பு

சென்னை, நவ.17
பெரியாறு, நம்பியாறு, பாலாறு பொருந்தலாறு, வரதமாநதி ஆகிய 4 அணைகளில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று உத்தரவிட்டுள்ளார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: தேனி மாவட்டத்திலுள்ள பெரியாறு அணையிலிருந்து கம்பம் பள்ளத்தாக்கிலுள்ள பி.டி.ஆர் மற்றும் தந்தை பெரியார் வாய்க்கால்களின்கீழ் உள்ள ஒரு போக பாசனப் பகுதிகளுக்கு பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடுமாறு வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன.   வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று,  தேனி மாவட்டம், பெரியாறு அணையிலிருந்து, கம்பம் பள்ளத்தாக்கிலுள்ள பி.டி.ஆர் மற்றும் தந்தை பெரியார் வாய்க்கால்களின்கீழ் உள்ள ஒரு போக பாசனக் பகுதிகளுக்கு பாசனத்திற்காக 20.11.2017 முதல் தண்ணீர் திறந்து விட நான் ஆணையிட்டுள்ளேன். இதனால், தேனி மாவட்டம், தேனி மற்றும் உத்தமபாளையம் வட்டங்களில் உள்ள 5146 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.  மேலும், விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் வட்டத்திலுள்ள நம்பியாறு நீர்த்தேக்கத்திலிருந்து, பிசான பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறந்துவிடுமாறு வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன. வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, திருநெல்வேலி மாவட்டம், நம்பியாறு நீர்த்தேக்கத்திலிருந்து, நம்பியாறு நீர்த்தேக்கத்தின் வலது மற்றும் இடது மதகுகளின் பிரதானக் கால்வாயின்கீழ் பாசனம் பெறும் நேரடி மற்றும் மறைமுகப் பாசனப் பகுதிகளுக்கு பிசான பருவ சாகுபடிக்கு 17.11.2017 முதல் தண்ணீர் திறந்துவிட ஆணையிட்டுள்ளேன். இதனால், திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் வட்டத்தில் உள்ள 1744.55 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.  மேலும், விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம், பாலாறு பொருந்தலாறு அணையிலிருந்து பழைய ஆயக்கட்டு பகுதிகளுக்கு பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடுமாறு திண்டுக்கல் மாவட்ட வேளாண் பெருமக்களிடமிருந்து எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன. வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, பாலாறு பொருந்தலாறு அணையிலிருந்து பழைய ஆயக்கட்டு பகுதிகளுக்கு பாசனத்திற்காக 18.11.2017 முதல் தண்ணீர் திறந்து விட நான் ஆணையிட்டுள்ளேன்.  இதனால், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 6,168 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம், வரதமாநதி அணையிலிருந்து ஆயக்குடி பாப்பன் வாய்க்கால், பெரிய வாய்க்கால் மற்றும் பழனி வாய்க்கால் ஆகியவற்றின் ஆயக்கட்டு பகுதிகளுக்கு பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடுமாறு திண்டுக்கல் மாவட்ட வேளாண் பெருமக்களிடமிருந்து எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன.  வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, வரதமாநதி அணையிலிருந்து ஆயக்குடி பாப்பான் வாய்க்கால், பெரிய வாய்க்கால் மற்றும் பழனி வாய்க்கால் ஆகியவற்றின் ஆயக்கட்டு பகுதிகளுக்கு பாசனத்திற்காக 18.11.2017 முதல் தண்ணீர் திறந்து விட நான் ஆணையிட்டுள்ளேன். இதனால், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 1,545 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.  மேலும், விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.   இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Label