OUR CLIENTS
தமிழக புதிய பள்ளிக்கல்வி வரைவு பாடத்திட்டங்கள் முதல்வர் வெளியீடு
தமிழக புதிய பள்ளிக்கல்வி வரைவு பாடத்திட்டங்கள் முதல்வர் வெளியீடு Posted on 21-Nov-2017 தமிழக புதிய பள்ளிக்கல்வி வரைவு பாடத்திட்டங்கள்  முதல்வர் வெளியீடு

சென்னை, நவ.21
தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி திங்களன்று (20.11.2017) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தினை மாற்றியமைத்திட உருவாக்கப்பட்ட உயர்மட்டக் குழு மற்றும் கலைத்திட்ட வடிவமைப்பு குழுக்கள் மூலம் பெறப்பட்ட கருத்துரைகளின்படி தயாரிக்கப்பட்ட  ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரையிலான அனைத்து பாடங்களுக்கான புதிய வரைவு பாடத்திட்ட தொகுப்பு நூல்களை வெளியிட்டார்கள்.

புதிய வரைவு பாடத்திட்ட தொகுப்பு நூல்கள் இணையத்தளத்திலும் வெளியிடுப்பட்டுள்ளன.

தமிழ்நாடு பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தினை மாற்றியமைத்திட 22.5.2017 அன்று அரசாணை வெளியிடப்பட்டது.  இவ்வரசாணையில் மாணவர்களின் கற்றலை படைப்பின் பாதையில் பயணிக்க வைத்தல், தேர்வு முறைகளை மாற்றியமைத்தல், அறிவியல் தொழில் நுட்பத்தின் முக்கியத்துவத்தினை உணரச்செய்தல், மாணவர்கள் தமிழர் தம் தொன்மை, வரலாறு, பண்பாடு மற்றும் கலை இலக்கியம் குறித்த பெருமித உணர்வை பெறச் செய்தல் ஆகியன வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து தற்போதுள்ள கல்வி முறையை மேம்படுத்த  முனைவர்  எம். ஆனந்தகிருஷ்ணன் அவர்களின் தலைமையில் வரைவுத்திட்ட வடிவமைப்புக் குழு உருவாக்கப்பட்டது.  தமிழ்நாடு புதிய கலைத்திட்ட வடிவமைப்பு 2017 உருவாக்கம் தொடர்பாக 20.7.2017 முதல் 22.7.2017 வரை மூன்று நாட்கள்  சுமார் 2000 நபர்கள் பங்கு கொண்ட கருத்தரங்கம் நடைபெற்றது.  கருத்தரங்கில் விவாதிக்கப்பட்ட கருத்துகள் தொகுக்கப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.  மேலும், கணிதம் மற்றும் அறிவியல், மொழி மற்றும் கலைப்பிரிவு பாடங்கள், மதிப்பீட்டு முறை வடிவமைப்பு, தகவல் தொடர்பு தொழில்நுட்பம் ஆகிய புலங்கள் சார்ந்து கலைத்திட்ட வடிவமைப்பு துணைக்குழுக்கள் உருவாக்கப்பட்டன. 

சென்னை, கோவை, தஞ்சாவூர், மதுரை, புதுச்சேரி ஆகிய இடங்களில் கருத்தறியும் கூட்டங்கள் நடத்தப்பெற்று அக்கூட்டங்களில் தெரிவிக்கப்பட்ட கருத்துகள் தொகுக்கப்பட்டுள்ளன.   தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் கருத்தறியும் பெட்டி வைக்கப்பட்டு பள்ளி அளவில் பெறப்பட்ட கருத்துக்கள், மாவட்ட அளவில் தொகுக்கப்பட்டு விவாதிக்கப்பட்டுள்ளது.  மேலும், தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு நிலை ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட கருத்தறியும் கூட்டம் நடத்தப்பட்டு கருத்துகள் தொகுக்கப்பட்டுள்ளன.  பாடவாரியாக அறிக்கைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. 

கலைத்திட்ட வடிவமைப்பு குழு வரைவு அறிக்கை மற்றும் வரைவு பாடத்திட்டத்தில் இடம் பெற வேண்டிய விவரங்கள் மாண்புமிகு தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் தலைமையிலான உயர்மட்டக்குழுவில் விவாதிக்கப்பட்டு கருத்துரைகள் பெறப்பட்டு வரைவு பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.    இவ்வரைவு பாடத்திட்டம் வகுப்பு வாரியாக, பாடவாரியாக, www.tnscert.org என்ற இணையதளத்திலும் வெளியிடப்படவுள்ளது.

இதர மொழிப்பாடங்களுக்கான வரைவு பாடத்திட்டம் துறை சார்ந்த வல்லுநர்களின் கருத்துகள் பெறப்பட்டு இறுதி செய்யப்பட்டு இன்னும் ஒரு வார காலத்திற்குள் வெளியிடப்படும்.
தற்போது வெளியிடப்படும் வரைவு பாடத்திட்டம் தேசிய அளவில் பிற பாடத்திட்டங்களுக்கு நிகராகவும், நம் மாணவர்கள் பல்வேறு போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

புதிய பாடப்புத்தகங்கள் உருவாக்கப்படும் போது பொதுமக்கள் மற்றும் வல்லுநர்களின் கருத்துகளைப் பெற்று   இறுதி செய்யப்பட்ட பாடத்திட்டத்தின் அடிப்படையில் மாணவர்கள் பெற வேண்டிய கற்றல் அடைவுகளை அடிப்படையாகக்கொண்டு பாடத் துணை தலைப்புகள் இடம் பெறும்.  மேலும், மாணவர்களின் சிந்தனையை துhண்டுதல், அறிவியல் மனப்பான்மையை வளர்த்தல், தொடர்புடைய துறைகளில் சமீப கால தொழில் நுட்ப வளர்ச்சி உள்ளிட்ட ஆர்வமூட்டும் வகையிலான விவரங்களும் புதிய மதிப்பீட்டு முறையும் இடம் பெறும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. 

கருத்துகள் ஏதேனும் இருப்பின் அதனை இணைய வழியே பதிவேற்றம் செய்திடலாம்.  மேலும், கடிதம் வாயிலாகவும் தெரிவிக்கலாம். இவ்வாறு பெறப்படும் கருத்துகள் அனைத்தும் பரிசீலிக்கப்பட்டு வரைவு பாடத்திட்டம் இறுதி செய்யப்படும்.

இந்த நிகழ்வின்போது, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர்  கே.ஏ. செங்கோட்டையன், பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர்   பிரதீப் யாதவ்,   பள்ளிக் கல்வித் துறை செயலாளர்  த. உதயச்சந்திரன், தமிழ்நாடு கலைத்திட்ட வடிவமைப்பு குழுவின் தலைவர் பேராசிரியர்  எம். ஆனந்த கிருஷ்ணன் மற்றும் உயர்மட்ட குழு மற்றும் கலைத்திட்ட குழு உறுப்பினர்கள், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர்  க. அறிவொளி, பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் முனைவர் ரெ. இளங்கோவன் மற்றும் பள்ளிக்கல்வித் துறை சார்ந்த உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Label