OUR CLIENTS
தமிழகம் விரைவில் பாலைவனமாகி விடும்! : அன்புமணி ராமதாஸ்
தமிழகம் விரைவில் பாலைவனமாகி விடும்! : அன்புமணி ராமதாஸ் Posted on 23-Nov-2017 தமிழகம் விரைவில் பாலைவனமாகி விடும்! : அன்புமணி ராமதாஸ்

சென்னை, நவ.23
மணல் குவாரிகளை நிரந்தரமாக மூடி, மணல் கொள்ளைக்கு முற்றுப்புள்ளி வைக்கவில்லை என்றால் தமிழகம் வெகுவிரைவில் பாலைவனமாவதை தடுக்க முடியாது என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
 
பா.ம.க. இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-   தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள மணல் தட்டுப்பாட்டை போக்குவதற்காக காவிரி பாசன மாவட்டங்கள் உள்ளிட்ட பகுதிகளில் 70 புதிய மணல் குவாரிகளை அமைக்க தமிழக அரசு முடிவு செய்திருக்கிறது. தமிழகத்தின் நீர்வளத்தையும், சுற்றுச்சூழலையும் கெடுக்கும் இம்முடிவு கடுமையாக கண்டிக்கத்தக்கது. 

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இப்போது 19 மணல் குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றிலிருந்து தமிழக அரசே நேரடியாக மணலை எடுத்து விற்பனை செய்து வருகிறது. கட்டுமானப் பணிகள் வேகம் பெற்றுள்ள நிலையில் தமிழகத்தில் இப்போது மணலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பது உண்மை தான். எனினும், இது செயற்கையாக ஏற்படுத்தப்பட்ட தட்டுப்பாடு தானே தவிர, இயற்கையாக ஏற்பட்டதல்ல. இப்போது ஏற்பட்டுள்ள மணல் தட்டுப்பாட்டை தமிழக அரசு நினைத்தால் மிக எளிதாக சமாளித்து விட முடியும். ஆனால், தமிழகத்தில் பிரிக்க முடியாதது மணல் கொள்ளையும், திராவிட ஆட்சியாளர்களும் தான் என்பதால் மணல் கொள்ளை மூலமான தங்களின் தனிப்பட்ட வருமானத்தை அதிகரித்துக் கொள்வதற்காகத் தான் புதிய மணல் குவாரிகளை திறக்க முதல்-அமைச்சர் துடிக்கிறார்.

மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 55,000 டன் மணல் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தூத்துக்குடி துறைமுகத்தில் சிறைபிடித்து வைக்கப்பட்டிருக்கிறது. அதற்குக் காரணம் தமிழக அரசு தான்.  தமிழகத்திலுள்ள மணல் குவாரிகளில் இருந்து எடுக்கப்படும் மணல் ஒரு கன அடி ரூ.120 வரை விற்பனை செய்யப்படும் நிலையில், மலேசிய இறக்குமதி மணலை ஒரு கனஅடி ரூ.60 என்ற விலையில் வழங்க முடியும். இதனால் உள்நாட்டிலும் மணல் விலை வீழ்ச்சியடைவதுடன் கட்டுமானச் செலவும் குறையும்.  தமிழ்நாட்டில் மணல் வணிகம் என்பது கடந்த 15 ஆண்டுகளில் அனுமதிக்கப்பட்ட கொள்ளையாக மாறி விட்டது. ஆட்சியாளர்களும், மணல் கொள்ளையர்களும் இணைந்து ஆண்டுக்கு ரூ.35,000 கோடி கொள்ளையடிக்கின்றனர்.

மணல் கொள்ளையால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகளை சுட்டிக்காட்டி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், திருச்சி, கரூர் உள்ளிட்ட காவிரி பாசன மாவட்டங்களில் செயல்பட்டு வந்த மணல் குவாரிகளை மூட ஆணையிட்டது.  அவ்வாறு இருக்கும் போது காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் அதிக எண்ணிக்கையில் மணல் குவாரிகளை அமைப்பது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாக மட்டுமின்றி, காவிரிப்பாசன மாவட்ட மக்களின் நலன்களுக்கு எதிரானதாகவும் அமையும்.  

ஆற்று மணல் குவாரிகளை நிரந்தரமாக மூடி, மணல் கொள்ளைக்கு முற்றுப்புள்ளி வைக்கவில்லை என்றால் தமிழகம் வெகுவிரைவில் பாலை வனமாவதை தடுக்க முடியாது.   எனவே, புதிய குவாரிகளை திறக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும். அதுமட்டுமின்றி, செயற்கை மணல் ஆலைகளை அதிக அளவில் திறப்பது, அதன் பயன்பாடு குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவது, பிற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்வது ஆகியவற்றில் தமிழக அரசு கவனம் செலுத்த வேண்டும்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Label