OUR CLIENTS
ஆளில்லா விமானம் மூலம் சென்னை நகர வரைபடம் தயாரிக்கும் பணி துவக்கம்
ஆளில்லா விமானம் மூலம் சென்னை நகர வரைபடம் தயாரிக்கும் பணி துவக்கம் Posted on 23-Nov-2017 ஆளில்லா விமானம் மூலம் சென்னை நகர வரைபடம் தயாரிக்கும் பணி துவக்கம்

சென்னை, நவ.23
சென்னை மாநகராட்சி பகுதிகளில் ஆளில்லா விமானம் மூலம் சொத்துக்கள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகளுக்கான புவிசார் தகவல் அமைப்பு வரைபடம் தயாரிக்கும் பணியினை ராஜா அண்ணாமலை புரத்தில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி துவக்கி வைத்தார்.

அப்போது, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:   இந்தியாவிலேயே நான்காவது பெரிய உள்ளாட்சி அமைப்பான பெருநகர சென்னை மாநகராட்சி 426 சதுர கிலோமீட்டர் பரப்பளவும், 75 லட்சம் மக்கள் தொகையும் கொண்ட மாநகராட்சியாகும். இதன் வரைப்படத்தினை தயாரிக்கும் பணி உலக வங்கி உதவியுடன் மேற்கொள்ளப்படுகிறது.

உலக வங்கியின் ரூ. 6.43 கோடி நிதியுதவியுடன் 2 ஆளில்லா வானூர்தி மூலம் அனைத்து கட்டடங்கள், சாலைகள் மற்றும் சாலைகளில் அமைந்துள்ள  அனைத்து துறைகளின் சேவை பயன்பாட்டுப் பொருட்களை புவிசார் தகவல் அமைப்பு உதவியுடன் வரைபடமாக தயாரிக்கும் பணி  நேற்று துவக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் விமானத் துறையின் தலைமை இயக்குநரகம், உள்துறை அமைச்சகம், பாதுகாப்பு அமைச்சகம், புலனாய்வு துறை மற்றும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் சென்னை மாநகர காவல்துறை அனுமதி பெற்று தமிழ்நாடு நகர்ப்புற உள்கட்டமைப்பு மற்றும் நிதி சேவை நிறுவனத்தின் மூலம் மேற்கொள்ளப்படுகிறது. இப்பணியை 120 நாட்களில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

புவிசார் தகவல் தொகுப்பு விவரங்களை கையாளவும், பெருநகர சென்னை மாநகராட்சியில் மேற்கொள்ளப்படும் மேம்பாட்டு பணிகளின் விவரங்களை தினசரி நிலை உயர்த்தும் வகையிலும், இப்பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டு இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஆளில்லா வானூர்தி மூலம் தயாரிக்கப்படவுள்ள புவிசார் தகவல் வரைபடத்துடன் நிலை உயர்த்தப்பட்ட பெருநகர சென்னை மாநகராட்சியின் மேலாண்மை தகவல் புள்ளி விவரங்கள் இணைக்கப்படும். மேலும், எடுக்கப்படும் படங்கள், விடியோக்கள் இந்திய பாதுகாப்புத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டு, இசைவு பெற்ற பின்னரே பெருநகர சென்னை மாநகராட்சியால் பயன்படுத்தப்படும்.

இத்தகவல்களைப் பாதுகாப்பாக கையாள 24 மணிநேர கண்காணிப்பு கேமரா மற்றும் தடையற்ற மின்வசதி, அனைத்து விதமான பாதுகாப்பு வசதிகளுடன் கைவிரல் ரேகை பதிவு முறையுடன், செயற்பொறியாளர் நிலையில் உள்ள பாதுகாப்பு அலுவலர் நியமனம் செய்யப்பட்டு பெருநகர சென்னை மாநகராட்சி தலைமையகத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது என அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்தார்.

இந்த வரைப்படம் மூலம் சென்னையில் மழைக் காலங்களில் நீர் தேங்கும் தாழ்வான பகுதிகளை எளிதாக கண்டறிந்து முன்கூட்டியே நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில், மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் ஆர். நட்ராஜ், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர், தமிழ்நாடு நகர்ப்புற உள்கட்டமைப்பு மற்றும் நிதி சேவை நிறுவன மேலாண்மை இயக்குநர், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர், சென்னை மாவட்ட ஆட்சியர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Label