OUR CLIENTS
'செக் புக்' தடை செய்ய மத்தியஅரசு முடிவு!
'செக் புக்' தடை செய்ய மத்தியஅரசு முடிவு! Posted on 23-Nov-2017 'செக் புக்' தடை செய்ய மத்தியஅரசு முடிவு!

 புதுடெல்லி, நவ.23
பண மதிப்பு நீக்கத்தைத் தொடர்ந்து அடுத்தபடியாக 'செக் புக்' தடை கொண்டு வர மத்தியஅரசு முடிவு செய்துள்ளது. இனி எல்லாமே டிஜிட்டல்மயமாக்கப்படுகிறது.

ஊழலை ஒழிக்கவும் கறுப்புப்பணத்தை தடுக்கவும் உயர்ந்த பட்ச ரூபாய் நோட்டுகளான 1000,500 செல்லாது என்று கடந்த ஆண்டு நவம்பர் 8ம் தேதி பிரதமர் மோடி அறிவித்தார். இந்ததிடீர் அறிவிப்பால் நாடு முழுவதும் மக்கள் பாதிக்கப்பட்டனர். தங்களிடம் இருந்த ஒரு சில ஆயிரம் மதிப்புள்ள ரூ.1000, 500 நோட்டுகளை மாற்றுவதற்கு அவதிப்பட்டனர். வங்கிகளில் தாங்கள் போட்ட பணத்தைக்கூட எடுக்க முடியாமல் திண்டாடினர். வங்கிகளில் கால் கடுக்க நின்று மாற்ற முடியாத 100க்கும் மேற்பட்டோர் இறக்க நேரிட்டது. 

இந்த கஷ்டங்கள் ஆறுமாதங்கள் வரை நீடித்தது. மேலும் வங்கிகளில் பணம் எடுப்பதற்கும் கூட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்த நிலையில் ஜி.எஸ்.டி. வரிவிகிதமும் மக்களை அல்லலுக்கு உள்ளாக்கியது. சிறு வியாபாரிகளும், பொதுமக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்ததன் விளைவாக, தொடர்ந்து வரிகளில் மாற்றம் செய்து வருகிறார்கள். இந்த இரு நடவடிக்கைகளால் இந்திய பொருளாதாரம் தள்ளாடுகிறது என்றும் தேக்கநிலை உருவாகி இருக்கிறது என்றும் பொருளாதார நிபுணர்கள் குற்றம் சாட்டுகின்றனர். எதிர்க்கட்சிகளும் தொடர்ந்து குறை கூறி வருகின்றன.

இந்நிலையில் சீர்திருத்தம் என்ற பெயரில்  மக்கள் தலையில் இன்னொருசுமையை மத்தியஅரசு சுமத்த இருக்கிறது. அதுதான் இனி வங்கியில் கணக்கு வைத்திருப்போர் 'செக்' புத்தகம் பயன்படுத்தக்கூடாது என்ற உத்தரவாகும். டிஜிட்டல்மயத்தை ஊக்குவிக்கும் வகையிலும் பண பரிவர்த்தனை இல்லா  இந்தியாவை உருவாக்கும் வகையிலும் இந்த சீர்திருத்த நடவடிக்கையை மோடி அரசு எடுக்கிறது. அனைத்து பரிவர்த்தனைகளுக்கும் டெபிட் மற்றும் கிரடிட் கார்டுகளையே மக்கள் பயன்படுத்த வேண்டும் என்ற கட்டாயத்தை அரசு உருவாக்கப் போகிறது.

இதுபற்றி அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பிரவீன் கான்டேல்வால் கூறியதாவது:   டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் வகையில் செக் புக் வசதியை மத்திய அரசு திரும்பப்பெறக்கூடும்.  வர்த்தகர்கள் பல்வேறு வகையான டிஜிட்டல் பரிவர்த்தனைகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.  ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க அரசுக்கு ரூ.25 ஆயிரம் கோடி செலவாகிறது.  அந்தப் பணத்தை எடுத்துச் செல்வதற்கான செலவாக ரூ.6000 கோடி செலவு ஏற்படுகிறது.   டெபிட் கார்டுகள் மூலமாக பணம் செலுத்துவதற்கு 1 சதவீதம்  வங்கிகள் கட்டணம் வசூலிக்கின்றன.  கிரடிட் கார்டுகளுக்கு 2 சதவீதம் வசூல் செய்கின்றன. இந்த கட்டணங்களை மத்தியஅரசு மானியமாக அளித்தால் வங்கிகள் அந்த கட்டணத்தை ரத்து செய்து விடும். டெபிட் கார்டு வைத்திருக்கும் 80கோடி பேரில்வெறும் 5 சதவீதம்பேர் தான்  பணமில்லா பரிவர்த்தனைக்காக அதைபயன்படுத்துகிறார்கள்.  மீதி 95 சதவீத்ம் பேர் ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்காக மட்டுமே  டெபிட்கார்டுகளை  பயன்படுத்துகின்றனர்.  இவ்வாறு அவர் கூறினார்.

செக் பயன்படுத்த மத்திய அரசு தடை விதிக்குமானால், வியாபாரிகள் தான் பெருமளவில் பாதிக்கப்படுவார்கள்.  95 சதவீத வர்த்தகப்பணிகள் பணம் மற்றும் காசோலைகள் மூலமே நடக்கின்றன. எனவே செக் புக் முடக்கப்பட்டால் வியாபாரிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாவார்கள் என்றே கருதப்படுகிறது. பணமதிப்பு நீக்கத்துக்கு பிறகு செக் மூலமான பரிவர்த்தனைகள் அதிகரித்துள்ளன. செக் மூலம் பணம் அளிக்கப்படுகிற போது அது ஒரு ஆதாரமாக இருந்து வருகிறது. இனி அதற்கும் தடை விதித்து விட்டால், பொதுமக்களும் பெருமளவில் பாதிக்கப்படுவார்கள். பணமதிப்பு நீக்கத்தின் போது மட்டுமே டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகளவில் நடந்தன. இப்போது பணப்புழக்கம் தாராளமான பிறகு, டிஜிட்டல் பரிவர்த்தனைகள் குறைந்துவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Label