OUR CLIENTS
தேர்வுக்குழு கூட்டத்தில் பங்கேற்க மாட்டேன் : மு.க.ஸ்டாலின் திட்டவட்ட அறிக்கை
தேர்வுக்குழு கூட்டத்தில் பங்கேற்க மாட்டேன் : மு.க.ஸ்டாலின் திட்டவட்ட அறிக்கை Posted on 24-Nov-2017 தேர்வுக்குழு கூட்டத்தில் பங்கேற்க மாட்டேன்  : மு.க.ஸ்டாலின் திட்டவட்ட அறிக்கை

 சென்னை, நவ.24
மாநில தலைமை தகவல் ஆணையர் மற்றும் மாநில தகவல் ஆணையர்கள் தேர்வுக்கான தேர்வுக் குழு ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க மாட்டேன் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

 தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-  மாநில தலைமை தகவல் ஆணையர் மற்றும் மாநில தகவல் ஆணையர்கள் தேர்வுக்கான தேர்வுக் குழு ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்குமாறு வேண்டுகோள் விடுத்து வரப்பெற்ற கடிதங்களையும், அத்துடன் இணைக்கப்பட்டுள்ள பட்டியலையும் கவனமாகப் பார்வையிட்டேன். மேற்கண்ட இரு பதவிகளுக்கும் விண்ணப்பித்துள்ளவர்களின் பெயர்கள் மட்டும் அனுப்பப்பட்டுள்ளதே தவிர, அவர்களைப் பற்றிய முழு விவரங்கள் அடங்கிய விண்ணப்ப நகல்கள் வழங்கப்படவில்லை.  

அதுமட்டுமின்றி மாநில தலைமைத் தகவல் ஆணையர் உள்ளிட்ட பதவிகளுக்கு விண்ணப்பித்துள்ளவர்களில் ஒருவரான டாக்டர் எம்.ராஜாராம் ஐ.ஏ.எஸ் (ஓய்வு) ஏற்கனவே தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்குத் தேர்வு செய்யப்பட்டு, அவரது நியமனத்தை உயர்நீதிமன்றம் 22.12.2016 அன்று ரத்து செய்ததைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.  அவ்வாறு நிராகரிக்கப்பட்டு தகுதியிழந்த ஒருவரை மீண்டும் இந்த அரசு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய உறுப்பினராக நியமித்ததோடு மட்டுமின்றி, இப்போது மாநில தலைமைத் தகவல் ஆணையர் பதவிக்கும் அவரிடமிருந்து விண்ணப்பத்தைப் பெற்று பரிசீலிக்க இருப்பது, “வெளிப்படைத்தன்மை, பொறுப்புடமை, ஊழலைத் தடுத்தல்” போன்ற தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் அடிப்படை நோக்கங்களுக்கு முற்றிலும் எதிராகவும், அரசின் உள்நோக்கத்தை உணர்த்துவதாகவும் அமைந்திருக்கிறது.

23.11.2017 அன்று நடக்கும் கூட்டத்திற்கான விண்ணப்பங்கள் ஏற்கனவே பெறப்பட்டு கூட்டத்திற்கான தேதியும் இறுதி செய்யப்பட்ட பிறகு மீண்டும் 21.11.2017 வரை விண்ணப்பங்களைப் பெற்றிருப்பதும் வியப்பளிப்பதாகவும், நேர்மையான தேர்வு முறைக்கு விரோதமாகவும் முரணாகவும் அமைந்திருக்கிறது.  பொதுநலனுக்கு மாறான இந்நிலையில், அரசியல் சட்டப்படியான மிக முக்கியமான மாநிலத் தலைமைத் தகவல் ஆணையர் உள்ளிட்ட பதவிகளுக்கு அரசியல் சட்டத்தின்படி அறுதிப் பெரும்பான்மை இல்லாத ஒரு அரசு தேர்வு செய்யும் குறைந்தபட்ச தார்மீக உரிமையைக் கூட இழந்து விட்டதாகவே பிரதான எதிர்க் கட்சித் தலைவர் என்ற முறையில் நான் கருதுகிறேன்.

நடுநிலையாளர்களும் இந்தக் கருத்தை நிச்சயமாக ஏற்றுக் கொள்வார்கள். ஆகவே இந்தத் தேர்வுக் குழு ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்று முறைகேடுகளுக்குத் துணைபோக இயலாது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Label