OUR CLIENTS
அரசை மாற்றும் வரை போராட்டம் தொடரும் மு.க.ஸ்டாலின் உறுதியான அறிக்கை
அரசை மாற்றும் வரை போராட்டம் தொடரும் மு.க.ஸ்டாலின் உறுதியான அறிக்கை Posted on 24-Nov-2017 அரசை மாற்றும் வரை போராட்டம் தொடரும்  மு.க.ஸ்டாலின் உறுதியான அறிக்கை

 சென்னை, நவ.24
தமிழக அரசு நிர்வாகத்தை மாற்றிடும் வரையில் நமது போராட்டக் களங்கள் இனியும் தொடரும் என மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

 தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு தழுவிய அளவில் ரே‌ஷன் கடைகளின் முன்பு, கழகத்தினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் தாக்கம் குறித்த பல்வேறு செய்திகள் அறிவாலயத்தில் குவிந்து வருகின்றன. நாம் நடத்திய ஆர்ப்பாட்டம், கோடி கோடியாய் குவித்த சொத்துகளை நள்ளிரவில் சோதனையிட வந்து விட்டார்களே என்பதை எதிர்த்து அல்ல. பங்கு தர மறுத்தால், ஆட்சியின் பலாபலன்களில் பங்கு கிடைக்குமா என்ற சந்தேகத்தால் அரசு விழா மேடையிலேயே வெளிப்படுகின்ற எதிர்ப்புக்குரல் அல்ல. அணிகள் இணைந்தாலும் மனங்கள் இணையவில்லை என்கிற விரக்தி குரலின் வெளிப்பாடும் அல்ல.

செயலற்றுக் கிடக்கும் அரசின் நிர்வாகச் சீர்கேட்டால் அடிப்படைத் தேவைகளைக்கூடப் பெற முடியாமல் அல்லல்படும் மக்களின் நலன் காக்க வானுயர எழுந்த போர்க்குரல். நியாய விலைக்கடைகளில் வழங்கப்படும் சர்க்கரையின் விலையை கிலோ ரூ 13.50 என்பதிலிருந்து கிலோ ரூ.25 என ஒரேயடியாக உயர்த்தி, ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களின் வாழ்க்கை கசந்து போகும்படி செய்த மாநில அரசின் செயல்பாட்டையும், மாநில அரசுக்கு சற்றும் சளைக்காமல் மக்களை வதைப்பதில் போட்டிப் போடும் மத்திய அரசின் எதேச்சதிகாரப் போக்கைக் கண்டித்தும், தமிழகத்தில் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகள் முன்பாகவும் கழகத்தினர் திரண்டு நின்று பொதுமக்களுடன் இணைந்து நின்று, நேற்று முன்தினம் (நவம்பர் 23-ம் தேதி ) நடத்திய போராட்டக் களத்தின் வெற்றிச் செய்திகள் மாவட்ட ஒன்றிய நகர பகுதி கிளை கழகங்கள் வாரியாக கிடைத்துள்ளன.

‘அரிசி முழுமையான அளவில் வழங்கப்படுவதில்லை. சர்க்கரை விலை கடும் உயர்வு, மண்ணெண்ணெய் இல்லை. பாமாயில் எப்போது வரும் எனத் தெரியாது. துவரம் பருப்பு ஏற்கனவே நிறுத்தப்பட்டு விட்டது. உளுத்தம் பருப்பு இனி வழங்கப்படமாட்டாது’, என பொதுமக்களை அலைக் கழிக்கும் ஆட்சியாளர்களின் நோக்கம், நியாயவிலைக் கடைகளை நிரந்தரமாக மூடுவதுதான்.  தமிழக மக்களின் உணவு உரிமையைப் பறிக்கும் விதத்தில், பட்டினிச் சாவுகள் ஏற்படக்கூடிய அபாயத்தை நோக்கித் தள்ளிக் கொண்டிருக்கிறது மாநிலத்தை ஆளும் ‘குதிரை பேர’ பினாமி அரசு. அந்த அரசின் செயலற்ற தன்மையை சுட்டிக்காட்டவும், விரைவாக இந்த நிலையை மாற்றவும்தான் நியாயவிலைக் கடைகளின் முன்பாக இருவண்ணக் கொடியேந்தி, கழகத்தினர் பெருமளவில் திரண்டு ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர்.

ஜனநாயக வழியில், நியாய விலைக் கடைகளில் உயர்த்தப்பட்டுள்ள சர்க்கரையின் விலையை குறைக்க வலியுறுத்தியும், உணவுப் பொருட்களை தட்டுப்பாடின்றி வழங்கிடக் கோரியும் கழகத்தினர் நடத்திய ‘ஆர்ப்பாட்ட போர்ப்பாட்டு’ ஆளுங்கட்சியினருக்கு இடிமுழக்கமாக அமைந்துள்ளது. எந்த ஒரு போராட்டத்தை கழகம் முன்னெடுத்தாலும், எந்த ஒரு பிரச்னை குறித்து கழக செயல் தலைவர் என்றமுறையில் நான் அறிக்கை வெளியிட்டாலும், அதன்பிறகே ஆள்வோரிடமிருந்து விளக்கம் வருகிறது. அது விளக்கம் அல்ல, அவர்களுக்கு ஏற்பட்டுள்ள கலக்கம். ஆனால் அதற்கும் கூட அரசு விழாக்களை பயன்படுத்துகிறார்களே என்பதுதான் என் கவலை.  மக்களை வஞ்சித்து, மத்திய அரசிடம் மண்டியிட்டு, சுயநலனைத் தவிர வேறெதற்கும் செயல்படாத சீர்கெட்ட அரசு நிர்வாகத்தை மாற்றிடும் வரையில் நமது போராட்டக் களங்கள் இனியும் தொடரும். இருவண்ணக் கொடியேந்தி நேற்றைய தினம்போல், ஒவ்வொரு களத்திலும் கழகத்தினர் அணிதிரண்டு மக்களுக்காக உரிமைக்குரல் கொடுத்திட வேண்டும். நாம் அடித்தட்டு மக்களுக்கு படிக்கட்டாக நிற்போம். அவர்கள் ஏற்றம் பெற அயராது உழைப்போம். சட்டத்தின் வழியில் ஜனநாயகமுறையில் ஆட்சி மாற்றம் காண்போம். அது விரைந்து நடக்க வியூகம் வகுப்போம்.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Label