OUR CLIENTS
எண்ணெய் சுத்திகரிப்புத் திறனை இருமடங்காக்க பெட்ரோலிய அமைச்சகம் திட்டம்
எண்ணெய் சுத்திகரிப்புத் திறனை இருமடங்காக்க பெட்ரோலிய அமைச்சகம் திட்டம் Posted on 27-Nov-2017 எண்ணெய் சுத்திகரிப்புத் திறனை இருமடங்காக்க பெட்ரோலிய அமைச்சகம் திட்டம்

புதுடெல்லி, நவ.27
அடுத்த சில ஆண்டுகளில் கார்களும், ரயில்களும் முற்றிலும் மின்சாரத்தால் மட்டுமே இயங்கும் என சாலைப் போக்குவரத்து மற்றும் ரயில்வே துறைகளின் மத்திய அமைச்சர்கள் தெரிவித்துள்ள நிலையில், நாட்டின் எண்ணெய் சுத்திகரிப்பு திறனை இருமடங்காக்க உள்ளதாக பெட்ரோலியத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.

2022-ஆம் ஆண்டுக்குள், டீசல் லோகோமோடிவ் எஞ்சின்களுக்கு முடிவு கட்டி, அனைத்து ரயில்களும் மின்மயமாக்கப்படும் என அத்துறையின் அமைச்சர் பியூஷ் கோயல் கடந்த வாரம் அறிவித்தார். இதேபோல், 2030-ஆம் ஆண்டுக்குப் பின் அனைத்து கார்களும் மின்சாரத்தால் இயங்கும் வகையில் மட்டுமே தயாரிக்கப்படும் என மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். இதன் மூலம் பெட்ரோல், டீசல் கார்களின் உற்பத்தி முடிவுக்கு வரவுள்ளது. 

டெஸ்லா நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரி எலான் மஸ்க் மின்சாரத்தால் இயங்கும் டிரக்குகளை அறிமுகப்படுத்தியுள்ளதோடு, ரயில்வே-வை விட சரக்குப் போக்குவரத்தில் சிக்கனம் கடைப்பிடிக்க இது உதவும் எனக் கூறியுள்ளார். போயிங் மற்றும் ஜெட்புளூ ஏர்வேஸ் ஆகிய நிறுவனங்கள், 2022-ஆம் ஆண்டு முதல் மின்சாரத்தாலும் இயங்கக்கூடிய சிறிய ரக ஹைப்ரிட் விமானங்களை விற்பனைக்கு கொண்டுவரவுள்ளது. தொழில்நுட்பம் வளர வளர பேட்டரிகள் மின் சேமிப்புத் திறன் மேம்படுத்தப்பட்டு, கப்பல்கள் கூட இனி மின்சாரத்தால் இயங்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.  எனவே, வரும் ஆண்டுகளில் பெட்ரோல், டீசல் ஆகிய எரி எண்ணெய்களுக்கான தேவை முற்றிலும் இல்லாமல் போகாது என்றாலும், எதிர்பார்த்ததை விட அவற்றுக்கான தேவை குறையும் என நிபுணர்கள் கணித்துள்ளனர். 2020-ஆம் ஆண்டில் உச்சத்தை எட்டும் உலகளாவிய பெட்ரோல், டீசல் தேவை அதன் பின் படிப்படியாகக் குறையத் தொடங்கும் என்றும் ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்நிலையில், எண்ணெய் சுத்திகரிப்பு திறனை இரட்டிப்பாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திரப் பிரதான் தெரிவித்துள்ளார். 230 மில்லியன் டன்களாக இருக்கும் சுத்திகரிப்புத் திறனை 600 மில்லியன் டன்களாக உயர்த்த இருப்பதாக அவர் அறிவித்துள்ளார்.

உலகளவில், பெட்ரோல், டீசலுக்கான தேவை குறையும்போது எதிர்காலத்தில் அத்துறையில் பெரும் நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. பெட்ரோல், டீசலின் எதிர்காலம் அஸ்தமனத்தை சந்திக்கவுள்ள நிலையில், அத்துறையில் முதலீடு செய்பவர்களுக்கு வங்கிகள் கடன் வழங்குவது, எதிர்காலத்தில் வாராக்கடனை அதிகரிக்க வழிவகுக்கும் எனவும் கூறப்படுகிறது. போக்குவரத்து சார்ந்த இரு துறைகளின் மத்திய அமைச்சர்கள் மின்மயமாக்கத் திட்டமிட்டுள்ள நிலையில், பெட்ரோலியத்துறை அமைச்சகத்தின் இந்தத் திட்டம் முரண்பாடாக உள்ளதாக சொல்லப்படுகிறது.

Label