OUR CLIENTS
தீவிரவாதம் மனித குலத்திற்கே அச்சுறுத்தலாக உள்ளது.. மோடி வேதனை தீவிரவாதத்தை ஒழிக்க அனைத்து நாடுகளும் ஒன்று சேர வேண்டும்: பிரதமர் நரேந்திர மோடி
தீவிரவாதம் மனித குலத்திற்கே அச்சுறுத்தலாக உள்ளது.. மோடி வேதனை தீவிரவாதத்தை ஒழிக்க அனைத்து நாடுகளும் ஒன்று சேர வேண்டும்: பிரதமர் நரேந்திர மோடி Posted on 27-Nov-2017 தீவிரவாதம் மனித குலத்திற்கே அச்சுறுத்தலாக உள்ளது.. மோடி வேதனை தீவிரவாதத்தை ஒழிக்க அனைத்து நாடுகளும் ஒன்று சேர வேண்டும்: பிரதமர் நரேந்திர மோடி

புதுடெல்லி, நவ.27
மன் கீ பாத் வானொலி நிகழ்ச்சியில் பேசிய மோடி தீவிரவாதம் மனித குலத்திற்கு அச்சுறுத்தலாக உள்ளது என்று கூறியதுடன் மும்பை தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்துவதாகவும் நேற்றைய நிகழ்ச்சியில் கூறினார். 

மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று வானொலியில் மனதின் குரல் (மன் கீ பாத்) நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசி வருகிறார். 
வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி  உரையாற்றும் மன் கீ பாத் நிகழ்ச்சி நேற்று காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலியின் அனைத்து அலைவரிசைகளிலும் ஒலிபரப்பானது.

அதன் படி நேற்றைய தினம் அவர் தீவிரவாதம் குறித்து பேசியிருந்தார்.   அவரது உரையில் முக்கியமானவை இவை தான்... 

இதில் பேசிய பிரதமர்  எனது அருமை நாட்டுமக்களே,  நேற்று  நவம்பர் மாதம் 26ம் தேதிதான் நமது அரசியலமைப்புச் சட்ட நாள். 1949ம் ஆண்டில், இன்றைய நாளன்று தான், அரசியலமைப்புச்சட்ட சபையில் பாரதத்தின் அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 1950ம் ஆண்டு, ஜனவரி மாதம் 26ம் தேதியன்று, அரசியலமைப்புச்சட்டம் அமலுக்கு வந்தது.
இந்த அரசியலமைப்புச்சட்டம் காட்டும் ஒளியின் துணைகொண்டு, அரசியலமைப்புச் சட்டத்தை அளித்தவர்களின் தெளிவான சிந்தனைகளை மனதில் தாங்கிப் புதிய பாரதம் அமைப்பது நம் அனைவரின் கடமையாகும்.

நமது அரசியலமைப்புச் சட்டம் மிகவும் விசாலமானது. அதில் காணப்படாத வாழ்க்கையின் அம்சம் இல்லை, இயற்கை பற்றிய விஷயம் இல்லை எனும் அளவுக்கு இருக்கிறது. அனைவருக்கும் சமத்துவம், அனைவரிடத்திலும் புரிந்துணர்வு என்பது நமது அரசியலமைப்புச் சட்டத்தின் அடையாளம்.  இதில் ஒவ்வொரு குடிமகன், ஏழையாகட்டும், தாழ்த்தப்பட்டவராகட் டும், பிற்படுத்தப்பட்டவராகட்டும், மறுக்கப்பட்டவராகட்டும், பழங்குடியினராகட்டும், பெண்களாகட்டும் – அனைவரின் அடிப்படை உரிமைகளும் பாதுகாக்கப்பட்டு இருக்கின்றன, அவர்களின் நலன்களுக்குப் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருக்கின்றது.  அரசியலமைப்புச் சட்டத்தின் ஒரு எழுத்தைக்கூட விடாமல் பின்பற்ற வேண்டியது நம்மனைவரின் கடமையாகும்.
குடிமக்களாகட்டும், ஆட்சியாளர்களாகட்டும், அரசியலமைப்புச் சட்டத்தின் உணர்வைப் புரிந்துகொண்டு முன்னேற வேண்டும். யாருக்கும் எந்தவிதமான பங்கமும் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும் என்பதே அரசியலமைப்புச் சட்டத்தின் குறிக்கோள். நேற்று அரசியலமைப்புச் சட்ட நாள், டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரை நினைவுகூர்வது என்பது இயல்பான விஷயம். இந்த அரசியலமைப்புச் சபையின் மகத்துவம் நிறைந்த விஷயங்கள் தொடர்பாக, 17 பல்வேறு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டன.  இவற்றில் மிகவும் மகத்துவம் வாய்ந்த குழுக்களில் ஒன்று தான் வரைவுக்குழு. டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் அரசியலமைப்புச் சட்டத்தின் வரைவுக்குழுவின் தலைவராக இருந்தார். அவர் ஒரு மகத்துவம் வாய்ந்த பங்களிப்பை நல்கிக் கொண்டிருந்தார். இன்று (நேற்று நவம்பர் 26ம் தேதி)  நாம் பாரதத்தின் அரசியலமைப்புச்சட்டம் அளிக்கும் பெருமிதத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம், இதை அமைப்பதில் பாபாசாகேப் அம்பேத்கரின் செயல்திறன்மிக்க தலைமையின் அழியாத முத்திரை பதிக்கப்பட்டு இருக்கிறது.

நமது இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்காக அதை உருவாக்கியவர்களின் உழைப்பு பெருமையடைய வைக்கிறது. அரசியலமைப்பு சட்டத்தை வரைவுப்படுத்தியபோது சமூகத்தின் அனைத்து பிரிவு மக்களின் நலன்களை உறுதி செய்தார் அம்பேத்கர். நாட்டுக்கு அவர் ஆற்றிய பங்கு வளமானது, விலைமதிப்பில்லாதது. 

கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் நடந்த மும்பை தீவிரவாத தாக்குதலை இந்தியா அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. இந்த தாக்குதலில் உயிரிழந்த மக்கள், காவலர்கள், பாதுகாப்பு அதிகாரிகள் ஆகியோருக்கு இந்த நாடு வீரவணக்கம் செலுத்துகிறது. அவர்களின் தியாகங்களை இந்த நாடு மறக்காது. 

மனித குலத்துக்கு தீவிரவாதம் தான் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. இந்தியாவுக்கு மட்டுமல்ல உலக நாடுகளுக்கே அச்சுறுத்தலாக உள்ளது.  உலக நாடுகள் ஒன்றிணைந்து தீவிரவாதத்தை வேரறுக்க காலம் கனிந்து விட்டது. 40 ஆண்டுகளுக்கு மேலாக இந்தியாவில் தீவிரவாதம் தலைதூக்கி வருகிறது. தீவிரவாதத்தின் அழிவை ஏற்படுத்தக் கூடிய விஷயங்களை தற்போதுதான் உலக நாடுகள் உணர்கின்றன.  நாம் கூறியபோது அவற்றை உலக நாடுகள் தீவிரமாக எடுத்து கொள்ளவில்லை.  மனித நேயத்திற்கு பயங்கரவாதம் சவாலாக அச்சுறுத்தலாகவும் உள்ளது. அனைவரும் ஒன்று சேர்ந்து போராடி பயங்கரவாதத்தை அழிக்க வேண்டும். பயங்கரவாதத்தை ஒழிக்க அனைத்து நாடுகளும் ஒன்று சேர வேண்டும். நாம் பயங்கரவாதத்தை வெற்றி பெற விட மாட்டோம்.

இந்தியா புத்தர், மகாவீரர், குரு நானக், மகாத்மா காந்தி உள்ளிட்டோர் வாழ்ந்த பூமியாகும். இதனால் உலக முழுவதும் அகிம்சையையும் அமைதியையும் மட்டுமே நாம் பரப்புகிறோம். நமது நாகரீகங்கள் ஆற்றங்கரையில் உருவாகியுள்ளன, சிந்து, கங்கை, யமுனா அல்லது சரஸ்வதி ஆகிய நதிகளும், கடல்களும் நமது நாட்டில் பொருளாதார ரீதியாகவும் முக்கியத்துவம் அளிக்கிறது. இவை தான் ஒட்டுமொத்த உலகுக்கே நுழைவுவாயிலாகும். 

சத்ரபதி சிவாஜியையும் அவரது கடற்படையின் திறமையையும் யாரால் மறக்க முடியும். அவரது ஆட்சி காலத்தில் கொங்கன் கடற்கரை பகுதிகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளாக இருந்தன. அவருக்கு சொந்தமான கோட்டைகளான சிந்து துர்க், முருத் ஜன்ஜிரா, சுவர்ண துர்க் உள்ளிட்டவை கடற்கரையை சுற்றியிருந்தன. 

இன்றைய காலகட்டத்தில் உலகில் உள்ள பெரும்பாலான கடற்படைகள் போர் பிரிவுகளில் பெண்களை அனுமதிக்கின்றன. ஆனால் 900 ஆண்டுகளுக்கு முன்பு சோழர் கடற்படையிலும் ஏராளமான பெண்கள் முக்கிய பங்காற்றியுள்ளனர் என்பது சிலருக்கு மட்டுமே தெரியும். டிசம்பர் மாதம் 4ம் தேதி நாம் அனைவரும் கடற்படை நாளைக் கொண்டாட இருக்கிறோம். இந்தியக் கடற்படை, நமது கடலோரங்களைக் காத்து பாதுகாப்பளிக்கிறது. கடற்படையோடு இணைந்திருக்கும் அனைவருக்கும் என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

டிசம்பர் மாதம் 5ம் தேதி உலக மண் வள நாள். நமது விவசாய சகோதர சகோதரிகளிடம் சில விஷயங்களைக் கூற நான் விரும்புகிறேன். நாம் உண்ணும் உணவு அனைத்தும் இந்த மண்ணோடு தொடர்புடையது. ஒருவகையில் ஒட்டுமொத்த உணவுச் சங்கிலியும், மண்ணோடு தொடர்புடையது.  யூரியா பயன்படுத்துவதால் மண் வளம் பாதிக்கப்படும். அதன் பயன்பாட்டை குறைக்க விவசாயிகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். மண்வளத்தை மேம்படுத்த வழங்கப்படும் ஆலோசனைகளை விவசாயிகள் கடைப்பிடிக்க வேண்டும். உற்பத்தியை அதிகரிக்க மண் வளத்தை பாதுகாக்க வேண்டியது அவசியம். இவ்வாறு, பிரதமர் நரேந்திர மோடி மன் கீ பாத் வானொலி உரையில் பேசினார். 

Label