OUR CLIENTS
உயிர் காக்கும் மருத்துவப் பணியில் ஈடுபடும் செவிலியர்களை நடுத்தெருவில் போராடவிட்டிருக்கிறது அதிமுக எடப்பாடி அரசு
உயிர் காக்கும் மருத்துவப் பணியில் ஈடுபடும் செவிலியர்களை நடுத்தெருவில் போராடவிட்டிருக்கிறது அதிமுக எடப்பாடி அரசு Posted on 29-Nov-2017 உயிர் காக்கும் மருத்துவப் பணியில் ஈடுபடும் செவிலியர்களை நடுத்தெருவில்  போராடவிட்டிருக்கிறது அதிமுக எடப்பாடி அரசு

சென்னை, நவ.29
உயிர் காக்கும் மருத்துவ சிகிச்சையில் ஈடுபட்டுள்ள செவிலியர்களை இப்படி நடுத்தெருவிற்கு வந்து போராட விட்டிருக்கும் சுகாதாரத் துறை அமைச்சர் மற்றும்  முதலமைச்சருக்கும் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதாக திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பார்க அவர் வெளியிட்ட அறிக்கையில், “நோயால் வாடும் ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சையும், ஆறுதலும் அளித்திடும் செவிலியர்கள் ‘குதிரை பேர’ அதிமுக அரசின் அலட்சியத்தால் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ் வளாகத்துக்குள்ளேயே உள்ளிருப்புப் போராட்டம் நடத்த வேண்டிய அவலநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள்.

2015-ஆம் ஆண்டு மருத்துவத் தேர்வாணையம் மூலம் நியமிக்கப்பட்ட 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட செவிலியர்களை இரண்டாண்டுகளுக்கு மேலாகியும் நிரந்தரம் செய்யாமல், சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர். விஜயபாஸ்கர் தன் மீதுள்ள வருமான வரித்துறை விசாரணைகளை சரிசெய்வதற்காக அங்குமிங்கும் அலைந்து கொண்டிருக்கிறார் என்றால், பணியாளர் விவகாரங்களைக் கவனிக்க வேண்டிய மருத்துவத்துறை அதிகாரிகளும், சுகாதாரத்துறைச் செயலாளரும் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.

எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக அரசு மருத்துவமனைகள் மற்றும் சுகாதர நிலையங்களில் பணியாற்றி வருபவர்களுக்கு, ஒப்பந்த ஊழியர்களுக்கு வழங்கப்படும் மிகக் குறைந்த ஊதியமே இன்றுவரை வழங்கப்பட்டு வருவது மிகவும் கண்டிக்கத்தக்கது.

செவிலியர்களுக்கு ஊதிய உயர்வும் அளிக்காமல், பணி நிரந்தரமும் செய்யாமல் அலைக்கழித்ததால், அவர்கள் தங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று பலமுறை விடுத்த கோரிக்கைகளை அனுசரித்து அரசு அதிகாரிகளாவது அழைத்துப் பேசிப் பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டிருக்க வேண்டும். ஆனால், செயல்படாத அமைச்சருடன் சேர்ந்து அதிகாரிகளும், நிர்வாக நடவடிக்கைகளைக் கூட எடுக்காமல் அக்கறையற்று இருப்பது வேதனையளிக்கிறது.

ஏற்கனவே, அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஆளுகின்றவர்களின் பேச்சைக் கேட்டு அமைதியாக இருந்த தலைமைச் செயலாளர், அதற்காக நீதிமன்றத்தில் விளக்கமளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அதுபோன்று, நீதிமன்றமே தலையிட்டால் மட்டும்தான் அரசு செயலாளர்களும், தலைமைச் செயலாளரும் செயல்படுவார்கள் என்றால் தமிழகத்தின் நிர்வாகம் எந்தளவிற்கு மோசமான கட்டத்தை எட்டி, அபாய கட்டத்தில் இருக்கிறது என்பதை அனைவரும் புரிந்துகொள்ள முடிகிறது.

செவிலியர்களுக்கு 34 ஆயிரம் ரூபாய் ஊதியம் கொடுக்க வேண்டும் என்று 2016-ல் உச்ச நீதிமன்றமே தீர்ப்பளித்தும், இன்னும் 7 ஆயிரம் முதல் 10 ஆயிரம் மட்டுமே சம்பளம் வழங்கப்படுவது, இந்த அரசுக்கு நீதிமன்ற தீர்ப்புகள் பற்றி எந்தக் கவலையும் இல்லை என்பதையும், சட்டத்தின் ஆட்சியை மீறும் ஆட்சியாளர்களுக்கு, அதிகாரிகளும் விரும்பித் துணை போகிறார்கள் என்பதையும் வெளிப்படுத்தி, தமிழகத்தின் ‘கருப்பு அத்தியாயமாக’ அமைந்திருக்கிறது.

அவசர அவசரமாக 400-க்கும் மேற்பட்ட மருத்துவர்களை எந்தவித எழுத்துத் தேர்வும் இன்றி, நேரடியாக அழைத்து ‘வாக் இன் இன்டர்வியூவ்’ மூலம் நியமித்து, இடஒதுக்கீட்டுக் கொள்கைகளை தூக்கியெறிந்து விட்டு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு வாரியத்தையும் புறக்கணித்துவிட்டு, நியமித்துள்ள அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர், 2 ஆண்டுகளாக பணி நிரந்தரம் ஆகாமல் வாழ்வாதாரத்திற்காகப் போராடிக்கொண்டு  இருக்கும் செவிலியர்களின் குறைகளைக் கேட்கக்கூட நேரமில்லாமல், “ஆர்.கே.நகருக்கு மீண்டும் தேர்தல் நிதி திரட்டுவதில்” தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

எனவே, உயிர் காக்கும் மருத்துவ சிகிச்சையில் ஈடுபட்டுள்ள செவிலியர்களை இப்படி நடுத்தெருவிற்கு வந்து போராட விட்டிருக்கும் “குட்கா அமைச்சர்” மற்றும் “குதிரை பேர” முதலமைச்சருக்கும் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். ஏற்கனவே பல்வேறு துறைகளில் நடைபெறும் நியமனங்களில் மிக மோசமான குளறுபடிகள் நடக்கின்றன. சமீபத்தில் கூட சென்னைப் பெருநகர் குடிநீர் வடிகால் வாரியத்தில் நடைபெற்ற புதிய நியமனங்களில் முறைகேடுகளுக்கு உதவி செய்ய மறுத்த நிர்வாக இயக்குனரே தூக்கியடிக்கப்பட்டார். ஆனால், 400-க்கும் மேற்பட்ட டாக்டர்கள் நியமனத்தில் தேர்வுக்கான விதிமுறைகள் பற்றி எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதுபோன்ற முறைகேடான நியமனங்களுக்குக் காரணமான அத்தனை பேரும் சட்டத்திற்குப் பதில் சொல்ல வேண்டிய நிலை நிச்சயம் வந்தே தீரும் என்பதை அமைச்சர்களும் சரி, இந்த ஊழல்களுக்கும், முறைகேடுகளுக்கும் துணைபோகும் சில அதிகாரிகளும் சரி புரிந்து கொள்ள வேண்டும். ஆகவே, அமைச்சர்களின் நியமன ஊழல்களுக்குத் துணைபோவது மட்டுமே தங்கள் கடமை என்று இருக்காமல், செவிலியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற உடனடியாக அரசு துறைச்செயலாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அவர்களுக்கு எல்லாம் தலைவராக இருக்கும் தலைமைச் செயலாளர் இனியும் வேடிக்கை பார்க்காமல், செவிலியர்களை அழைத்துப் பேசி உடனடியாக அவர்களது நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அதைவிடுத்துப் போராடும் செவிலியர்கள் மீது அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்டு, பத்திரிக்கையாளர்களை சந்திக்க விடாமல் மிரட்டும் போக்கை காவல்துறை மூலம் பின்பற்றக் கூடாது என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்” இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Label