OUR CLIENTS
சரத் யாதவ், அலிஅன்வர் எம்பி பதவி தகுதி நீக்கம் : துணை குடியரசுத் தலைவர் வெங்கய்ய நாயுடு உத்தரவு
சரத் யாதவ், அலிஅன்வர் எம்பி பதவி தகுதி நீக்கம் : துணை குடியரசுத் தலைவர் வெங்கய்ய நாயுடு உத்தரவு Posted on 06-Dec-2017 சரத் யாதவ், அலிஅன்வர் எம்பி பதவி  தகுதி நீக்கம் : துணை குடியரசுத் தலைவர் வெங்கய்ய நாயுடு உத்தரவு

புதுடெல்லி, டிச.6
கட்சி விரோத செயல்களில் ஈடுபட்டதாக ஐக்கிய ஜனதா தள கட்சி எம்.பி.க்களான சரத் யாதவ் மற்றும் அலி அன்வர் ஆகியோரை தகுதி நீக்கம் செய்து துணை குடியரசுத் தலைவரும், மாநிலங்களவைத் தலைவருமான வெங்கய்ய நாயுடு உத்தரவிட்டுள்ளார்.

பீகாரில் ஐக்கிய ஜனதா தள கட்சி கடந்த 2013-ம் ஆண்டு பாஜகவுடனான உறவைத் துண்டித்தது. நரேந்திர மோடியை பாஜக பிரதமர் வேட்பாளராக அறிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து ஐக்கிய ஜனதா தளம் கூட்டணியில் இருந்து விலகியது. 4 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஆகஸ்ட் மாதம் மீண்டும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியுடன் ஐக்கிய ஜனதா தளம் இணைந்தது.  இதற்கு ஐக்கிய ஜனதா தள கட்சியின் தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான சரத் யாதவ் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அலி அன்வர் எம்.பி. உள்ளிட்ட ஆதரவாளர்களுடன் அதிருப்தி அணியாக சரத் யாதவ் செயல்படத் தொடங்கினார்.

மத்திய பாஜக அரசையும், பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான அரசையும் கண்டித்து பாட்னாவில் எதிர்க்கட்சிகள் நடத்திய பேரணியில் சரத் யாதவ் கலந்துகொண்டார்.
இதையடுத்து ஐக்கிய ஜனதா தள எம்பியான சரத் யாதவ் மற்றும் அலி அன்வர் ஆகிய இருவரும், கட்சிக்கு எதிராக செயல்படுவதால் அவர்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் சார்பில் மாநிலங்களவைத் தலைவரும் துணை குடியரசுத் தலைவருமான வெங்கய்ய நாயுடுவிடம் புகார் அளிக்கப்பட்டது.

இதனிடையே நிதிஷ் குமார் தலைமையிலான அணியை, ஐக்கிய ஜனதா தள கட்சியாக தேர்தல் ஆணையம் சமீபத்தில் அங்கீகரித்து உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து, நிதிஷ் குமார் அணியினர் அளித்த புகாரை விசாரித்த வெங்கய்ய நாயுடு, ஐக்கிய ஜனதா தள கட்சியின் மூத்த தலைவர்களும், மாநிலங்களவை எம்.பி.க்களுமான சரத் யாதவ் மற்றும் அலி அன்வர் ஆகிய இருவரையும் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

மாநிலங்களவை எம்.பி.யாக கடந்த ஆண்டு தேர்வு செய்யப்பட்ட சரத் யாதவின் பதவிக்காலம் 2022-ம் ஆண்டு வரை உள்ளது. அலி அன்வரின் பதவிக்காலம் 2018ஆம் ஆண்டுடன் நிறைவு பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Label