OUR CLIENTS
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் : தேர்தலில் ஓட்டு மெஷினா? ஓட்டுச்சீட்டு முறையா? - குழப்பத்தில் தேர்தல் ஆணையம்..!
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் : தேர்தலில் ஓட்டு மெஷினா? ஓட்டுச்சீட்டு முறையா? - குழப்பத்தில் தேர்தல் ஆணையம்..! Posted on 06-Dec-2017 ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் : தேர்தலில் ஓட்டு மெஷினா?  ஓட்டுச்சீட்டு முறையா? - குழப்பத்தில் தேர்தல் ஆணையம்..!

சென்னை, டிச.6
ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் வேட்புமனுதாக்கல் நேற்று முன்தினம் முடிந்தது. நேற்று முன்தினம் மட்டும் 103 பேர் மனுதாக்கல் செய்தனர். 5 கட்சிகளின் வேட்பாளர்கள், தினகரன் உட்பட 136 சுயேச்சைகள் என மொத்தம் 141 வேட்பாளர்கள் மனு செய்துள்ளனர். இதனால் தேர்தலில் ஓட்டு மிஷினைப் பயன்படுத்த முடியுமா? அல்லது, பழைய பாணியில் ஓட்டுச்சீட்டு முறைக்கு மாற வேண்டியிருக்குமா? என கட்சிகளுக்கும் தேர்தல் கமிஷனுக்கும் கலக்கம் வந்துள்ளது.

முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் மறைவால், அவர் எம்எல்ஏவாக இருந்த சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு கடந்த ஏப்ரலில் இடைத்தேர்தல் நடப்பதாக இருந்தது. அப்போது அதிமுக அம்மா அணி வேட்பாளராகக் களமிறங்கியிருந்த சசிகலா அக்கா மகன் தினகரனின் பணப்பட்டுவாடா கோல்மாலால், இடைத்தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் டிசம்பர் 21ம் தேதி நடைபெறும் என தேர்தல் கமிஷன் அறிவித்தது. கடந்த நவம்பர் 27ம் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல், நேற்றுடன் முடிந்தது.  நவ.27ல் 4 சுயேச்சைகள், நவ.28ல் ஒரு சுயேச்சை, நவ.29ல் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கலைக்கோட்டு உதயம் மற்றும் ஒரு சுயேச்சை, நவ.30ல் 2 சுயேச்சைகள் மனு செய்தனர். டிசம்பர் 1ம் தேதியில் அதிமுக வேட்பாளர் மதுசூதனன், திமுக வேட்பாளர் மருதுகணேஷ் மற்றும் தினகரன் உட்பட 27 சுயேச்சைகள் மனு செய்தனர்.

கடைசி நாளான நேற்று முன்தினம், பாஜ வேட்பாளர் கரு.நாகராஜன், பகுஜன் சமாஜ் வேட்பாளர் சத்தியமூர்த்தி மற்றும் நடிகர் விஷால், ஜெ.தீபா உட்பட 101 சுயேச்சைகள் வேட்புமனு தாக்கல் செய்தனர். பாஜ வேட்பாளர் கரு.நாகராஜன் மதியம் 1 மணிக்கும், பகுஜன்சமாஜ் வேட்பாளர்  சத்தியமூர்த்தி மதியம் 1.30 மணிக்கும் வேட்புமனு தாக்கல் செய்தனர். 

தேர்தல் அலுவலகமான சென்னை தண்டையார் பேட்டை மண்டல அலுவலகம் முன்பு, காலை 8 மணி முதலே, வேட்பாளர் களின் ஆதரவாளர்கள், பொதுமக்கள் கூடத் தொடங்கினர். இதனால், பாதுகாப்புக்காக நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டனர். 

101 சுயேச்சைகள் குவிந்ததால், அவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு, வரிசைப்படி வேட்புமனு பெறப்பட்டது. வேட்புமனு தாக்கலுக்கான கடைசி நேரமான மதியம் 3 மணி வரை வந்தவர்களுக்கு மட்டுமே டோக்கன் வழங்கப்பட்டது. விஷாலுக்கு 68ம் எண் டோக்கனும், ஜெ.தீபாவுக்கு 94ம் எண் டோக்கனும் வழங்கப்பட்டது. இரவு 10 மணி வரை வேட்புமனுக்கள் பெறப்பட்டன.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட அதிமுக, திமுக, பாஜ, பகுஜன் சமாஜ், நாம் தமிழர் என கட்சி வேட் பாளர்கள் 5 பேர், தினகரன், விஷால், தீபா உட்பட 136 சுயேச் சைகள் என மொத்தம் 141 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

ஒரு தொகுதியில் அதிகபட்சமாக 63 வேட்பாளர்கள் வரை போட்டியிட்டால் மட்டுமே, ஓட்டுமிஷினைப் பயன்படுத்த முடியும். அதைவிட அதிகமானோர் போட்டியிட்டால், ஓட்டு சீட்டைத்தான் பயன்படுத்த வேண்டியிருக்கும்.

ஓட்டு சீட்டு முறையைப் பயன்படுத்தினால், முறைகேடு முயற்சிகளால் களேபர அபாயம் நடக்கவும், அதன் விளைவாக வெற்றி தோல்விகளில் எதிர்பாராத திருப்பங்கள் வரவும் வாய்ப்புகள் அதிகம். இதைத் தவிர்க்க, சுயேச்சைகளை ‘பல’ வகையிலும் ‘தாஜா’ செய்து வாபஸ் பெற வைப்பது வழக்கமாகி இருக்கிறது. இப்போது வேட்பாளர்கள் எண்ணிக்கை எகிறியிருப்பதால், தேர்தலை ஓட்டுமிஷின் மூலம் நடத்த முடியுமா? என்று கட்சிகளுக்கும் தேர்தல் கமிஷனுக்கும் கலக்கம் வந்துள்ளது.

தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி  அளித்த பேட்டியில், ‘‘ஆர்.கே.நகரில் சுயேச்சைகள் அதிக அளவில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். நேற்று டிச.5 வேட்புமனு பரிசீலனை நடந்தது. மனுக்களை வாபஸ் பெற நாளை (டிச.7) கடைசி நாள். அதன்பிறகே, மொத்தம் எத்தனை வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர் என்பதைத் தீர்மானிக்க முடியும். 

ஒரு பூத்தில் 4 ஓட்டுமிஷின்களை மட்டுமே பயன்படுத்த முடியும். அந்த மிஷின் களில் 63 வேட்பாளர்களுக்கு தலா ஒரு பொத் தான், நோட் டாவுக்கு ஒரு பொத்தான் ஒதுக்கப் படும். எனவே, இறுதி நிலவரத்தில் 63 வேட்பாளர்களைவிட அதிகமானோர் இருந்தால், ஓட்டுச்சீட்டு முறையைப் பயன்படுத்த வேண்டியிருக்கும். வேட்பாளர் எண்ணிக்கை இறுதி நிலவரம் தெரியவந்ததும், தலைமை தேர்தல் கமிஷனுக்குத் தகவல் அளிப்போம். இப்போது 125 வேட்பாளர்களை இணைக்கும் புதிய மிஷினும் அறிமுகமாகியிருக்கிறது. ஆர்.கே.நகரில் வேட்பாளர்களின் எண்ணிக்கை அடிப்படையில், தேர்தல் கமிஷன் முடிவுப்படி, ஓட்டுப்பதிவு முறை தீர்மானிக்கப்படும்’’ என்றார்.

கடந்த ஏப்ரலில் நடப்பதாக இருந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மொத்தம் 127 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். 45 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 82 மனுக்கள் ஏற்கப்பட்டன. 20 பேர் வாபஸ் பெற்றதால், இறுதியாக 62 வேட்பாளர்கள் மட்டுமே களத்தில் இருந்தனர். இதனால், ஓட்டுமிஷினைப் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது. இந்த முறையும், வேட்பாளர் எண்ணிக்கை அதுபோல் கணிசமாகக் குறையுமா? தேர்தல் எந்த முறையில் நடத்தப்படும் என்பது, வேட்பு மனு வாபஸ் கடைசி நாளான நாளை (டிசம்பர் 7ம் தேதி) தான் தெரியவரும்.

Label