OUR CLIENTS
தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவியிலிருந்து விஷால் பதவி விலக வலியுறுத்தல்
தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவியிலிருந்து விஷால் பதவி விலக வலியுறுத்தல் Posted on 11-Dec-2017 தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவியிலிருந்து விஷால் பதவி விலக வலியுறுத்தல்

சென்னை, டிச.11-
தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர் சங்கப் பொதுக்குழு கூட்டத்தில் ரகளை ஏற்பட்டு, டி.ராஜேந்தர், சேரன் உள்ளிட்டோர் வெளியேறிச் சென்ற நிலையில், கூட்டம் முழுமையாக நடைபெற்று முடிந்ததாக நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

நடிகர் விஷால் தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக பொறுப்பேற்ற பின்னர், முதல்முறையாக அச்சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று காலை 10.30 மணிக்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், 11.30 மணி வரை விஷால் உள்ளிட்ட நிர்வாகிகள் வராத நிலையில், தமிழ்த்தாய் வாழ்த்துடன் கூட்டம் தொடங்கியது. தயாரிப்பாளர் சங்கம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், ஓய்வுபெற்ற நீதியரசர் ராமநாதன் மேற்பார்வையில் கூட்டம் நடைபெற்றது. தலைவர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் வராமல் கூட்டம் தொடங்கியதற்கு நடிகர் மன்சூர் அலிகான் எதிர்ப்பு தெரிவித்ததால், கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

இதையடுத்து, சுமார் 12 மணியளவில் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால், துணைத் தலைவர் பிரகாஷ் ராஜ், எஸ்.ஆர்.பிரபு, ஞானவேல்ராஜா உள்ளிட்டோர் மேடைக்கு வந்தனர். அப்போது, ஆர்.கே.நகர் தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்த விஷாலுக்கு எதிர்ப்பு தெரிவித்த இயக்குநர் சேரன் உள்ளிட்டோர், தயாரிப்பாளர்களுக்கு என்ன செய்தீர்கள் என்றும் கேள்வி எழுப்பினர். தயாரிப்பாளர் சங்கத்தில் முறைகேடு நடந்துள்ளதாகவும், கணக்குகளை காண்பிக்க வேண்டும் என்றும் அவர்கள் முழக்கமிட்டனர். விஷால் தலைவர் பதவியிலிருந்து விலக வலியுறுத்தி, இயக்குநர் சேரன் தரப்பினர், மைக்குகள் உள்ளிட்டவற்றை பிடுங்கி ரகளையில் ஈடுபட்டனர். இதனால், விஷால் ஆதரவாளர்களுக்கும், சேரன் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.  ரகளை தொடர்ந்து நீடித்ததால், தேசிய கீதம் ஒலிக்கப்பட்டு, தயாரிப்பாளர் சங்கப் பொதுக்குழு கூட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. 

இதையடுத்து, மேடையில் இருந்து அவசர அவசரமாக விஷாலும், அவரது ஆதரவாளர்களும் வெளியேறினர். கூட்டம் பாதியிலேயே முடிந்ததால், மேற்பார்வையில் ஈடுபட்ட நீதியரசர் ராமநாதனும் கலைவாணர் அரங்கில் இருந்து புறப்பட்டுச் சென்றார். இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த இயக்குநர் சேரன், தயாரிப்பாளர் சங்க பொதுக்குழு கூட்டத்தை விஷால் பாதியிலேயே நிறுத்திவிட்டு, பயந்து ஓடிவிட்டதாக விமர்சித்தார். 

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த இயக்குநர் டி.ராஜேந்தர், தயாரிப்பாளர் சங்க சட்டதிட்ட விதிகளின்படி, விஷால் தரப்பினர் நடந்து கொள்ளவில்லை என குற்றஞ்சாட்டினார். ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிட முயற்சித்தது குறித்த கேள்விகளுக்கும் நடிகர் விஷால் முறையாக பதில் சொல்லவில்லை என்றும் டி.ராஜேந்தர் குற்றஞ்சாட்டினார்.  விஷாலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தயாரிப்பாளர்கள் அனைவரும் வெளியேறிய நிலையில், பிரகாஷ் ராஜ், எஸ்.ஆர்.பிரபு ஆகியோருடன் நடிகர் விஷால் ஆலோசனையில் ஈடுபட்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தன் மீதுள்ள காழ்ப்புணர்ச்சியால், மைக்கை பிடுங்கி சிலர் தன்னை அடிக்க வந்ததாக கூறினார். முறைகேடுகள் குறித்து ஆதாரத்துடன் வந்தால் பதில் சொல்வோம் என்று கூறிய நடிகர் விஷால், தயாரிப்பாளர் சங்க சட்ட விதிகளின்படியே நடந்து கொள்வதாகவும் விளக்கமளித்தார்.

Label