ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் போலீஸ் நடுநிலை தவறினால் கோர்ட்டில் முறையிடுவோம் தினகரன் அதிரடி பேட்டி Posted on 11-Dec-2017
சென்னை, டிச.11
ஆர்.கே.நகரில் காவல் துறையினர் நடுநிலையுடன் இல்லாவிட்டால் கோர்ட்டில் முறையிடுவோம் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
கொருக்குப்பேட்டையில் டி.டி.வி. தினகரன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:- ஆர்.கே.நகர் தொகுதியில் நாங்கள் தேர்தல் பிரசாரம் ஆரம்பித்த 2 நாட்களிலேயே தேர்தல் நிறுத்தப்படும் என்று பா.ஜனதா சொல்வதில் இருந்து அவர்களது வேட்பாளர் டெபாசிட் கூட வாங்க மாட்டார் என்பதை உணர்ந்து கொண்டோம். பா.ஜனதாவுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. அதன் காரணமாகவே தேர்தலை ரத்து செய்ய பா.ஜனதா கட்சியினர் கோருகிறார்கள்.
அவர்களால் விரும்பப் படாத நான் வெற்றிபெற்று விடுவேன் என்பதாலும் இவ்வாறு சொல்லி வருகிறார்கள். தயவு செய்து அவர்கள் மக்களின் மனநிலையை உணர்ந்து பேச வேண்டும். ஆர்.கே.நகர் தொகுதி மக்கள் அம்மாவின் அரசாங்கம் மீண்டும் வரவேண்டும் என்பதற்காக இந்த தேர்தலிலே குக்கர் சின்னத்தில் வாக்களிக்க தயாராகி விட்டார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும்.
தேர்தல் அதிகாரி பிரவீன் நாயர் நேர்மையான முறையில் தேர்தலை நடத்துவார் என்று நம்புகிறேன். ஆர்.கே.நகரில் காவல் துறையினர் நடுநிலையுடன் நடந்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் கோர்ட்டில் முறையிடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.