OUR CLIENTS
அரசு பள்ளி துப்புரவு பணியாளர்கள் சம்பளம் இல்லாமல் பரிதவிப்பு!
அரசு பள்ளி துப்புரவு பணியாளர்கள் சம்பளம் இல்லாமல் பரிதவிப்பு! Posted on 11-Dec-2017 அரசு பள்ளி துப்புரவு பணியாளர்கள் சம்பளம் இல்லாமல் பரிதவிப்பு!

திருவள்ளூர், டிச.11
அரசு பள்ளிகளில், துப்புரவு பணியாளர்களாக வேலை செய்யும் ஊழியர்களுக்கு, ஐந்து மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. இதனால், அரசு பள்ளிகளின் சுகாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.

திருத்தணி மற்றும் திருவாலங்காடு ஒன்றியத்தில், மொத்தம், 170 அரசு பள்ளிகள் இயங்குகின்றன. இப்பள்ளிகளில், கழிப்பறைகளை மட்டும் சுத்தம் செய்வதற்கு, பெற்றோர் - ஆசிரியர் கழக நிர்வாகிகளால், ஊழியர்கள் நியமனம் செய்யப்பட்டனர். ஒரு பள்ளிக்கு, ஓர் ஊழியர் வீதம், மொத்தம், 170 துப்புரவு பணியாளர்கள், பல ஆண்டுகளாக, தொகுப்பூதியத்தில் வேலை செய்கின்றனர். 

இவர்கள் பள்ளி வேலை நாட்களில், காலை மற்றும் மாலை வேளைகளில், கழிப்பறை மட்டும் சுத்தம் செய்ய வேண்டும். இவர்களுக்கு, ஒன்றிய நிர்வாகத்தின் மூலம், மாத ஊதியம் வழங்கப்படுகிறது. தொடக்கப் பள்ளிகளில் பணிபுரிவோருக்கு, மாதந்தோறும் வழங்கப்படும், 1,050 ரூபாயில், 300 ரூபாய்க்கு, கழிப்பறை சுத்தம் செய்ய பொருட்கள் வாங்கிக் கொள்ள 
வேண்டும். 

அதே போல், நடுநிலைப் பள்ளி ஊழியர்களுக்கு வழங்கப்படும், 1,500 ரூபாயில், 500 ரூபாய்; உயர்நிலைப் பள்ளி ஊழியர்கள், 2,250 ரூபாயில், 750 ரூபாய்; மேல்நிலைப் பள்ளி ஊழியர்கள், 3,000 ரூபாயில், 1,000 ரூபாயை தேவையான பொருட்கள் வாங்கவும் பயன்படுத்த வேண்டும். இந்த தொகை ஒன்றிய நிர்வாகம், அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர் அல்லது பெற்றோர்&ஆசிரியர் கழக கணக்கிற்கு, வங்கியின் மூலம் அனுப்பி வைக்கும். அவர்கள் அதை, துப்புரவு ஊழியர்களுக்கு வழங்க வேண்டும்.

 பெரும்பாலான பள்ளிகளில், மூன்று மாதங்களுக்கு ஒருமுறை தான்,  சம்பளம் வழங்கப்படுவதாக, ஊழியர்கள் கூறுகின்றனர். இந்நிலையில், ஐந்து மாதங்களாக, துப்புரவு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை. இதனால், துப்புரவு ஊழியர்கள் கழிப்பறையை சுத்தம் செய்வதற்கு தேவையான துடைப்பம், பிளிச்சிங் பவுடர் மற்றும் ஆசிட் போன்ற பொருட்கள் வாங்க முடியாமல் தவிக்கின்றனர். இது குறித்து, துப்புரவு ஊழியர்கள் கூறியதாவது: ஜூன் வரை மட்டுமே, எங்களுக்கு சம்பளம் வழங்கப்பட்டது. சம்பளம் வழங்கினால் தான், கழிப்பறை சுத்தம் செய்ய பொருட்களை, நாங்கள் வாங்க முடியும்.  ஐந்து மாதங்களாக சம்பளம் வழங்கப்படாததால், பொருட்கள் வாங்க முடியாமல் தவிக்கிறோம். எங்களுக்கு தெரிந்த கடைக்காரர்களிடம், இதுவரை, கடன் வாங்கி பொருட்கள் வாங்கினோம். ‘இனிமேல் தர முடியாது’ என, கடைக்காரர்கள் கூறுகின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஒன்றிய நிர்வாகம் மூலம் தான், எங்கள்  பள்ளி கணக்கிற்கு, துப்புரவு ஊழியர்களுக்கான சம்பள தொகை வரும். பணம் வந்தவுடன்,  துப்புரவு ஊழியர்களுக்கு வழங்குவோம். சில நேரங்களில் ஒன்றிய நிர்வாகம், மூன்று மாதங்களுக்கு ஒருமுறை தான், சம்பளம் அனுப்புகிறது. பள்ளியின் சுகாதாரம் பாதிக்கப்படாமல் இருக்க, அவர்களுக்கான சம்பளத்தை, மாதந்தோறும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூறுகின்றனர். மாவட்டத்தில் உள்ள, 14 ஒன்றியங்களில், இரண்டு, மூன்று ஒன்றியங்களை தவிர, மற்ற ஒன்றியங்களில், துப்புரவு பணியாளர்களுக்கு, கடந்த மாதம் வரை சம்பளம் வழங்கப்பட்டு உள்ளது. இந்த ஒன்றியங்களில், ஏன் சம்பளம் வழங்கப்படவில்லை எனக் கேட்டறிந்து, ஓரிரு நாளில், துப்புரவு பணியாளர்களுக்கு சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு திட்ட அலுவலர் திருவள்ளூர் -எஸ்.எஸ்.குமார் தெரிவித்துள்ளார்.

Label