OUR CLIENTS
சின்னத்துறையில் 3-வது நாளாக நீடிக்கும் மீனவர்கள் போராட்டம் : முதல்வர் வரும்வரை போராட்டம் தொடரும்
சின்னத்துறையில் 3-வது நாளாக நீடிக்கும் மீனவர்கள் போராட்டம் : முதல்வர் வரும்வரை போராட்டம் தொடரும் Posted on 12-Dec-2017 சின்னத்துறையில் 3-வது நாளாக நீடிக்கும் மீனவர்கள் போராட்டம் :  முதல்வர் வரும்வரை போராட்டம் தொடரும்

கன்னியாகுமரி, டிச.12
சின்னத்துறையில் மீனவர்கள் போராட்டம் 3-வது நாளாக நீடித்து வருகிறது. முதல்-அமைச்சர் வரும்வரை போராட்டம் தொடரும் என்று குமரி மீனவர்கள் கூறினர்.

ஓகி புயல் தாக்குதலில் குமரி மாவட்டத்தில் இருந்து ஆழ் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற பல மீனவர்கள் மாயமாகி விட்டனர். அவர்களை தேடி கண்டு பிடித்து மீட்கும் பணி நடந்து வருகிறது.   ஆனால் மீனவர்களை தேடும் பணியில் போதிய வேகமும், அக்கறையும் இல்லை என்று குமரி மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனால் சாலை மறியல், ரயில் மறியல் என்று தொடர் போராட்டங்கள் நடந்து வருகிறது.  இதற்கிடையில் சின்னத்துறையில் மீனவர்கள் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கி உள்ளனர். 

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் வந்து மீனவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை கேட்டு அறிய வேண்டும். அதுவரை காத்திருப்பு போராட்டம் நடைபெறும் என்று அவர்கள் அறிவித்துள்ளனர். நேற்று முன்தினம் போராட்டத்தில் நடிகர்கள் ஜி.வி.பிரகாஷ், ஆதி ஆகியோர் பங்கேற்று மீனவர்களுக்கு ஆதரவாக பேசினர்.  நேற்று  3-வது நாளாக அவர்களது போராட்டம் தொடர்கிறது. இந்த போராட்டத்திற்கு பல்வேறு மீனவ கிராமத்தைச் சேர்ந்த மக்களும் ஆதரவு தெரிவித்து உள்ளனர். மேலும் அவர்களும் இந்த போராட்டத்தில் பங்கேற்று வருகிறார்கள்.  இந்த போராட்டத்தில் பங்கேற்றவர்கள் மீனவர்கள் மீது அரசுக்கும் அதிகாரிகளுக்கும் அக்கறை இல்லை என்று குற்றம் சாட்டி ஆவேசமாக பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது. மீனவ கிராமத்தைச் சேர்ந்த சிலரை சந்தித்து பேசிய போது தங்கள் உள்ளத்தில் உள்ள குமுறல்களை வெளிப்படுத்தினார்கள்.

மாயமான குமரி மீனவர்களை மீட்க கப்பல் படை கப்பல்கள், விமானங்கள், ஹெலிகாப்டர்கள் தேடுதல் வேட் டையில் ஈடுபடுவதாக அதிகாரிகள் கூறுவது வெறும் கண்துடைப்பு நடவடிக்கையாகும். உண்மையான அக்கறையுடன் மீனவர்களை தேட வேண்டும். கேரளாவில் உள்ளூர் மீனவர்களை அழைத்துச் சென்று கப்பல்களில் தேடுகிறார்கள். இதனால் தேடும் பணி சுலபமாகிறது. அதே போல குமரி மீனவர்களையும் தேடுதல் பணியின் போது அழைத்துச் செல்லும்படி கூறினால் அதை அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. குமரி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பை விட அவர்களுக்கு ஆர்.கே. நகர் தொகுதிதான் முக்கியமாகி விட்டது. கேரள அரசு வழங்கியது போல ரூ.20 லட்சம் மீனவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். தற்போது மாயமான மீனவர்களின் ஆதார் கார்டு நகல்களை அதிகாரிகள் கேட்கிறார்கள். மீனவர்களின் அடையாள அட்டை நகலை கொடுத்தால் வாங்க மறுக்கிறார்கள். இது என்ன நியாயம். கேரள அரசு பின்பற்றும் நடைமுறைகளை தமிழக அரசும் பின்பற்ற தயங்குவது ஏன்?

தொழில் நுட்பம் எவ்வளவோ வளர்ந்து விட்டது. அப்படி இருக்கும் போது புயல் எச்சரிக்கையை பற்றி மீனவர்களுக்கு முன்கூட்டியே தகவல் சொல்வதில் ஏன் தாமதம் ஏற்படுகிறது. தொழில் நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப அரசு தன்னை தயார் படுத்திக் கொள்ளவில்லை? அது போன்ற நவீன வசதிகள் தன்னிடம் இல்லை என்று அரசு ஒத்துக்கொள்கிறதா?  அதிகாரிகளின் தேடுதல் வேட்டை தகவல்கள் எதுவும் நம்பும்படியாக இல்லை. எங்கே தேடுவது? எப்படி தேடுவது என்று கூட தெரியாமல் அவர்கள் தேடுதல் வேட்டையை நடத்துகிறார்கள். மீனவர்களை தங்களுடன் தேடுதல் வேட்டைக்கு அழைத்துச் செல்லும்படி கூறினால் அதை ஏற்க மறுக்கிறார்கள். மீனவர்களுக்கு ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும், தேசிய பேரிடராக குமரி மாட்டத்தை அறிவிக்க வேண்டும். 50 நாட்களுக்கு கடலில் தங்கி மீன் பிடிக்கும் மீனவர்கள் கூட இங்கு உள்ளனர். அவர்களுக்கு புயல் எச்சரிக்கையை தெரிவிக்க நவீன வசதிகளை அரசு மேம்படுத்திக் கொள்ள வேண்டும். முதலில் மீனவர்கள் மாயம் தொடர் பாக மீனவர்கள் கூறும் தகவல்களை அதிகாரிகள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

கடலில் தத்தளித்துக் கொண்டு இருக்கும் மீனவர்களை உடனடியாக பத்திரமாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாயமான மீனவர்கள் எண்ணிக்கை எவ்வளவு? என்பதை அதிகாரிகள் தெளிவாக கூற மறுக்கிறார்கள். அதற்கு காரணம் அவர்களிடம் சரியான விவரங்கள் இல்லை. நாங்கள் கொடுக்கும் தகவல்களையும் அவர்கள் நம்ப மறுக்கிறார்கள்.  அதிகாரிகள் தங்களிடம் உள்ள மாயமான மீனவர்களின் பெயர் விபரங்களை பட்டியலிட்டு கலெக்டர் அலுவலக அறிவிப்பு பலகையிலோ, மீன் வளத்துறை அறிவிப்பு பலகையிலோ ஒட்ட வேண்டும். அபபோது அதை யார் வேண்டுமானாலும் பார்த்து விபரத்தை அறிந்து கொள்ளலாம்.   இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Label