காணாமல் போன மீனவர்களை மீட்டுத்தரக்கோரி ஸ்டாலின் தலைமையில் இன்று போராட்டம்! Posted on 12-Dec-2017
சென்னை, டிச.12
காணாமல் போன மீனவர்களை மீட்டுத்தரக்கோரி ஸ்டாலின் தலைமையில் சென்னையில் இன்று போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஓகி புயலால் கன்னியாகுமரி மாவட்டத்தில் 600க்கும் மேற்பட்ட மீனவர்கள் காணாமல் போயுள்ளனர். அவர்களை மீட்டுத்தரக்கோரி கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களை மீட்க வலியுறுத்தி சென்னையில் ஆட்சியர் அலுவலகம் முன்பு திமுக சார்பில் இன்று போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
இதுதொடர்பாக ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில் கன்னியாகுமரி மாவட்டத்தை பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்க கோரி திமுக சார்பில் இன்று போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மீனவ குடும்பங்களுக்கு கூடுதல் நிதி, புயல் பாதிப்புகளை உடனடியாக சீரமைக்க கோரியும் போராட்டம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் 623 மீனவர்கள் காணாமல் போயுள்ளனர்.
ஆனால் மத்திய மாநில அரசுகள் மீனவர்களை மீட்பதில் மெத்தனம் காட்டி வருகின்றனர். மீனவர்களை பற்றி கவலைப்படாமல் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கொண்டாடுவதாகவும் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். தமிழகத்தில் ஆட்சி செய்யும் தகுதியையும் தார்மீக உரிமையையும் எடப்பாடி பழனிச்சாமி இழந்துவிட்டதாகவும் ஸ்டாலின் தெரிவித்தார்.